15 April 2018

தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியருக்கு அநீதி

பீடோங், ஏப்.15-

கெடா பீடோங் வட்டாரத்தில் உள்ள சுங்கை புந்தார் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியைக்கு பாலிங் மாவட்டத்தில் தொலைதூரத்தில் உள்ள கத்தும்பா தமிழ்ப்பள்ளிக்குத் திடீர் பணி  இட மாற்றம் செய்தது ஓர் அநீதி.

அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தொடர்ந்து சுங்கை புந்தார் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியக் குழு, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரும் பெரும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

இந்தத் தலைமையாசிரியரை அந்தப் பள்ளியிலேயே தக்க வைக்க கெடா மாநிலக் கல்வி இலாகாவின் உயர் அதிகாரிக்குப் பெற்றோர் ஆசிரியர் சங்கம், வாரியக் குழு, பள்ளியின் ஆசிரியர்களின் கையொப்பங்கள் அடங்கிய கடிதம் ஒப்படைத்து நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தியது. மாற்றத்திற்குக் காரணம் சொல்லாத நிலையில் மாநிலக் கல்வி இலாகா கைவிரித்து விட்டது.

எந்தப் பலனும் கிடைக்காதப் பட்சத்தில் பெ.ஆ.சங்கமும் பள்ளி வாரியக் குழுவும் தலைமையாசிரியருக்கு ஆதரவாகப் போர்க்கொடி தூக்கி உள்ளது என்று பெ.ஆ.சங்கத் தலைவர் திருமதி வளர்மதி நிருபரிடம் கூறினார்

இந்தத் தலைமையாசிரியர் 2016-ஆம் ஆண்டு பள்ளிக்கு வந்தது முதல் பள்ளி பல நிலைகளில் முன்னேற்றம் கண்டு வருகிறது. மாணவர் கல்விநிலை, விளையாட்டில் பங்கெடுப்பு, பள்ளித் தோற்றம் என்று சொல்லிக் கொண்டு போகலாம் என்று பெ.ஆ.ச. தலைவர் திருமதி வளர்மதி கூறினார்.

தலைமையாசிரியரோடு இணைந்து இன்னும் பள்ளி  வளர்ச்சிக்காக முடிக்க வேண்டிய பணிகள் இருப்பதாகவும் அந்தப் பணிகள் முடியும் வரையில் இந்தத் தலைமை ஆசிரியர் இந்தப் பள்ளியில் பணிபுரிய கல்வி அமைச்சு உத்தரவு பணிக்க வேண்டும் என்பதையும் வாரியக்குழுத் தலைவர் திரு.லோகநாதன் கேட்டுக் கொண்டார்.

இந்தத் தலைமை ஆசிரியரின் திடீர் தொலைதூரப் பணி இட மாற்றத்தில் ஏதோ 'சூழ்ச்சி' அடங்கி உள்ளது என்று இந்த வட்டாரத்தில் பரவலாகப் பேசப் படுகிறது.

இது இந்த மலேசிய நாட்டில் ஒரு தமிழ்ப் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி. மலேசியத் தமிழர்கள் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு உரிமை கேட்போம்

19 March 2018

நாக தோசங்கள்

அது ஒரு நல்ல அழகான கோயில். சுமாரான பெரிசு. கோயிலின் ஓர் ஒதுக்குப் புறத்தில் ஓர் அரச மரம். அந்த மரத்தின் அடிப்பாகம் எப்போதும் மஞ்சள் துணியால் சுற்றப்பட்டு இருக்கும். 
 
மரத்தைச் சுற்றி அழகாக ஒரு மண் மேடை. அந்த மேடையில் சின்ன பெரிய முட்டைகள். விரல் விட்டு எண்ண முடியாத பால் போத்தல்கள். அவ்வளவும் காலை அபிசேகத்திற்கு வந்த அர்ச்சனைப் பொருள்கள்.
ஒரு நாளைக்கு இரண்டு அபிசேகங்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு நாளைக்கு நானூறு முட்டைகள். அரை லிட்டர் பால் என்றால் ஒரு இருநூறு போத்தல்கள். பக்த கோடிகளின் பக்திப் பரவச நிலையின் ஆராதனைகள்.
தயவு செய்து திருப்பதியின் கோடான கோடிகளை இங்கே இழுத்துப் போட்டு கணக்குப் பார்க்க வேண்டாம். அப்புறம் உங்களுக்குத் தான் தலைவலி. மருந்து மாத்திரை தேட வேண்டி இருக்கும்.
 
சரி, எதற்காக இத்தனை முட்டைகள். எதற்காக இத்தனைப் பால் போத்தல்கள். அரச மரத்தில் குடியிருக்கும் நாக தெய்வத்திற்கு செய்யும் நெய்வேத்தியங்கள்.
அந்த நாகம்மாள் என்பது வேறு யாரும் இல்லை. ஒரு நாலடி நீளத்தில் ஒரு சின்னக் குட்டி நாகப் பாம்பு. அந்தப் பாம்பை இப்போதைக்கு யாரும் பார்த்தது இல்லை. பார்க்க முடியுமா என்பதும் தெரியவில்லை.
அந்தப் பாம்பு வெளியே வருவதும் இல்லை. நல்ல நாள், பெரிய நாள் பார்த்து வெளியே வந்து தரிசனம் செய்யுமா என்றால் அதுவும் இல்லை. மனசுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது. 
 
ஆனால் இருக்கிறது எனும் ஒரு பெரிய நம்பிக்கை மட்டும் இன்னும் இருக்கிறது.
கல்யாணமாகாத பெண்கள் அந்த அரச மரத்தைச் சுற்றி சுற்றி வருவார்கள். கீழே பால் முட்டை வைத்துச் சாமி கும்பிட்டால் சீக்கிரமாகக் கல்யாணம் நடக்கும் என்று ஓர் ஐதீகம். எந்தப் பெண்களுக்குக் கல்யாணம் நடந்தது என்று. தெரியவில்லை. மலேசியப் புள்ளிவிவர இலாகாவிடமும் புள்ளிவிவரங்கள் இல்லை.
இருந்தாலும் பாலும் முட்டையும் அங்கே ஒரு வாடிக்கை. நாகதோசம், கர்ப்ப தோசம், பிரேம தோசம் உள்ள பெண்களும் இந்தப் புனிதச் சடங்கில் ஐக்கியம். இதனால் ஜலதோசம் வந்து ஜன்னி பிடித்து தஞ்சோங் ரம்புத்தான் போனவர்களும் உண்டு. 
 
போன வருடம் இதைப் பற்றி எழுதப் போய் அடி வாங்கியது தான் மிச்சம். விடுங்கள். துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை. அந்த மாதிரி போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான்.
நம்பிக்கைதானே மனிதச் சாத்திரம். நன்றாகவே தெரிந்து வைத்து இருக்கும் அந்த நம்பிக்கையை நாம் குறைத்துச் சொல்லவில்லை. நம்பிக்கையின் அடிப்படையில் முட்டைகளையும் பாலையும் கொடுத்து தர்ம சாந்தி தாக சாந்தி செய்து வருகிறார்கள்.
இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு செய்யட்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை. விசயத்திற்கு வருகிறேன்.

1965-ஆம் ஆண்டுதான் ஆகக் கடைசியாக அந்த கருநாகத்தைப் பார்த்தார்களாம்.  மாதம் தேதி தெரியவில்லை. அந்த நாகம் ஒரு வாரம் வந்து போய்க் கொண்டு இருந்து இருக்கிறது. அதன் பிறகு அதை யாரும் பார்க்கவில்லை. அப்போது அது ஓர் அதிசய நிகழ்ச்சியாக இருந்தது.
அந்தச் சமயத்தில் அரச மரம் எதுவும் இல்லை. வேறு என்னவோ ஒரு மரம் இருந்து இருக்கிறது. அந்தக் கட்டத்தில், கோயில் இருந்த இடம், நகராண்மைக் கழகத்திற்குச் சாலை அமைக்கத் தேவைப்பட்டு இருக்கிறது. அதனால் 1971-ஆம் ஆண்டு வேறு இடத்திற்கு கோயிலை மாற்றிக் கொடுத்து இருக்கிறார்கள்.
புதிதாக வந்த இடத்தில் புதிதாக ஓர் அரச மரம் நடப்பட்டது. மஞ்சள் துணி கட்டப்பட்டது. சகல சடங்குகளும் செய்யப்பட்டன. அதில் இருந்து பால் அபிஷேகம் முட்டை அபிஷேகம் தொடர்ந்தன. 
 
இதில் ஒரு சிறப்புச் செய்தி  என்னவென்றால் பழைய கோயிலில் இருந்த பாம்பு மட்டும் புதிய கோயிலுக்கு வரவில்லை. இருந்தால் தானே வருவதற்கு! ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் புதிய கோயிலுக்கு பக்தர்கள் எல்லாம் வந்து 47 ஆண்டுகள் ஆகிவிட்டன.
பழைய கோயிலில் இருந்த நாகத்தைப் பார்த்தும் 47 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது அந்த நாகத்திற்கு வயது இருந்தால் எப்படியும் 50-ஐத் தாண்டி இருக்கும். ஒரு விசயம் தெரியுமா.
மனிதனுடைய சராசரி வயது 72 என்றால் ஒரு பாம்பின் சராசரி வயது 18 தான். அதற்கு மேல் ஒரு வருசமும் இல்லை. ஒன்பது வருசமும் இல்லை. நல்ல பாம்புகள் 20 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வதும் இல்லை. 


அடுத்து பாம்புகளுக்கு முட்டை சாப்பிடுவது என்றால் ரொம்பவும் பிடிக்கும். ஆனால் ஒன்று தெரியுமா. எந்தப் பாம்பும் எந்தப் பொருளையும் மனிதன் மாதிரி கடித்து மென்று அரைத்துச் சாப்பிடுவது இல்லை.
கோழி முட்டையாக இருந்தாலும் சரி; கோழிக் குஞ்சாக இருந்தாலும் சரி; அதை அப்படியே ஒரே லபக்! அம்புட்டுதான். உயிரோடு இருக்கிற பொருள்களைத் தான் பிடித்து விழுங்கும். செத்துப் போன எந்த ஒரு பொருளையும் பாம்பு சாப்பிடாது. ஆயிரம் பசியாக இருந்தாலும் தொட்டுகூட பார்க்காது. பத்து அடி தள்ளியே நிற்கும்.
அது மட்டும் இல்லை. மனிதன் மாதிரி மென்று சாப்பிட அதற்குப் பற்கள் அமையவில்லை. ரசித்து ருசித்துச் சாப்பிட நாக்கும் இல்லை. அவை ஆண்டவன் படைப்பின் ரகசியங்கள். 
 
அதன் வாய்ப் பகுதியில் நிமிடத்திற்கு நிமிடம் நீட்டி நீட்டிப் பார்ப்பது எல்லாம் அதன் மூக்கு. அதன் மூலமாக வெளியே இருக்கும் பொருள்களின் வாசனை, வாடையைத் தெரிந்து கொள்கிறது. இது மனுசன், அது மாடு, இது குதிரை, அது கோழி என்று தெரிந்து கொள்கிறது. அம்புட்டுத்தான்.
இதற்கு நேர் மாறானது முதலை. அது செத்துப் போன பொருள்களையும், அழுகிப் போன பொருள்களையும் மட்டும் தான் விழுங்கும். ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். முதலை, பாம்பு எல்லாம் உணவுப் பொருள்களைச் சாப்பிடுவது இல்லை. அப்படியே முழுசாக விழுங்கி விடும்.
இவற்றுக்கு எல்லாம் அப்பால்பட்ட ஓர் இனம் இருக்கிறது என்றால் அதுதான் மனித இனம். மன்னிக்கவும். இந்த இனம் இருக்கிறதே சும்மா சொல்லக் கூடாது, 
 
செத்துப் போனதையும் சாப்பிடும். செத்துப் போகாததையும் சாப்பிடும். செத்துக் கொண்டிருப்பதையும் சாகடித்துச் சாப்பிடும்.
அவை எல்லாம் நாளும் புளித்துப் போன சங்கதிகள். அந்த வகையில் நல்ல ஓர் ஒசத்தியான மனித இனத்தின் வழித்தோன்றல் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குப் பெருமையாக இருக்கிறது.
சரி. பாம்பு பால் குடிக்குமா? நல்ல ஒரு கேள்வி. இந்த உலகம் இருந்த வரையில் எந்தப் பாம்பும் தண்ணீர் குடித்தது இல்லை. பால் குடித்ததும் இல்லை. அப்படி ஒரு சரித்திரம் படைத்தச் சான்றுகள் எதுவும் இதுவரை கிடைத்ததும் இல்லை.
சில பாம்புகள் தண்ணீரிலே பிறந்து தண்ணீரிலேயே வாழும். தண்ணீரிலேயே செத்தும் போகும். ஆனால் தண்ணீரைக் குடிக்கவே குடிக்காது. பாம்புகளினால் தண்ணீரைக் குடிக்க முடியாது என்பதுதான் ஓர் அறிவியல் உண்மை.
 
ஆக தண்ணீரே குடிக்க முடியாத பாம்பு இனம், இந்த உலகம் இருக்கும் வரையில் பால் குடிக்கப் போவதும் இல்லை. அது மட்டும் உண்மை. தயவு செய்து இந்த உண்மையை மட்டும் மறந்துவிட வேண்டாம்.
பிள்ளையார்ச் சிலை பால் குடிக்கும் போது பாம்பு மட்டும் பால் குடிக்காதா என்று சிலர் கேட்கலாம். பிள்ளையார்ச் சிலை பால் குடிக்கும் விசயத்தில் இயற்பியலும் வேதியலும் இருக்கின்றன.
சிலைதான் பால் குடித்தது. பிள்ளையார் பால் குடிக்கவில்லை. ஆக இந்தப் பிள்ளையார்ச் சிலை பால் குடிப்பதைப் பற்றி பிறகு வேறு ஒரு கட்டுரையில் விரிவாக எழுதுகிறேன்.
பாம்புக்கு நாக்கு என்பதே இல்லை. சரி. தண்ணீர் குடிக்க முடியாத பாம்பு எப்படி ஐயா பால் குடிக்கும். சொல்லுங்கள். கொஞ்சம் ‘லோஜிக்’காக யோசித்துப் பாருங்கள். முடிந்தால் பாயாசம் கேட்கிறது.  தயிர்ச் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள ஊறுகாய் கேட்கிறது என்று சொன்னாலும் சொல்வார்கள்.
நடக்கக் கூடிய விசயம்தான். அதனால் ஊறுகாய் பாட்டில்களுக்குக் கிராக்கி ஏற்பட்டு ஊறுகாய் பாட்டில்கள் அடுக்கடுக்காய் வந்து குவியலாம். மறுநாள் அவையும் மறைந்து போகலாம்.
கேட்டால் சர்ப்பம் பாட்டில்களை விழுங்கி விட்டது என்று ஆவணப் படங்கள் தயாரிக்கப் படலாம். ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அதற்கு அப்புறம்  வேண்டாங்க சாமி… கை எடுத்துக் கும்பிடுகிறேன். ஆளை விடுங்கள்.
 
உயிரியல் கூற்றுப்படி நாக்கு இருக்கும் ஒரு ஜீவராசி மட்டுமே நீரைப் பருக முடியும். அப்படி இருக்கும் போது மில்லியன் மில்லியன் ஆண்டுகளாக நாக்கு இல்லாமல் பச்சைத் தண்ணியே குடிக்க முடியாமல் இருந்த பாம்பு இப்ப மட்டும் எப்படிங்க ஐயா, லிட்டர் லிட்டராகப் பால் குடிக்குது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இது உங்களுக்கு முரண்பாடாகத் தெரியவில்லை.
பாம்பு தனக்கு வேண்டிய நீர்த் தன்மையை அது விழுங்கும் உயிர்ப் பொருள்களில் இருந்து தன் உடலுக்குள் கிரகித்துக் கொள்கிறது. இதுதான் அறிவியல் சொல்லும் உண்மைகள்.
Having a narrow body and small head, and no limbs and chewing teeth, snakes have to swallow their prey whole. Snakes get water from the food they swallow. Food includes: small frogs, lizard, small birds, mice and rats.
சில வகையான பாம்புகளுக்கு அரை செண்டிமீட்டர் அகலத்திற்குச் சின்ன லேசான நாக்கு, வாயின் வெளிப்புற உதடுகளில் ஒட்டிக் கொண்டு இருக்கும். ஆனால் நாகப் பாம்புகளுக்கு அந்த மாதிரியான ஒட்டு நாக்குகள் இல்லவே இல்லை.
Snakes may drink through the tongue groove in the lip.
ஒரு நாளைக்கு ஒரு முட்டை அல்லது இரண்டு முட்டைகளை விழுங்கும் ஒரு பாம்பு அப்புறம் மூன்று நாளைக்கு ஒன்றுமே சாப்பிடாது என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்.
விழுங்கிய முட்டை செரிக்க வேண்டும். முட்டையின் ஓடு செரிக்க வேண்டும். அதற்காக அது எங்கேயாவது ஒரு சந்து பொந்தில் அமைதியாகப் படுத்தே கிடக்கும். ஏதாவது தொந்தரவு என்றால்தான் இடத்தை விட்டு நகரும்.
அப்புறம் எப்படி, வேண்டுதலுக்காக வைக்கப்படும் நூற்றுக் கணக்கான முட்டைகள் ஒரே நாளில் காணாமல் போகின்றன. அவ்வளவு முட்டைகளையுமா ஒரே ஒரு பாம்பு முழுங்கி விடுகிறது.
இல்லை என்றால் பக்கத்து காடு மலைகளில் இருக்கும் பாம்புகள் எல்லாம் படை எடுத்து வந்து அந்த முட்டைகளைச் சாப்பிட்டு விட்டுப் போகின்றனவா? சொல்லுங்கள்.
அப்படிச் சாப்பிட்டுவிட்டுப் போய் இருந்தாலும் பரவாயில்லைங்க. பல உயிர்களின் பசியைப் போக்கிய புண்ணியமாவது நமக்கு வந்து சேருமே. அதுவும் இல்லையே.
ஒரே ஒரு நாகம் ஒரே ஒரு நாளில் அத்தனை நூற்றுக் கணக்கான முட்டைகளையும் சாப்பிட்டு விட்டுப் போகிறது என்றால் நம்பிக்கை அடிபட்டுப் போகிறது. ஒரே ஒரு நாகம் ஒரே ஒரு நாளில் அத்தனை லிட்டர் பாலையும் குடித்துவிட்டுப் போகிறது என்றால் நம்பிக்கை துண்டு பட்டுப் போகிறது.
பரவாயில்லை. இனிமேல் யாராவது பாம்பு பால் குடிக்குமா என்று கேட்டால் குடிக்கும் என்று சொல்லுங்கள். எப்படி குடிக்கும் என்று கேட்டால் இந்தக் கதையைச் சொல்லுங்கள்.
நம்பவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். இருக்கவே இருக்கிறது பிள்ளையார் பால் குடித்த கதை. மனிதர் அடங்கி விடுவார். அதையும் மீறினால் ஒரே வழிதான்… விவேக் மாதிரி ‘எஸ்கேப்” ஆகி விடுங்கள்.

13 March 2018

தாமிரலிங்கா பேரரசு

இந்தோனேசியாவைப் பெரும் பெரும் இந்தியர் பேரரசுகள் ஆட்சி செய்து உள்ளன. ஸ்ரீ விஜய பேரரசு, மஜபாகித் பேரரசு, சைலேந்திரா பேரரசு, மத்தாரம் பேரசு, சிங்காசாரி பேரரசு. இப்படி நிறைய பேரரசுகள். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இவை இந்தோனேசியாவை ஆட்சி செய்து உள்ளன. 
 

இந்த இந்தியர் பேரரசுகள் ஆட்சி செய்வதற்கு முன்னரே தீபகற்ப மலேசியாவில் இன்னோர் இந்தியர் பேரரசும் ஆட்சி செய்து உள்ளது. அந்தப் பேரரசின் பெயர் தான் தாமிரலிங்கா எனும் தாம்பிரலிங்கா (Tambralinga) பேரரசு.

பொதுவாக தாமிரலிங்கா பேரரசு என்று சொல்வார்கள். கி.பி. 600-ஆம் ஆண்டுகளில் தீபகற்ப மலேசியாவின் வட பகுதிகளை இந்தத் தாமிரலிங்கா பேரரசு ஆட்சி செய்து இருக்கிறது.

தீபகற்ப மலேசியாவின் வட பகுதிகளைத் தவிர தாய்லாந்தின் தென் பகுதியையும் தாமிரலிங்கா பேரரசு ஆட்சி செய்து இருக்கிறது. அது மட்டும் அல்ல. ஆகக் கீழே துமாசிக் வரை அதன் ஆட்சி பரந்து விரிந்து இருக்கிறது. சிங்கப்பூரின் பழைய பெயர் தான் துமாசிக்.
 

சொல்லப் போனால் முக்கால்வாசி தென்கிழக்கு ஆசியாவையே அந்த தாமிரலிங்கா ஆட்சி செய்து இருக்கிறது. சில நூறாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி.

தாமிரலிங்கா பேரரசிற்குப் பின்னர் வந்தவை தான் இந்தோனேசியாவின் ஸ்ரீ விஜய பேரரசு, மஜபாகித் பேரரசு போன்ற பெரும் பேரரசுகள். ஆக தென்கிழக்கு ஆசியாவில் இந்திய ஆளுமைக்குப் பிள்ளையார் சுழி போட்ட ஓர் இந்திய அரசு இருந்தது என்றால் அது இந்தத் தாமிரலிங்கா பேரரசு தான்.

பூஜாங் சமவெளியை (Bujang Valley) இந்திய அரசர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். தெரிந்த விசயம். அங்கே இந்து சமயமும் புத்த சமயமும் சம காலத்தில் வளர்ச்சி கண்டு இருக்கின்றன. தெரிந்த விசயம்.
 

இந்தப் பூஜாங் சமவெளியில் முதன்முதலில் கால் பதித்தது தாமிரலிங்கா பேரரசாகத் தான் இருக்க முடியும். நான் சொல்லவில்லை. வரலாற்று ஆசிரியர்களின் ஒருமித்தக் கருத்தும் அப்படித் தான் இருக்கிறது. இதையே மலேசிய வரலாற்று ஆசிரியர் டத்தோ நடராஜாவும் உறுதி படுத்துகிறார்.

ஒரு காலக் கட்டத்தில் தாமிரலிங்கா பேரரசு வரலாற்றில் இருந்து காணாமல் போய் விட்டது. எப்படி என்று கேட்க வேண்டாம். வரலாற்றுப் பதிவுகளில் இருந்து அடிபட்டுப் போய் விட்டது.

தாமிரலிங்கா எனும் ஓர் அரசு இருந்ததாகப் பலருக்கும் தெரியாமல் போனது. ஆனால் அண்மைய காலத்தில் தான் தாமிரலிங்கா பேரரசைப் பற்றிய உண்மைகள் தெரிய வந்து உள்ளன. 
 

1368-ஆம் ஆண்டில் இருந்து 1644-ஆம் ஆண்டு வரை சீனாவை மிங் அரசர்கள் (Ming dynasty) ஆட்சி செய்தார்கள். இவர்களின் காலத்தில் தான் சீன வரலாறு ஓரளவிற்கு முழுமையாக எழுதப் பட்டது.

அப்படி எழுதப்பட்ட வரலாற்றில் தான் தென்கிழக்காசிய வரலாற்றுப் பதிவுகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. சூ கோசென் (Zhu Guozhen); ஹு இங்லின் (Hu Yinglin), இன் சிங் (Yǐn Qìng) போன்ற சீன வரலாற்று ஆசிரியர்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

அந்தப் பதிவுகளில் தாமிரலிங்காவைப் பற்றி அந்தச் சமயத்தில் அவர்கள் கேட்டதை; அவர்கள் பார்த்ததை எல்லாம் பதிவு செய்து இருக்கிறார்கள்.
 

(சான்று: http://link.library.canton.ma.us/portal/Coswells-guide-to-Tambralinga--a-novel-by/3iTEgdh6Ves/ - Coswell's guide to Tambralinga : a novel, by Scott Landers; Landers, Scott, 1952; New York, Farrar, Straus and Giroux, 2004)

இந்தத் தாமிரலிங்கா வரலாற்றுப் பார்வையில் ஒரு சிக்கலான இடத்தில் வந்து நிற்கிறோம். எப்படி புரிய வைக்கிறது என்று சற்றே தடுமாறுகின்றேன். இருந்தாலும் சமாளித்து விடுவோம். சரிங்களா.

முன்பு காலத்தில் அதாவது 10-ஆம் நூற்றாண்டில் நாகர ஸ்ரீ தர்மராஜா (Nagara Sri Dharmaraja) அரசு எனும் ஓர் அரசு தாய்லாந்தை ஆட்சி செய்து வந்து இருக்கிறது. எந்த ஆண்டு? பத்தாம் நூற்றாண்டு. சரிங்களா.

இந்த நாகர ஸ்ரீ தர்மராஜா அரசின் அப்போதைய அசல் பெயர் அதே நாகர ஸ்ரீ தர்மராஜா தான். ஆனால் அந்த அரசின் இப்போதைய பெயர் நாக்கோன் சி தாமராட் (Nakhon Si Thammarat). புரிந்து கொண்டீர்களா. 
 

பழைய பெயர் நாகர ஸ்ரீ தர்மராஜா. புதிய பெயர் நாக்கோன் சி தாமராட். இது ஒரு சயாமிய மொழிச் சொல்.

ஆக இப்போதைய தாய்லாந்து வரலாற்றில் நாகர ஸ்ரீ தர்மராஜா எனும் பழைய பெயர் இல்லை. நாக்கோன் சி தாமராட் எனும் புதுப் பெயர் தான் இருக்கிறது. அந்தப் பெயரில் தான் அழைக்கப் படுகிறது. தாய்லாந்து பள்ளிப் பாடப் புத்தகங்களிலும் சொல்லப் படுகிறது.

தாமரலிங்காவின் முக்கியமான அரசர்களில் ஒருவர் சந்திரபானு ஸ்ரீதர்மராஜா. அவருடைய பெயரில் இருந்த பேரரசின் பெயர் நாக்கோன் சி தாமராட் என்று மாற்றம் கண்டது. தாய்லாந்து மொழியில் தாமராட் என்றால் தாமரை.
 

(சான்று: http://link.library.canton.ma.us/portal/Coswells-guide-to-Tambralinga--a-novel-by/3iTEgdh6Ves/ - Coswell's guide to Tambralinga : Landers, Scott, 1952; New York, Farrar, Straus and Giroux, 2004)

மறுபடியும் கவனமாகக் கேளுங்கள். இந்த நாக்கோன் சி தாமராட் எனும் நாகர ஸ்ரீ தர்மராஜா இருக்கிறதே இந்த அரசின் முன்னைய பெயர் தான் தாமிரலிங்கா பேரரசு.

முதன்முதலாக தாமிரலிங்கா என்று அழைத்து இருக்கிறார்கள். அதன் பின்னர் நாகர ஸ்ரீ தர்மராஜா என்று அழைத்து இருக்கிறார்கள். அதன் பின்னர் நாக்கோன் சி தாமராட் என்று அழைத்து இருக்கிறார்கள். இப்போதும் அழைத்து வருகிறார்கள்.
 

ஆக இந்தத் தாமிரலிங்கா பேரரசு எனும் பெயர் தான் வரலாற்றில் இருந்து மறக்கப்பட்டு மறைந்து போன ஓர் இந்தியப் பெயர்.

தாமிரலிங்கா பேரரசை ஆட்சி செய்த அனைவருமே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலும் இலங்கையின் மீது போர் தொடுத்தவர்கள்.

தாமிரலிங்கப் பேரரசின் வரலாறு ஓர் உண்மையான வரலாறு. அந்த வரலாற்று உண்மையை தாய்லாந்து மக்களும் ஏற்றுக் கொள்ள்கிறார்கள். அந்த வகையில் தாய்லாந்து நாட்டு மக்கள் வரலாற்றை வரலாறாகப் பார்க்கின்றார்கள்.

இந்தப் பக்கம் இந்தோனேசியர்கள் எப்படி இந்தியர்ப் பேரரசுகளின் வரலாற்றைத் தங்களின் வரலாறாகப் போற்றிப் புகழ்கிறார்களோ அதே போலத் தான் தாய்லாந்து மக்களும் தாமிரலிங்கா பேரரசை வாயாரப் போற்றுகின்றார்கள்; புகழ்கின்றார்கள். 
 

ஆனால் என்ன. நாக்கோன் சி தாமராட் என்று பெயரை மாற்றிப் புகழ்கின்றார்கள். மற்ற இடங்களில் அப்படியா. வரலாற்றுச் சுவடுகளை அவிழ்த்துப் போட்டு அந்தச் சுவடுகள் வெட்கப்படும் அளவிற்குச் சிதைத்து விடுகிறார்கள். வேதனையாக இருக்கிறது.

பின்னர் காலத்தில் அதாவது 12-ஆம் நூற்றாண்டில் இந்தத் தாமிரலிங்கா பேரரசு தான் ஸ்ரீ விஜய பேரரசின் ஆளுமையின் கீழ் வந்தது. இந்தோனேசியாவை ஆட்சி செய்த ஸ்ரீ விஜய பேரரசைத் தான் சொல்கிறேன்.

அந்த வகையில் கூட்டிக் கழித்து வகுத்துப் பார்த்தால் பூஜாங் சமவெளியை இந்தத் தாமிரலிங்கா பேரரசு தான் ஆட்சி செய்து இருக்க வேண்டும். இந்தத் தாமிரலிங்கா பேரரசிற்குப் பின்னர் தான் பூஜாங் சமவெளியை ஸ்ரீ விஜய பேரரசு ஆட்சி செய்து இருக்கிறது.

மாறன் மகாவம்சன் எனும் பாண்டிய இளவரசனை விட்டு விடுவோம். ஏன் என்றால் இந்தத் தாமிரலிங்கா அரசு வருவதற்கு முன்னாலேயே ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே கடாரத்தில் கால் வைத்து விட்டுப் போய் விட்டார்.
 

கி.பி. 1025-ஆம் ஆண்டு ராஜேந்திர சோழன் என்பவர் கடாரத்திற்கு வந்தார். அந்தப் பச்சை மண்ணை மிதித்துத் துவைத்துக் காயப் போட்டு விட்டுப் போனாரே அந்தச் சமயத்தில் பூஜாங் சமவெளியின் ஆட்சி ஸ்ரீ விஜய பேரரசின் கீழ் இருந்தது. இந்தக் காலக் கட்டத்தைத் தான் இப்போது குறிப்பிடுகிறேன்.

அந்தப் பார்வையில் பார்க்கும் போது ஸ்ரீ விஜய பேரரசிற்கு முன்னர் தாமிரலிங்கப் பேரரசு தான் ஒரு கட்டத்தில் தீபகற்ப மலேசியாவின் வட பகுதியை ஆட்சி செய்து இருக்கிறது.

(சான்று Munoz, Paul Michel, Early kingdoms of the Indonesian archipelago and the Malay Peninsula. Singapore: Editions Didier Millet, 2006.)

சரி. இனி தாமிரலிங்கா வரலாற்றுச் சான்றுகளைப் பார்ப்போம்.

கி.பி.600-ஆம் ஆண்டுகளில் தாங் வம்சாவளியினர் (Tang dynasty) சீனாவை ஆட்சி செய்து வந்தார்கள். அவர்களின் ஆட்சிக் காலத்தில் அதாவது கி.பி.616-ஆம் ஆண்டு காவ் சூ (Emperor Gaozu) எனும் அரசர் சீனாவை ஆட்சி செய்து இருக்கிறார்.

இவர் ஆட்சி செய்யும் போது தாமிரலிங்கா அரசு சீனாவிற்குப் பாதுகாப்புக் காப்பீடு வழங்கி உள்ளது. சுருக்கமாகச் சொன்னால் கப்பம் கட்டி இருக்கிறது.

தாமிரலிங்கா என்றால் என்ன என்றும் சீனக் காலச் சுவடுகள் விளக்கம் கொடுத்து இருக்கின்றன. அவை தாங் (Tang dynasty) வம்சாவளிக் காலச்சுவடுகள்; மிங் (Ming dynasty) வம்சாவளிக் காலச் சுவடுகளில் காணப்படுகின்றன.

கி.பி.640; கி.பி.648;  கி.பி.818; கி.பி.860; கி.பி.873-ஆம் ஆண்டுகளில் தாமிரலிங்கா அரசர்கள் சீனாவிடம் கப்பம் கட்டி இருக்கிறார்கள். அந்தச் சுவடுகளின்படி தாமிரலிங்கம் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். தாமரை எனும் சொல்லும் லிங்கம் எனும் சொல்லும் இணைந்து வருவதைக் கவனியுங்கள்.
 

இந்தத் தாமிரலிங்கா அரசைத் தாம்பிரலிங்கா அர்சு என்றும் சொல்வார்கள். தாம்பிரம் என்றால் செம்பு. இது சிவப்பு நிறத்தையும் குறிக்கும். லிங்கா என்றால் இந்துக்களின் சின்னம். சிவபெருமானைக் குறிக்கும் ஒரு தெய்வீகத் தன்மை என்று அந்தச் சுவடுகள் சொல்கின்றன.   

(சான்று: Cœdès, George, The Indianized states of Southeast Asia. Canberra: Australian National University Press, 1975.)

(சான்று: http://www.ayutthaya-history.com/References.html - The late David K. Wyatt was the John Stambaugh Professor Emeritus of History at Cornell University until his retirement.)

தாமிரலிங்கா அரசு ஒரு காலக் கட்டத்தில் ஸ்ரீ விஜய பேரரசின் கீழ் இருந்து இருக்கிறது. ஸ்ரீ விஜய பேரரசைச் சீனர்கள் சான்போகி (Sanfoqi) என்று அழைத்து இருக்கிறார்கள்.

தாமிரலிங்கா அரசு தீபகற்ப மலாயாவின் மத்தியப் பகுதியை ஆட்சி செய்து வந்து இருக்கிறது. இந்தத் தீபகற்ப மலாயாவின் மத்தியப் பகுதி தான் இப்போதைய தென் தாய்லாந்து ஆகும்.

மலாயாவுக்கு வந்த இலங்கை வணிகர்கள் தாமிரலிங்காவைச் சாவகம் (Savaka) என்று அழைத்து இருக்கிறார்கள்.

அராபிய வணிகர்கள் சபாஜ் (Zabaj) என்றும் சபாக்கா (Zabaka) என்றும் அழைத்து இருக்கிறார்கள்.

தென்னிந்திய வணிகர்கள் தாமிரலிங்கம் (Tambralingam) என்றும் வட இந்திய வணிகர்கள் தாம்பிரலிங்கராத் (Tambralingarath) என்றும் அழைத்து இருக்கிறார்கள். பாரசீக மொழியில் ராத் என்றால் நாடு.

தாமிரலிங்காவின் தலைப்பட்டினம் எதுவாக இருந்து இருக்கும் என்பதைப் பற்றி இன்றும்கூட ஆய்வு செய்து வருகிறார்கள். கிரேக்க நாட்டு அறிஞர் குளோடியஸ் தாலமி (Claudius Ptolemy) பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இவர் ஒரு புவியியலாளர்; ஒரு வானியலாளர்; ஒரு சோதிடர்.

பல அறிவியல் நூல்களை எழுதியவர். அவர் எழுதிய நூல்களில் மிகவும் புகழ்பெற்றது வானியல் துறை சார்ந்த அல்மாகெஸ்ட் (Almagest) எனும் நூலாகும். அடுத்தது ஜியோகிரபியா (Geographia) எனும் புவியியல் தொடர்பான நூல். 
 

இந்த நூலில் தான் தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் படம் வரைந்து காட்டி இருக்கிறார். கி.பி.100-ஆம் ஆண்டுகளில் தென்கிழக்காசியாவில் தக்கோலா (Takola Emporium) எனும் ஒரு துறைமுகம் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கி இருக்கிறது.

இந்தத் துறைமுகம் கிரா குறுநிலத்தின் (Isthmus of Kra) மேற்குக் கரையில் இருந்தது என்று எழுதி இருக்கிறார்.

ஒரு செருகல். மலாயாவையும் தாய்லாந்து நாட்டையும் இந்தக் கிரா குறுநிலம் தான் இணைக்கிறது. சரி.

தாமிரலிங்கா அரசின் தலைப் பட்டணமாகத் தக்கோலா துறைமுகம் இருந்து இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருத்து கூறுகின்றனர்.

தக்கோலா துறைமுகத்தில் தென்னிந்தியாவின் கலிங்கத்தைச் சேர்ந்த தமிழர்கள் அதிகமாகக் குடியேறியதாகவும் அகழாய்வுச் சான்றுகள் கூறுகின்றன.

(சான்று: http://www.globalsecurity.org/military/world/malaysia/history-takola.htm - Judging from the only ancient inscription fromTakopa district the settlers from India are Dravidians from East coast of India where Tamil was spoken.)

ஆனாலும் அந்தத் தமிழர்கள் அங்கே ஓர் அரசாங்கத்தை உருவாக்கி இருக்க முடியாது என்பதே வரலாற்று ஆசிரியர்கள் பலரின் பொதுவான கருத்து. 
 

எது எப்படி இருந்தாலும் தாமிரலிங்கா எனும் ஓர் இந்தியர் அரசு மலாயா தீபகற்பத்திலும் தாய்லாந்து நாட்டிலும் கோலோச்சி இமயம் பார்த்து இருக்கிறது. பற்பல போர்க் கோலங்களில் உச்சம் பார்த்து இருக்கிறது.

இந்தப் பேரரசைப் பற்றிய கல்வெட்டுகள் அல்லது அகழ்வாய்வுகள் எதுவும் அதிகமாகக் கிடைக்கவில்லை. சீன வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தான் அப்படி ஓர் அரசு இருந்ததாக வரலாறும் சொல்கிறது.

பின்னர் காலத்தில் இந்தப் பேரரசை இமயவர்மன்; சூரியவர்மன் கெமர் அரசர்களும் ஆட்சி செய்து இருக்கிறார்கள்.

பூஜாங் சமவெளியில் மேலும் ஆழமான அகழாய்வுகள் செய்தால் தாமிரலிங்க அரசைப் பற்றிய ரகசியங்கள் வெளியே வரலாம். மலாயா வரலாற்றையே மலைக்க வைக்கும் ரகசியங்கள் மீட்கப் படலாம். ஆனால் அகழாய்வுகள் செய்ய விடுவார்களா.

பூஜாங் சமவெளியைப் பற்றி அக்குவேர் ஆணிவேராகப் பிட்டு பிட்டு வைத்த டத்தோ நடராஜன் அவர்களையே தடுமாற வைத்து விட்டார்கள். அப்புறம் என்னங்க. அவருக்குத் துணையாக நிற்கும் என்னுடைய கோத்தா கெலாங்கி வரலாற்றுப் போராட்டங்களும் அடிபட்டுப் போகின்றன. வேதனையாக இருக்கிறது.

மலேசியத் தமிழ் அறவாரிய அமைப்புகள் இப்படிப்பட்ட வரலாற்று ஆய்வுகளுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும். உதவி செய்வார்களா? இதுவும் ஒரு மில்லியன் டாலர் கேள்வி.

(இந்தக் கட்டுரையை வரலாற்றுச் சான்றுகளாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும் கட்டுரையைத் தயாரித்தவரின் காப்புரிமை (Credit) காட்சிப்படுத்த வேண்டும். காப்புரிமை விதிமுறைகளை மீறிப் போகாமல் கவனித்துக் கொள்ளுங்கள். நன்றி.)