சென்னைக்கு_எப்படி_பெயர்_வந்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சென்னைக்கு_எப்படி_பெயர்_வந்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 செப்டம்பர் 2009

சென்னைக்கு எப்படி பெயர் வந்தது


சென்னை மாநகரத்திற்கு சென்னை என்ற பெயர் எப்படி வந்தது. ஒரு வரலாறே இருக்கிறது. பலர் பலவிதமான கருத்துகளைச் சொல்கிறார்கள். ஆனால், வரலாறு என்ன சொல்கிறது. ஒரு நல்ல சுவையான வரலாற்றுக் கதை. தொடர்ந்து படியுங்கள்.


ஒருகாலத்தில் சென்னையைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகளில் செம்மை நிறம் கொண்ட மண்வெளி இருந்தது. அதனால் அந்தப் பகுதிக்கு செம்மை என்ற பெயர் வைக்கப்பட்டது. நாளடைவில் இந்தச் செம்மை என்ற சொல்  சென்னையாக மாறிப்போனது என்பது ஒரு கருத்து.

இன்னொரு விளக்கம். சென்னையில் 1631ல் ஆங்கிலேயர்கள்   செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டினார்கள். அதன் அருகாமையில் காளிகாம்பாள் கோயில் இருந்தது. மிகவும் பிரசித்தி பெற்ற கோயில். மராட்டிய மாவீரன் வீரர் சிவாஜிகூட இங்கே வந்திருக்கிறார். பிரார்த்தனை செய்திருக்கிறார். அதன் பிறகு சத்ரபதி பட்டத்தைச் சூட்டிக் கொண்டார்.


கருணை படைத்த காளிகாம்பாள்

செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மிக அருகிலேயே காளிகாம்பாள் கோயில் இருந்ததால் பக்தர்களுக்கு பல சிரமங்கள் ஏற்பட்டன. அதனால்  கோயிலைக் காலம் காலமாக வழிநடத்தும் விஸ்வகர்மாக்களை ஆங்கிலேயர்கள் அழைத்தனர். ‘தெய்வத்தை எங்கே வைத்து வழிபட விரும்புகிறீர்களோ அந்த இடத்தில் ஒரு கோயிலைக் கட்டிக் கொள்ளுங்கள். அதற்கு ஏற்ற வசதிகளை நாங்கள் செய்து தருகிறோம்’ என்றனர்.

அதன்படி தம்பு செட்டித் தெருவில் ஒரு புதிய கோயிலைக் கட்டினார்கள். ஏற்கனவே, கோட்டைப் பகுதிக்குள் கோயில் இருந்ததால் கோட்டையம்மன் என்ற பெயரும் அதற்கு உண்டு. இந்தக் காளிகாம்பாள் அம்மனுக்கு செந்தூரம் பூசி வழிபட்டார்கள்.


செந்தூரம் என்றால் இரத்தம். ஆக, இரத்தம் என்ன நிறம். சிவப்பு நிறம். அந்த சிவப்பு நிறத்திற்கு ஏற்றவாறு அம்மனை ‘சென்னம்மன்’ என்று அழைத்தார்கள். ‘சென்னம்மன்’ குடியிருக்கும் அந்த இடம் படிப்படியாக வளர்ச்சி கண்டது. நாளடைவில் சென்னம்மன் சென்னையாக மாறியது.  இப்படி ஒரு தரப்பினர் சொல்கின்றனர்.

சென்னம்மன் என்பதை செம் அன்னை என்றும் சிலர் அழைத்தனர். இந்தச் செம் அன்னை எனும்  சொல் தொடர் மாறி சென்னை எனும் சொல்லாக மாறியதாகவும் சிலர் சொல்கின்றனர்.

சென்னக் கேசவப் பெருமாள்


மற்றொரு விளக்கம். இதே இந்தச் சென்னைப் பகுதியில் சென்னக் கேசவப் பெருமாள் கோயில் எனும் பெயரில் ஒரு கோயில் இருந்தது. இப்போதும் இருக்கிறது. இந்தக் கோயில் நகரத்தின் முதன்முகப்பில் இருந்ததால், இக்கோயில் இருந்த நகரத்திற்கு சென்னை என்ற பெயர் வந்ததாகச் சிலர் சொல்கின்றனர்.


சென்னக் கேசவப் பெருமாள் என்பது சரியா இல்லை சின்னக் கேசவப் பெருமாள் என்பது சரியா. ‘சின்ன’ என்ற சொல் ‘சென்ன’ என்று மாறிப் போனதாகவும் செய்திகள் உள்ளன. சரியாகத் தெரியவில்லை.

மூன்று நான்கு  விதமான விளக்கங்களைப் பார்த்தோம். ஒன்று நிலத்தின் நிறத்தைக் கொண்டது. மற்ற இரண்டும்  தெய்வச் சன்னிதானங்களின் தொடர்பு கொண்டவை. சரி! வரலாறு என்ன சொல்கிறது. அதையும் நாம் கொஞ்சம் பார்க்க வேண்டும். ஏனென்றால், வரலாறு நடந்த கதையை உள்ளது உள்ளபடியாகச் சொல்லும்.

இனம், மொழி, கலாசாரம், சமயம் போன்றவற்றை எல்லாம் தாண்டி நிற்பது வரலாறு. இதை நாம் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். History என்ற சொல்லை உடைத்துப் பாருங்கள். His Story என்று வரும். His எனறால் அவன் அல்லது அவனுடைய என்று பொருள். அவன் என்றால் யார்.


இங்கே அவன் என்றால் மனிதன். Story என்றால் கதை. அவனுடைய கதை அல்லது மனிதனுடைய கதை. இந்த இடத்தில் மனிதனின் கதைதான் வரலாறு ஆகிறது. ஆக,  அப்படி இருக்கும் போது மனிதனின் கதையைச் சொல்லும் வரலாற்றை மாற்றித் திருத்தி விட முடியுமா. வரலாற்றை எப்படி மாற்ற முடியும். எதற்காக இதைச் சொல்கிறேன் என்று கேட்கலாம். வரலாற்றை மாற்றியமைக்கும் கலாசாரம் தீவிரம் அடைந்து வருவதால் ஏற்படும் மன உலைச்சல்.

வரலாற்றை மாற்றும் கலாசாரம்

அண்மைய காலங்களில் சில தென்கிழக்காசிய, பசிபிக் நாடுகளில் ஒரு பிரச்னை. அதாவது முடிந்து போன வரலாற்றை தங்களுக்குச் சாதகமான முறையில் திருத்தி எழுதும் கோமாளித்தனம். இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லிச் சொல்லிப் பாருங்கள். கடைசியில், இல்லாதது இருப்பதாக ஒரு மாயை புலப்படும்.


சரித்திரத்தை எப்படி வேண்டும் என்றாலும் மாற்றிக் கொள்ளலாம். கேட்டால் அந்தச் சட்டம் இந்தச் சட்டம் என்று ஏதாவது ஒரு சட்டத்தைத் தூக்கிப் போட்டு மாமியார் வீட்டுக்கும் அனுப்பலாம்.

உப்புக்கல்லை உன்னதமான வைரக்கல்லாக நினைத்தால் தப்பில்லை. ஆனால், உரசிப் பார்த்தால்தான் கதை. அப்பா அம்மாவை மாற்ற முடியுமா. முடியாது. ரிஷ’மூலத்தை மாற்ற முடியுமா. முடியாது. அவ்வளவுதான். ஆக, சரித்திரத்தைத் திருப்பி விடலாம் என்று நினைப்பது எல்லாம் நடக்கிற காரியம் இல்லை. சூடு சொரணை இல்லாமல் சரித்திரத்தின் ஆணி வேரையே பிடுங்கித் தொலத்துவிட்டுப் போகட்டும். விடுங்கள். நமக்குள் இருக்கட்டும். நம்முடைய சிங்காரச் சென்னைக் கதைக்கு வருவோம்.

தொண்டை மண்டலம்

சென்னைக்கு ஆரம்ப காலத்தில் மதராஸ் பட்டினம் என்று பெயர். தொண்டை மண்டலம் எனும் மாவட்டத்தில் இருந்தது. இதன்  தலைப்பட்டினமாக காஞ்சிபுரம் விளங்கியது. சோழ பரம்பரையைச் சேர்ந்த தொண்டைமான் இளம் திரையன் எனும் அரசன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்தான்.


தொண்டைமான் என்ற மூலப்பெயரில் இருந்துதான்   தொண்டை மண்டலம் எனும் பெயர் வந்தது.  அந்தக் காலக்கட்டத்தில் குரும்பர்கள் எனும் ஒரு வகை பூர்வீகக் குடிமக்கள் அந்தப் பகுதியில் நிறைய பேர் வாழ்ந்திருக்கிறார்கள்.

இளம் திரையனுக்குப் பிறகு இளங்கிள்ளி என்பவர் வந்தார். சில ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவர் ஆட்சி செய்யும் போது வடக்கே ஆந்திராவிலிருந்து சாதவாகன சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த புலுமாயி எனும் அரசன் காஞ்சிபுரத்தின் மேல் படையெடுத்தான். பயங்கரமான போர். சோழர்கள் தோற்றுப் போனார்கள்.


சோழர்களின் முதற்கால ஆட்சி அத்துடன் ஒரு முடிவுக்கு வந்தது. சாதவாகன அரசர்களின் சார்பில் காஞ்சிபுரத்தை நிர்வாகம் செய்ய பாப்பாசுவாமி என்பவர் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த பாப்பாசுவாமி தான் தமிழ்நாட்டின் முதல் பல்லவர். வரலாற்றில் சற்று ஆழமாகப் போய்ப் பார்ப்போம். சரிதானே!

பல்லவர் வந்தனர்

சாதவாகன சாம்ராஜ்யம் தென்னகத்தில் சன்னஞ் சன்னமாக வேரூன்றியது. காஞ்சிபுரத்தின் சுற்றுவட்டார இடங்கள் எல்லாம் அடித்துப் பிடித்து வளைக்கப்பட்டன. சாதவாகன சாம்ராஜ்யம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. திடீரென்று மேலே ஆந்திராவில் பிரச்னைகள் குழப்படிகள் ஏற்பட்டன. அது ஒரு பெரும் பிரச்னை. என்ன பிரச்னை என்று கேட்க வேண்டாம்.


இங்கே ஒன்றைச் சொல்ல வேண்டும். ஏனென்றால், இந்திய வரலாற்றை மட்டும் தனிப்பாடமாக எடுத்துப் படித்து முடிக்க எனக்கு ஐந்து ஆண்டுகள் பிடித்தன. ஒவ்வொரு பிரச்னையையும் விளக்க வேண்டுமென்றால் இன்னும் ஓர் ஐந்து ஆண்டுகள் பிடிக்கும். அதனால் சுருக்கி விடுவோமே.

ஆக, கி.பி.250ல் சாதவாகன ஆட்சி வீழ்ச்சியடைந்தது. சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் பல்லவர்களுக்குச் சாதகமாக அமைந்தன. அவர்களைத்  தட்டிக் கேட்க யாருமில்லை. அதனால் பல்லவர்கள் தனியாட்சி நிறுவிக் கொண்டனர்.


பல்லவர்கள் ஆட்சி இப்படித்தான் தென்னகத்திற்கு வந்தது. பல்லவர்கள் தமிழர் அல்லர். ஆந்திர நாட்டைச் சாதவாகன அரசர்கள் ஆண்ட பொழுது அவர்களின் பிரதிநிதிகளாகத்தான் பல்லவர்கள் தொண்டைமண்டலத்தை நிர்வாகம் செய்தனர்.

காஞ்சிபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு தமிழ்நாட்டின் வடபகுதி நிலங்களை  கி.பி. 4 முதல் கி.பி. 9ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி  செய்தனர்.

பல்லவர்கள் இனத்தால் வேறுபட்டிருக்கலாம். இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு நிறைய செய்திருக் கிறார்கள். அதை நாம் மறக்கக்கூடாது. பல்லவர்களின் ஆட்சிகாலத்தின் போது தமிழ்நாட்டில் இசை, நடனம், ஓவியம், சிற்பம் போன்ற கலைகள் ஓங்கி செழித்து வளர்ந்தன.

நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றி சைவத்தையும் வைணவத்தையும் வளர்த்தனர். இந்தப் பல்லவர்கள் குகைக் கோயில்களையும் குடைவரைக் கோயில்களையும் அமைத்தார்கள். புதிய புதிய சிற்ப முறைகளை உருவாக்கினார்கள்.

மாமல்லன் கட்டிய மாமல்லபுரம்

உலகப் புகழ்பெற்ற மாமல்லபுரம் நினைவிற்கு வருகிறதா! அந்த மாமல்லபுரக் கற்கோயிலைக் கட்டியவர் நரசிம்மவர்மன் எனும் பல்லவர்தான். கி.பி.603 லிருந்து கி.பி.668 வரை ஆட்சி செய்தவர். இவருக்கு மாமல்லன் எனும் மற்றொரு பெயரும் உண்டு.

மண்ணாசை பிடித்து படையெடுத்து வந்த சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை ஓட ஓட விரட்டிய மகராசன்தான் இந்தப் பல்லவ மன்னன். நாமக்கல்லில் ஒரு மலைக்குகையை அப்படியே குடைந்து கோயில் கட்டியவன் இந்த நரசிம்மவர்மன். உண்மையில், இவன் பேரைச் சொன்னாலே உடல் எல்லாம் புல்லரிக்கிறது.

காஞ்சிபுரத்தில் இருக்கும் கைலாச நாதர் கோயிலையும் வைகுண்டப் பெருமாள் கோயிலையும் பல்லவ மன்னர்கள்தான் கட்டினார்கள். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், திருமூலர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், காரைகால் அம்மையார், நந்தனார் போன்ற பெருமகான்கள் தோன்றிப் பிரகாசித்தது பல்லவர்கள் காலத்தில்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

img4பல்லவர்கள் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அதிகமாகப் பாடுபடவில்லை என்று தமிழறிஞர்கள் சிலர் குறைபடுகின்றனர். மொழி வளர்ச்சியைத்தான் சொல்கிறார்கள். இருந்தாலும் சமயம், கோயில்  தொண்டுகளுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்கள் இல்லையா. பல்லவர்கள் காலத்தில்தான் நந்திக்கலம்பகம், பாரத வெண்பா போன்ற இலக்கியங்கள் தோன்றின. இதைவிட வேறு என்ன வேண்டும்.

சிம்ம விஷ்ணுவின் சிம்ம சொப்பனம்

இவர்களுடைய ஆட்சியின் போது களப்பிரர் எனும் வெளிநாட்டினர் படையெடுத்து வந்தனர். தமிழ்நாடு முழுவதையும் கைபற்றி சுமார் 300 ஆண்டுகள் ஆண்டனர். இந்தியாவின் தென்பகுதியே இவர்கள் கையில் இருந்தது.  பயங்கரமான கெடுபிடி ஆட்சி.  கி.பி.575ல் சிம்மவிஷ்ணு என்பவர் வந்தார்.

களப்பிரரிடமிருந்து பல்லவ ஆட்சியை மீட்டுக் கொடுத்தார். அப்புறம் இருநூறு ஆண்டுகளுக்குப் பல்லவர்கள் ஆட்சி. கி.பி.879ஆம் ஆண்டு ஆதித்தியன் எனும் சோழ அரசன் வந்தான்.  பல்லவர்களைத் தோற்கடித்து சோழ சாம்ராஜ்யத்தை மறுபடியும் நிறுவினான்.

ஏறக்குறைய 400 ஆண்டுகள் சோழர்கள் தமிழ்நாட்டை ஆண்டார்கள். சோழர்கள் காலத்தில் இடைச் சங்ககால காப்பியங்கள் நிறையவே தோன்றின. திருமந்திரம், கலிங்கத்துப்பரணி, நள  வெண்பா, தண்டியலங்காரம், கம்பராமாயணம், பெரிய புராணம் போன்றவை உயிர்ப்பித்தது சோழர்கள் காலத்தில்.  இவை அனைத்தும் சங்ககால காப்பியங்கள்.

இராஜாராஜா சோழனின் இராஜக் கோயில்

img6தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியவர்கள் சோழர்கள்தான். பிரகதீஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படும் இக்கோயிலை 11ஆம் நூற்றாண்டில் இராஜாராஜா சோழன் கட்டினான். அடித்தளத்திலிருந்து தூபி வரை இரண்டே இரண்டு கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது. உலக சாதனைகளில் ஒன்று. இந்தச் சோழர்கள்தான் தீபகற்ப மலாயாவுக்கு வந்து கடாரத்தில் காலடி வைத்தவர்கள்.

அப்புறம் சோழர்களைத் தோற்கடித்து பாண்டியர்கள் வந்தார்கள். தமிழை வளர்த்தவர்களே பாண்டியர்கள். மூன்று சங்கங்களும் அவர்களுடைய பெயரைச் சொல்லும்.   பாண்டியர்களைத் தோற்கடித்து அல்லவுடின் கில்ஜி என்பவர் வந்தார்.

அல்லவுடின் கில்ஜியைத் தோற்கடித்து விஜயநகர அரசர்கள் வந்தார்கள். கி.பி.1361ல் நடந்தது. விஜயநகர அரசர்கள் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் வீழ்வது, ஒருவர் வாழ்வது. பழகிப் போன விஷயங்கள்.

இந்த விஜயநகர அரசர்களும் சாதவாகன அரசர்களைப் போல தங்களுடைய பிரதிநிதிகளை அனுப்பி வைத்து தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தனர். விஜயநகர அரசர்களின் பிரதிநிதிகளை நாயக்கர்கள் என்று அழைத்தனர்.

விஜயநகர அரசர்கள் நேரடியாக ஆட்சி செய்யவில்லை. ஏனென்றால், இவர்களுடைய மத்திய  ஆட்சிபீடம் மைசூரில் இருந்தது. நல்ல வேளையாக  மராட்டியர்கள் வரவில்லை என்று நிம்மதி பெருமூச்சு விடலாம் என்றால் முடியவில்லை.

வெள்ளையர்களும் வெங்கடபதி நாயக்கரும்

img3அவர்களும் வந்திருக்கிறார்கள். கி.பி.1600 ஆண்டு வாக்கில் மராட்டியர்கள் தஞ்சைப் பகுதியை ஆண்டிருக்கிறார்கள். சில காலம் ஆட்சி. மராட்டியர்களைப் பிரதிநிதித்து பட்டு மழவராய நாயக்கர் என்பவர் ஆட்சி செய்திருக்கிறார். அவருடைய பெயரால் பட்டுமழவராயன் கோட்டை என்று ஒரு நகரம் அழைக்கப்பட்டிருக்கிறது. அதன் பழைய  பெயர் வீரமாநகர்.

இந்த பட்டுமழவராயன் கோட்டைதான் காலப் போக்கில் பட்டுக்கோட்டையாக மாறியது. ஆக, பட்டுக்கோட்டைக்குப் போய் பட்டுமழவராயன் கோட்டை எங்கே இருக்கிறது என்று கேட்டுப் பாருங்கள். வேடிக்கையாக இருக்கும். ஏனென்றால் அங்கே இருப்பவர்களில் பலருக்கு பட்டுமழவராயன் கோட்டை எங்கே இருக்கிறது  என்பது தெரியாத உண்மை.

தென்னகத்தில் விஜயநகர சாம்ராஜ்யம் ஆட்சிக்கு வந்தது. அதன் முதல் அரசர் வெங்கட ராயுலு என்பவர் தொண்டை மண்டலத்திற்கு முதன்முதலாக அனுப்பி வைத்த நாயக்கரின் பெயர் வெங்கடபதி நாயக்கர்.  இவர் வேலூர் கோட்டையில் இருந்தவாறு நிர்வாகம் செய்தார்.

சென்னப்பன் நாயக்கர்

சரி! இந்தக் கட்டத்தில்தான் சென்னை நகரத்திற்கு சென்னை எனும் பெயர் கிடைத்தது. எப்படி. வெங்கடபதி நாயக்கர் 1639ல் சென்னையைச் சுற்றியுள்ள நிலத்தை ஆங்கிலேயர்களுக்கு பட்டா எழுதிக் கொடுத்தார். எக்மோர் ஆற்றுக்கும் கூவம் ஆற்றுக்கும் இடையில் இருந்த நிலம்தான் அவர் பட்டா எழுதிக் கொடுத்த நிலம்.

img9அப்படி அந்த நிலத்தை ஆங்கிலேயரிடம் கொடுக்கும் போது, தன்னுடைய தந்தையாரின் பெயரான சென்னப்பன் நாயக்கர் எனும் பெயரில் அந்த இடம் அழைக்கப்பட வேண்டும் என்று எழுதிக்  கொடுத்தார்.

வெங்கடபதி நாயக்கரின் தந்தையார் பெயர் சென்னப்பன் நாயக்கர். இந்தச் சென்னப்பன் எனும்  பெயரை வைத்து சென்னப்ப பட்டினம் என்று அந்த இடத்திற்கு பெயர் வந்தது. இந்தச் சென்னப்ப பட்டினம்தான் கடைசியில் சென்னப் பட்டினமாக மாறியது. அப்புறம் சென்னப்பட்டினம் சென்னையாக மாறியது. அந்தச் சமயத்தில்தான் சென்னைப் பட்டினத்திற்கு வடக்கே மதராஸ் பட்டினம் இருந்தது.

சிங்காரச் சென்னை

ஓர் இடைச் செருகல் வருகிறது. ஆற்காடு நவாப்புகள் மதராஸ் பட்டினத்தில் இருந்த மதராஸா எனும் சமயப் பள்ளிகளுக்கு பல தலைமுறைகளுக்கு காப்பாளர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். ஒழுக்க முறைகள் பேணப்படுவதற்காக நிறைய பொருள் உதவிகளையும் செய்திருக்கிறார்கள்.

மதராஸா என்றால் சமயப்பள்ளி. நல் பண்புகள், நல் ஒழுக்கங்கள், நல் நெறி முறைகள் போன்றவை இப்பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்பட்டன. அதனால் மதராஸா என்ற சொல்லிலிருந்துதான் மதராஸ் எனும் பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள்.

ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி கால் பதித்த சமயத்தில், மதராஸ் பட்டினம் வடக்கிலும் சென்னைப் பட்டினம் தெற்கிலும் இருந்தன. நாளடைவில் இரண்டும் ஒன்றாகி மதராஸ் என்று ஒரே நகரமானது. 1996ல் மதராஸ் அதிராப்பூர்வமாக சென்னை என்று புதுப்பொலிவு பெற்றது.

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு மாதம் 22ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப் படுகிறது. தமிழ்நாட்டின் தலைப்பட்டினம் சென்னை. இந்தியக் கண்டத்தின் நான்காவது பெரிய நகரம். உலகத்தில் 28வது இடத்தில் இருக்கிறது. ஆங்கிலேய ஆட்சியில் 368 ஆண்டுகள் பழமையான சரித்திரம் கொண்டது சிங்காரச் சென்னை.
சரி! சென்னைக்கு எப்படி பெயர் கிடைத்தது என்பது தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நமக்குத் தெரிந்த விவரங்களைச் சொல்லியிருக்கிறோம். தெரியாமல் பல செய்திகள் இருக்கலாம். இது தொடர்பான வேறு விதமான கருத்துகள் இருந்தால் சொல்லுங்கள். தெரிந்து கொள்வோம். வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில்தான் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறேன்.