19 ஜூலை 2017

போலி சாமியார்கள்

சாமியார்களை நம்புங்கள். ஆனால் கடவுளாக நினைக்க வேண்டாம்.

”கடவுள் இல்லை என்று சொல்கிறவனை நம்பலாம். கடவுள் உண்டு என்று சொல்கிறவனை நம்பலாம். ஆனால் நான்தான் கடவுள் என்று எவன் ஒருவன் சொல்கிறனோ அவனை நம்பவே கூடாது”. 

கமலஹாசன் சொன்ன ஒரு வசனம். 


கையை நீட்டச் சொல்லி நாலு வார்த்தையில் நம்பிக்கை வளர்த்த சாமியார்கள் எல்லாம் காணாமல் போகின்றார்கள். கிளியும் கையுமாகத் திரிந்த கிளிச் சாமியார்கள் எங்கே போனார்கள் என்றும் தெரியவில்லை.

அதையும் தாண்டி, சில நேர்மையான ஏழைச் சாமிகள் இருந்தார்கள். அவர்களும் ஆள் அட்ரஸ் இல்லாமல் போய் விட்டார்கள்.


ஆதி சங்கரர், அப்பைய தீட்சிதர், சட்டம்பி சுவாமிகள், இராமானுசர், ராகவேந்திர சுவாமிகள், ரமண மகரிஷி, பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், கண்ணையா யோகி, ஞானானந்தகிரி சுவாமிகள், யோகி ராம் சுரத் குமார், சித்பவானந்தர் போன்றவர்கள் தமிழகம் கண்ட சுத்தமான ஆன்மீகவாதிகள்.

அந்த ஆன்றோர்களின் பெயர்களைச் சொல்லி வந்தவர்கள்தான் இந்த ரஜ்னீஷ், பிரேமானந்தா, சந்திராசாமி, ராமன்ஸ்வாமிஜி, சதுர்வேதி, காமந்தக சாமியார், நித்தியானந்தா, ஈசா போன்ற சாமியார்கள்.



சாமியார்களை நம்புங்கள். ஆனால், அவர்களைக் கடவுளாக நினைக்க வேண்டாம். கடவுளாக நினைத்து அவர்களின் கால்களில் விழ வேண்டாம். 

தயவு செய்து அப்பா அம்மா காலில் விழுங்கள். அது கடவுள் காலில் விழுந்ததற்குச் சமம். உங்களுக்கு ஏழேழு ஜென்மங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்.

மூட நம்பிக்கை - முதுகில் மிதித்தல்

விரதம் இருந்து சாமி வேடம் போட்டு... பக்தர்களின் முதுகில் நடந்து வந்தால் அது பெரும் பாக்கியம். 



இது தமிழ்நாட்டு மேல்மலையனூரில் சிறப்பு. அவர்களின் பாதம் நம் மீது பட்டால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் போய்விடுமாம்... நல்ல ஒரு நம்பிக்கை... 


போங்க போங்க... போய் செஞ்ச பாவங்களை எல்லாம் தீர்த்துட்டு வாங்க... 



சொறி பிடித்த கால்களால் நல்லா மிதிபட்டு வாங்க... உங்க சாமி நம்பிக்கையில் ஒரு வரம்பு வேண்டாமா...

18 ஜூலை 2017

எம்.ஜி.ஆர் - பிரபாகரன் 1

செத்தும் கொடுத்தார் சீதக்காதி
செத்துக் கொண்டு இருந்ம் கொடுத்தார் எம்.ஜி.ஆர்


மரணத்தின் விளிம்பில் சயனித்த போதும் மனிதநேயத்தை அவர் மறுக்கவில்லை.  மரணத்தை அணைத்துக் கொண்ட போதும் அவர் தமிழ் ஈழ மக்களை மறக்கவில்லை.

தமிழ் ஈழ மக்களின் விடுதலைக்காகக் கடைசி வரை நின்று போராடியவர். தனி ஈழம் மலர்ந்தால் மட்டுமே ஈழத்துச் சோகம் நீங்கும் என்று அசை போட்டு அசை போட்டு வாழ்ந்த ஒரு நல்ல மனிதர். அவர் தான் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் கடைசி மூச்சு நிற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கூட தன் சேமிப்பில் இருந்து பல கோடி ரூபாய் பணத்தை ஈழத் தமிழர்களுக்குக் கொடுக்க ஆசைப் பட்டார். பிரபாகரனை வரச் சொல்லி ஆளையும் அனுப்பி வைத்தார்.

அந்தச் சமயத்தில் எம்.ஜி.ஆரால் அதிகம் பேச முடியவில்லை. மூச்சுத் திணறல். மருந்து கொடுத்து இருக்கிறார்கள். மயக்கமான நிலை. இருந்தாலும் கடைசி நிமிடம் வரை ஈழத் தமிழர்களை அவர் மறக்கவில்லை. எப்படியாவது அவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார்.



எம்.ஜி.ஆர். உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கும் நேரத்தில் பிரபாகரன் போர் முனையில் இருந்தார். எம்.ஜி.ஆர். அழைத்தும் போக முடியவில்லை. பிரபாகரன் சார்பில் அவரின் தளபதிகளில் ஒருவர் போய் இருக்கிறார். அந்தத் தளபதி தான் வழக்கமாக எம்.ஜி.ஆரைப் பார்த்து உதவித் தொகையைப் பெற்று வருபவர்.

அந்தச் சமயத்தில் அந்தத் தளபதிகூட கூப்பிடும் தூரத்தில் இல்லை. அவரும் வேறு ஒரு போர்முனையில் இருந்து இருக்கிறார். அதனால் எம்.ஜி.ஆருக்குப் பழக்கம் இல்லாத வேறொரு புதிய ஆளை அனுப்பி இருக்கிறார்கள்.

புதிதாக வந்த மனிதரிடம் பணம் கொடுக்க எம்.ஜி.ஆருக்கு விருப்பம் இல்லை. கொடுக்கப் போவது பெரிய தொகை.

“எப்போதும் வாங்கிச் செல்வாரே… அவரையே அனுப்பி வையுங்கள்” என்று எம்.ஜி.ஆர். சொல்லி இருக்கிறார். கடைசியில் அந்தப் பழைய ஆளைத் தேடிப் பிடித்து சென்னைக்கு அனுப்பி வைத் இருக்கிறார்கள். அவர் வந்து சேர்வதற்குள் காலதேவன் எம்.ஜி.ஆரைக் கொண்டு சென்று விட்டான். 



இருந்தாலும் எம்.ஜி.ஆரின் உதவியாளர் மூலமாக பணம் ஈழத்து மக்களுக்குப் போய்ச் சேர்ந்து இருக்கிறது. மொத்தம் 21 கோடி ரூபாய். அந்தக் காலத்துப் பணம். 1985ஆம் ஆண்டில் எவ்வளவாக இருக்கும். நீங்களே ஒரு கணக்குப் போட்டுப் பாருங்கள்.

இந்தப் பணத்தைக் கொண்டு தான் தமிழ் ஈழத்தில் 18 முதியோர் காப்பகங்கள், நான்கு மருத்துவமனைகளைக் கட்டி இருக்கிறார்கள். மேலும் இரண்டு சின்ன கப்பல்களையும் வாங்கி இருக்கிறார்கள்.

இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும். இது மட்டும் இல்லை. இன்னும் இருக்கிறது. தொடர்ந்து படியுங்கள்.

எம்.ஜி.ஆர். ஒரு சாமான்யராகப் பிறந்தார். மூன்றாம் வகுப்பு வரை தான் படித்தார். ஒரு மேடைக் கலைஞராக வளர்ந்தார். உலக நடிகராக உயர்ந்தார். உண்மை தான். இருந்தாலும் ஒரு நடிகர் என்பதைத் தாண்டிய நிலையில் ஒரு மனிதநேய மாந்தராக மறைந்து போனார் என்பது தான் உண்மையிலும் பெரிய உண்மை. 


அரசியலையும் விட்டு விடுங்கள். ஆயிரத்தில் ஒருவன் சினிமாவையும் விட்டு விடுங்கள். இந்த இரண்டையும் இங்கே சேர்க்க வேண்டாம். தமிழ் மக்களுக்கு அவர் செய்த நல்லவற்றை பார்ப்போம். அவற்ரை மனிதத் தன்மையுடன் பார்ப்போம். ஈழத் தமிழ் மக்கள் மீது வற்றாத வாஞ்சை காட்டிய பொன்மனச் செம்மலாக வாழ்ந்தாரே அந்த மனிதர் அது எப்படி என்றும் பார்ப்போம். சரிங்களா.

எம்.ஜி.ஆர். பிறப்பால் ஒரு தமிழர் அல்ல. இருந்தாலும் ஒரு தமிழராய்ப் பிறக்காமலேயே ஒரு தமிழராக வாழ்ந்து காட்டி இருக்கிறாரே; உலகத் தமிழர்களின் சரித்திரத்தில் சாதனைகள் செய்து காட்டி இருக்கிறாரே; வேறு என்னங்க வேண்டும். சொல்லுங்கள்.

அது தானே மிகப் பெரிய விசயம். இன்றைக்கு அவரைப் பற்றிப் பேசுகிறோம் என்றால் அதற்கு அவர் செய்த நல்ல காரியங்கள் தானே நமக்கு முன்னால் வந்து நிற்கின்றன. அந்த நல்ல காரியங்கள் தானே அவரை முன் நிறுத்தி அடையாளப் படுத்துகின்றன.

எம்.ஜி.ஆரை ஒரு மலையாளி என்று சொல்கிறார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும். ஒரு தமிழன் செய்யாததை எம்.ஜி.ஆர். செய்து விட்டுப் போய் இருக்கிறாரே. அதைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள். சொல்லுங்கள். எம்.ஜி.ஆர். ஒரு மலையாளியாகவா வாழ்ந்தார். இல்லீங்க. ஒரு தமிழராக வாழ்ந்தார். ஒரு தமிழராக வாழவில்லை. ஒரு தமிழராக வாழ்ந்து காட்டினார்.

என்னய்யா தமிழன்; என்னய்யா மலையாளி; எல்லாருமே ஒரே தாய்மடி உறவுகள் தான்யா. ஒரே இரத்தத்தில் ஊறிய மட்டைகள் தான்யா. சில ஆளவந்தான்களும் சில சோளவந்தான்களும் செய்த குசும்புகள் குறும்புகள். அதனால் தமிழ்நாட்டு அரசியலில் அடுக்கடுக்கான குளறுபடிகள். 



எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு தமிழகத்தை ஆள் வந்த ஆளவந்தான்கள் எல்லாரும் சேர்ந்து பிரபாகரனை அம்போ என்று கழற்றி விட்டார்களே. ஒட்டு மொத்த ஈழ மக்களையும் காவுக் குழிக்குள் இறக்கி விட்டார்களே. அதைப் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள். அதுதான் இப்போது மனசுக்குள் ரணவேதனையாக இருக்கிறது.

இந்த நேரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றியும் சொல்ல வேண்டி இருக்கிறது. அவர் நடித்த ஒரு படத்தின் ஊதியத்தை அப்படியே தமிழ் ஈழ மக்களுக்குக் கொடுத்து இருக்கிறார். 14 இல்ட்சம் என்று நினைகிறேன்.

தமிழ் ஈழ மக்களுக்குத் தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளர்களையும் உதவிகள் செய்யச் சொல்லி சிவாஜி கணேசன் வற்புறுத்தி இருக்கிறார்.

தமிழ் ஈழ மக்களுக்கு சிவாஜியின் படம் என்றால் உயிர். அவர் நடித்த வசந்த மாளிகை திரைப்படம் யாழ்ப்பாணத்தில் ஒரே தியேட்டரில் மட்டும் ஒரு வருடம் ஓடி இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு சின்னக் கேள்வி. தமிழ்நாட்டின் தமிழ்த் தலைவர்களில் எத்தனைப் பேர் எம்.ஜி.ஆரைப் போல ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்து இருக்கிறார்கள். சொல்லுங்கள். விரல்விட்டு எண்ணி விடலாம். 



தொடக்கத்தில் நம்ப தமிழ்க் கலைஞர் உதவிகள் செய்தார். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அவற்றில் சொந்த நலன்கள் கொஞ்சமாய் கலந்து மறைந்து நின்றன. சான்றுகள் இருக்கின்றன. எம்.ஜி.ஆரைப் போல சுயநலம்  கலக்காத உதவிகள் அல்ல.  மன்னிக்கவும். உண்மையைச் சொல்கிறேன்.

ஒரு சில கட்டங்களில் எம்.ஜி.ஆர். ஒரு சர்வாதிகாரியைப் போல நடந்து கொண்டு இருக்கிறார். இல்லை என்று சொல்லவில்லை. தன்னைச் சீண்டிப் பார்த்த சினிமாக்காரர்களைத் தீண்டிப் பார்த்து இருக்கிறார். தன்னை நோண்டிப் பார்த்த அரசியல் சித்துகளைத் தாண்டிப் போய் இருக்கிறார்.. உண்மைதாங்க.

ஆக இது எல்லாம் அரசியல் சினிமாவில்  சகஜமுங்க என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியது தான். ஆனால் இங்கே நாம் எம்.ஜி.ஆரின் மனித நேயத்தைத் தான் பார்க்கின்றோம்.

எம்.ஜி.ஆருக்குப் பிள்ளைகள் இல்லை. அதனால் பிரபாகரனைத் தன் மகனாக நினைத்தார். பழகினார். தான் ஒரு முதலமைச்சர் எனும் பார்வையில்  பார்க்கவில்லை. ஒரு தகப்பன் நிலையில் நின்று ஒரு மகனாகத் தான் பிரபாகரனைப் பார்த்துப் பழகி இருக்கிறார். 



ஆக பிரபாகரனுக்குப் பண உதவிகள் செய்தார் என்றால் அதைத் தனிப்பட்ட வகையில் பார்க்க வேண்டும். ஒரு மகனுக்கு ஒரு தகப்பன் செய்யும் உதவியாகவே நினைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கட்டத்தில் உமா மகேஸ்வரன், சபாரத்தினம் போன்ற மற்ற மற்றப் போட்டித் தலைவர்களின் பக்கம் கலைஞரின் பார்வை திரும்பியது.

பிரபாகரன் சென்னைக்கு வரும் போது எல்லாம் எம்.ஜி.ஆரைச் சந்திப்பார். ஆனால் கலைஞரைச் சந்திப்பது இல்லை. ஒரே ஒரு முறைதான் சந்தித்துப் பேசி இருக்கிறார்.

அதனால் கலைஞருக்குப் பிரபாகரன் மீது வருத்தம். இரண்டு பேருக்கும் இடையே லேசான விரிசல். கலைஞரிடம் நல்ல நோக்கம் இருந்து இருக்கிறது.

தமிழ் ஈழ் மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருந்து இருக்கிறது. இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் கலைஞருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே தொக்கித் தொங்கி நின்ற அரசியல் பிணக்குகள் தான் விரிசலுக்குப் பெரிய காரணமாக அமைந்து விட்டன. அந்த விரிசலில் பிரபாகரன் ஒரு சொக்கட்டான் காயாக மாறிப் போனது தான் வேதனையான விசயம்.




ஆக கலைஞர் தன் பிணக்கு விரிசல் ஆதங்கத்தை வெளிப்படுத்த திராவிடக் கழகத் தோழர்களிடம் நன்கொடைகளைத் திரட்டினார். திரட்டிய தொகையை அப்படியே கொண்டு போய் உமா மகேஸ்வரன், சபாரத்தினம், பாலக்குமார் போன்ற போட்டித் தலைவர்களிடம் கொடுத்து இருக்கிறார்.

எவ்வளவு தொகை என்று தெரியவில்லை. ஆனாலும் 60 இலட்சம் ரூபாய் என்று நம்பகரமான வட்டாரங்கள் சொல்கின்றன. அந்தக் கட்டத்தில் எம்.ஜி.ஆர். இரண்டு கோடி ரூபாயைப் பிரபாகரனுக்குக் கொடுத்து இருக்கிறார்.
(சான்று: http://tamilveangai.blogspot.my/2013/01/blog-post_6935.html)

சரி. அடுத்து தமிழகத்தின் மற்ற மற்றத் தலைவர்கள் ஈழ விடுதலைக்கு தொடர்ந்து உதவிகள் செய்தார்களா. இல்லை என்றுதான் பதில் வருகிறது.

ஏன் என்றால் போட்டிக் குழுத் தலைவர்கள் தமிழகத்தின் தலைவர்களைத் தேடி வரவில்லை. அந்தத் தலைவர்களும் சரியான ஆளாகப் பார்த்து அனுப்பி வைக்கவில்லை. 



ஆனால் ஒன்று மட்டும் உண்மை. ஈழ விடுதலைக் குழுக்களுக்கு இடையே பிரிவு பிளவுத் தன்மை ஏற்படுவதற்குத் தமிழகத் தலைவர்களின் போட்டி மனப்பான்மையே முக்கியக் காரணமாக இருந்து இருக்கிறது. இதை யாரும் மறுக்க முடியாது. இது உலகத் தமிழர்கள் அனைவரும் கவலைப்பட வேண்டிய ஒரு விசயம்.

ஆக யாழ்ப்பாணப் போராளிக் குழுக்களுக்குள் போட்டிப் பூசல்கள் வளர்ந்து விரிந்து போனதற்குத் தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் தான் மூல காரணமாக இருந்து இருக்கிறார்கள். இது என் கருத்து. இருந்தாலும் இதை எவராலும் மறுக்க முடியாது என்று என்னால் சொல்லவும் முடியாது.

ஏன் தெரியுங்களா. எம்.ஜி.ஆருக்கு யார் நண்பனோ அவன் கலைஞருக்கு எதிரி.. கலைஞருக்கு யார் நண்பனோ அவன் எம்.ஜி.ஆருக்கு எதிரி. அந்த நேரத்தில் நடந்த கயிறு இழுக்கும் போட்டி.

இப்படித் தான் அப்போது அங்கே போட்டியும் பொறாமைகளும் பரத நாட்டியம் ஆடி இருக்கின்றன. ஆக யாழ்ப்பாணத்து அரசியல் மேடையில் தமிழ்நாட்டு அரசியலும் நுழைந்து கண்ணாமூச்சி விளையாடி இருக்கிறது.

அதனால் பாதிக்கப் பட்டது ஒட்டு மொத்த ஈழத்துத் தமிழர்கள் தான். சந்தோஷப் பட்டது தமிழகத்தின் சில தானைத் தலைவர்கள். இப்போது வருந்தி என்ன பயன். வெள்ளம் அணையை உடைத்துக் கொண்டு போய் விட்டதே. என்ன செய்வதாம்.

தமிழகத்தில் வாழும் தமிழ்ச் சகோதரர்கள் கடைசி நேரத்தில் வந்து உதவி செய்வார்கள் என்கிற ஏக்கத்தில் தமிழக மண்ணைப் பார்த்தவாறே பல்லாயிரம் ஜீவன்கள் யாழ்ப்பாணத்தில் உயிரை விட்டு இருக்கின்றன.

அப்போது எம்.ஜி.ஆர். மேலே இருந்தார். கீழே இறங்கி வர முடியாது. கலைஞர் கீழே இருந்தார். ஆனால் அவர் இறங்கி வரவே இல்லை. பிடித்த முயலுக்கு மூன்றே முக்கால கால் என்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வது. 



துயிலரங்கில் ஓர் உண்ணாவிரதம். இது உலகம் அறிந்த விசயம். என் மீது வழக்குப் போடலாம். ஆனால் எந்தக் கோர்ட்டுக்குப் போனாலும் ஜெயிக்க முடியாது. அதையும் சொல்லி விடுகிறேன்.

அந்த மனுசன் நினைத்து இருந்தால் மறுபடியும் சொல்கிறேன்; அந்த மனுசன் நினைத்து இருந்தால் தமிழ் ஈழத்தின் வரலாற்றை மாற்றி எழுதி இருக்கலாம். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. பரவாயில்லை. என்ன செய்வது. அவரால் முடியவில்லை.

ஒன்று மட்டும் உண்மை. பல்லாயிரம் உயிர்களின் சப்தநாடிகள் இன்னும் ஈனக் குரல்களை எழுப்பிக் கொண்டு தான் இருக்கின்றன. அந்தப் பாவம் யாரையும் சும்மா விடாது. துரோகம் செய்தவர்களையும் அவர்கள் சார்ந்த வாரிசுகளையும் அழித்துவிடும். 



ஓர் உயிர் ஈருயிர்கள் இல்லைங்க. இரண்டு லட்சம் உயிர்கள். அத்தனையும் மனித உயிர்கள். தமிழர்களின் உயிர்கள். ஆக இப்போது உலக இரத்தங்கள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து அழுகின்றன.

அழுது என்ன பயன். காப்பாற்ற வேண்டிய நேரத்தில் காப்பாற்றாமல் இப்போது ஒப்பாரி வைத்து என்ன நன்மை. ஒரு சொட்டு விளக்கெண்ணையும் கிடைக்கப் போவது இல்லை.

இந்திரா காந்தி என்ன உதவிகள் செய்தார் என்பதைப் பற்றி நாளைய கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

(தொடரும்)

15 ஜூலை 2017

கர்மவீரர் காமராஜர்

காலங்கள் மறக்காத ஒரு கருப்புத் தங்கம்
ஞாலங்கள் மறக்காத ஒரு சத்தியச் சிங்கம்

 

கர்ம வீரர் காமராஜர் இந்தியாவிற்கு இரு பிரதமர்களை உருவாக்கித் தந்த ஓர் இந்தியச் சிங்கம். படிக்காத மேதையாய் வாழ்ந்து மறைந்த ஒரு காந்தியச் சங்கம்.

ஆறாம் வகுப்பு வரை படித்தவர். ஆங்கிலம் அறவே தெரியாது. ஆனாலும் அவரிடம் பார் புகழும் பவித்திரமான மனிதநேயம் மட்டும் மறையாமல் வாழ்ந்து வந்தது.

அப்போது தமிழகத்தின் முதல்வராகக் கோலோச்சிய சாமானிய மனிதர். இப்போது பட்டி தொட்டிகள் எல்லாம் புகழப்படும் ஓர் ஏழைப் பங்காளர்.

இறக்கும் போது இரு கதர் வேட்டிகள். இரு பருத்திச் சட்டைகள். வெறும் 83 ரூபாய் ரொக்கம். சுத்தத்திலும் சுத்தமான கரங்கள். கர்மவீரர் காமராஜர் என்பவர் பொன் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு வரலாற்று நாயகன். கைகூப்புகிறோம் காமராஜரே!



மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு மனிதரும் தங்களின் பிறப்பிற்கான அடையாளத்தைப் பதித்துவிட்டுச் செல்ல வேண்டும் என்று சொல்வார்கள். அந்த வகையில் தன்னுடைய பிறப்பையும் தன்னுடைய செயலையும் அர்த்தம் உள்ளதாக மாற்றி அமைத்துக் காட்டியவர் தான் பெருந்தலைவர் காமராஜர்.

இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்தாரா என்பதை நம்பாத ஒரு தலைமுறையும் வந்து விட்டது. அந்த நிலையில் ஓர் அரசியல்வாதி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்து வாழ்ந்தவர் இந்த அருந் தலைவர் காமராஜர்.

உலக அரசியலைக் கொஞ்சம் புரட்டிப் பாருங்கள். நாட்டைப் பார்த்துக் கொள்வதற்குப் பதிலாகத் தங்கள் சொந்தங்களை மட்டுமே பார்த்துக் கொள்ளும் அரசியல் தலைவர்கள் தான் நிறையவே தெரிய வருவார்கள்.

பதவி புகழ் சுயநலம் இந்த மூன்றுமே ஒரே குட்டையில் ஊறிய தொற்று நோய்கள். நல்ல அரசியலைச் சேதப் படுத்தும் நோய்க் கிருகிகள் என்றும் சொல்லலாம். 



அந்த மாதிரியான கிருமிகளுடன் அன்றாட வாழ்க்கை நடத்தும் தலைவர்கள் வாழும் காலத்தில் அத்திப் பூத்தால் போல ஒரு சில கோகினூர் வைரங்களும் தோன்றி மறைவது உண்டு. பொதுநலத்தை மட்டுமே உயிராகப் போற்றி உச்சி முகர்ந்து பார்ப்பதும் உண்டு.

அரசியலில் லஞ்சம், அதிகாரத்தில் ஊழல், சுயநலத்தில் பொதுநலப் போர்வைகள். அப்படிப்பட்ட வக்கிரமான இடத்தில் காமராஜரைப் போல ஒரு சுத்தமான மாமனிதர் வாழ்ந்து இருக்கிறார் என்பது அதிசயத்திலும் அதிசயம்.

ஆறாம் வகுப்பு வரை படித்த ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரான கதையைக் கேட்டு இருக்கிறீர்களா. உண்மையிலேயே அதிசயம். அந்தக் கதையை இப்போது கேளுங்கள்.

காமராஜர் இருக்கிறாரே இவர் ஆங்கில மொழியே தெரியாமல் அரசியல் நடத்தியவர். 



மூத்தத் தலைவர்கள் அரசியலில் நீண்ட நாட்களுக்குப் பதவிகள் வகிக்கக் கூடாது என்று சொல்லி ஒரு சட்டத்தையும் கொண்டு வந்தவர். அதற்கு ஓர் உதாரணமாக தன் முதலமைச்சர் பதவியையே விட்டுச் சென்றவர். நம்ப முடிகிறதா.

கல்வியே ஒரு தேசத்தின் கண்களைத் திறக்கும் என்று கூறி பட்டித் தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்களைக் கட்டியவர். எல்லா ஏழைப் பிள்ளைகளும் பள்ளிக்குப் போக வேண்டும் என்று புரட்சிகரமான மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தவர்.

முதலமைச்சராக இருந்த போது வறுமையில் வாடிய தன் தாய்க்குச் சிறப்புச் சலுகைகள் தராதவர். சினிமாவில் தான் இது போன்ற கதாபாத்திரங்களைப் பார்க்க முடியும். ஆனால் தமிழகத்திலும் நடந்து இருக்கிறது.

நம்ப முடியாத நேர்மை நிலைப்பாட்டில் வாழ்ந்து இருக்கிறார். அதனால் இறவாப் புகழும் பெற்றார். அந்த உன்னத மனிதர் தான் கர்மவீரர் காமராஜர்.



காமராசரைப் போன்றத் தலைவர்கள் தமிழகத்தில் தொடர்ந்து இருந்து இருந்தால் தரணிப் போற்றும் அளவுக்கு மனிதநேயம் உயர்ந்து போய் இருக்கலாம். சிகரம் பார்த்து இருக்கலாம் என்பது என் கருத்து.

கர்ம வீரர் காமராஜர் என்கிற அந்த மனிதர் சாமான்ய ஆசாபாசங்களைக் கடந்து போனவர். கடைசி காலத்தில் இரண்டே இரண்டு வேட்டிகள் மட்டும் அவரிடம் இருந்தனவாம். அவற்றை இன்றும் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்கள். என்னே மனிதம். என்னே இலட்சியம்.

ஒரு செருகல். 1990களில் சிங்கை வானொலியில் நண்பர் அழகிய பாண்டியன் பணியாற்றிய காலத்தில் வானம் வசப்படும் எனும் ஒரு நிகழ்ச்சியை நடத்தி வந்தார். அதில் இருந்து காமராஜரைப் பற்றிய சில அரிய தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கின்றேன்.

இன்றும்கூட கிங் மேக்கர் என்று உன்னதமாய் அழைக்கப் படுகிறார் காமராஜர். 1903-ஆம் ஆண்டு ஜுலை 15ஆம் தேதி தமிழ்நாட்டின் விருதுநகரில் குமாரசாமி நாடார் - சிவகாமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். 



ஐந்து வயதில் திண்ணைப் பள்ளியில் சேர்க்கப் பட்டார். ஏனாதி நாயனார் வித்யாலாயா தொடக்கப் பள்ளியில் பயின்றார். இளம் வயதில் கபடி விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

இளம் வயதிலேயே அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்டார். தலைவர்களின் உரைகளைக் கேட்பதில் அதிக ஆர்வம். 1909 ஆம் ஆண்டு காமராஜருக்கு ஆறு வயது. 

அப்போது காமராஜரின் தந்தையார் காலமானார். தந்தையை இழந்த காமராஜர் தன் 12-வது வயதில் படிப்பை நிறுத்த வேண்டிய நிலை. அதன் பின்னர், ஒரு ஜவுளிக் கடையில் காமராஜர் வேலை பார்த்தார்.

இளம் வயதிலேயே தீவிரமான நாட்டுப்பற்று. நாட்டின் விடுதலைக்காக இந்திய மக்கள் போராடி வந்தார்கள். அவர்களை வெள்ளையர்கள் சிறை பிடித்தார்கள். கொடுமைப் படுத்தினார்கள்.

இந்த நிலையில்தான் 1920-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நடத்திய ஒத்துழையாமை இயக்கம்; சட்ட மறுப்பு இயக்கங்களில் தீவிரம் காட்டினார்.



திருமணம் செய்து வைத்தால் காமராஜர் குடும்பத்தைக் கவனிப்பார். காமராஜருக்குப் பொறுப்பு வரும் என அவருடைய தாயார் சிவகாமி அம்மாள் நினைத்தார். காமராஜரின் தாய்வழி மாமனாருடன் சேர்ந்து திருமண ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார்.

இதனை அறிந்த காமராஜர் தனக்குத் திருமணமே வேண்டாம் என மறுத்து விட்டார். திருமண விசயத்தில் அவர் மிகவும் உறுதியாக இருந்ததால் அவருடைய வாழ்க்கையில் திருமணம் எனும் சொல்லே அடிபட்டுப் போனது.

1930-ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் காந்தி அடிகளின் உப்பு சத்தியாக்கிரகம். அதில் கலந்து கொண்டார். சத்தியம் சிணுங்கியதால் இரண்டு ஆண்டுகள் சிறைவாசம். அதன் பிறகு மேலும் ஐந்து முறை சிறைவாசங்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் எட்டு ஆண்டுகள் சிறைவாசம்.

1940-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப் பட்டார். அந்தப் பொறுப்பை அடுத்த 14 ஆண்டுகளுக்கு வகித்தார். 1952-இல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப் பட்டார். 



அடுத்த வந்த இரண்டு ஆண்டுகளில் சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார். இந்தியாவில் ஆங்கிலம் தெரியாத ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரானது அதுவே முதல் முறை.

இருந்தாலும் தலை சிறந்த தலைமைத்துவத்தைத் தமிழகத்திற்கு வழங்கினார். அவருடைய காலக் கட்டத்தில் தமிழ்நாடு மாநிலம் இந்தியாவிலேயே மிகச் சிறந்த முறையில் நிர்வகிக்கப் பட்டது. பெருமையாக இருக்கிறது. இப்போது பாருங்கள். எல்லாமே தலைகீழாக மாறிப் போய் விட்டது

முதலமைச்சர் ஆனதும் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி. சுப்பிரமணியம், எம். பக்தவத்சலம் ஆகிய இருவரையும் தன் அமைச்சரைவையில் சேர்த்துக் கொண்டார். அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அப்போது அவர் தன் அமைச்சர்களுக்குச் சொன்ன அறிவுரை என்ன தெரியுமா.

“பிரச்சினையை எதிர்கொள்ளுங்கள். அவை எவ்வளவு சின்னதாக இருந்தாலும் பரவாயில்லை. அதனைத் தீர்ப்பதற்கான வழி முறைகளைத் தேடுங்கள். மக்கள் நிச்சயமாக மனநிறைவு அடைவார்கள்”




அவருடைய ஆட்சிக் காலத்தில் கல்வித் துறையிலும் சரி; தொழில் துறையிலும் சரி; தமிழ்நாடு துரிதமான வளர்ச்சிகளைக் கண்டது. மாநிலம் முழுவதும் பல புதிய புதிய பள்ளிகளைக் கட்டுவதற்குத் திட்டங்களை வகுத்தார். நிறைவேற்றியும் காட்டினார்.

பழைய பள்ளிகள் சீர் செய்யப் பட்டன. ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தொடக்கப் பள்ளி. ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஓர் உயர்நிலைப் பள்ளி. 11-ஆம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி. ஏழைச் சிறுவர்கள் பசியால் வாடக் கூடாது. அதனால் மதிய உணவு வழங்கும் உன்னதமான திட்டத்தையும் அறிமுகம் செய்தார்.

சாதி வகுப்பு, ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது. அந்த வகையில் எல்லாப் பள்ளிப் பிள்ளைகளுக்கும் இலவச சீருடையை வழங்கினார். பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் தமிழைப் போதனா மொழியாக்கினார். அறிவியல் தொழில்நுட்பப் பாடப் புத்தகங்களும் தமிழில் வெளிவரச் செய்தார்.

அரசாங்க அலுவலகங்களில் தமிழ் தட்டச்சு இயந்திரங்களை அறிமுகம் செய்தார். நீதிமன்றங்களில் வழக்குகளைத் தமிழில் நடத்த ஊக்குவிப்பு செய்தார்.

அவரின் ஆட்சியின் போது விவசாயம் அபிரிதமான வளர்ச்சி கண்டது. வைகை அணை, மணிமுத்தாறு அணை, கீழ் பவானி அணை, பரமிக்குளம் சாத்தனூர் அணை என்று பல அணைக்கட்டுத் திட்டங்கள் உருவாகின.



தொழில் துறையிலும் முத்திரை பதித்தார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி, சென்னை ஆவடி ராணுவ தளவாடத் தொழிற்சாலை, சென்னை இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் என சில பல தொழில்கள் தமிழகத்தில் உருவாக்கம் கண்டன. சிறந்த ஆட்சி.

அதனால் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சராகத் தேர்ந்து எடுக்கப் பட்டார். அடுத்து அவர் செய்தது அரசியலுக்கே ஒரு புதிய இலக்கணம். புதிய பரிமாணம்.

மூத்தத் தலைவர்கள் அனைவரும் தங்களின் அரசியல் பதவிகளைச் துறப்பு செய்ய வேண்டும். கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும். அப்படி ஒரு திட்டத்தைக் காமராஜர் கொண்டு வந்தார். பிரதமர் நேருவிடம் சிபாரிசு செய்தார்.

அதைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி, ஜெகஜீவன்ராம், மொரார்ஜி தேசாய், எஸ்.கே. பட்டேல் போன்ற மூத்தத் தலைவர்கள் பதவி விலகினார்கள்.

அதே ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பு காமராஜருக்கு வழங்கப் பட்டது.



அதற்கு அடுத்த ஆண்டு நேரு மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து இந்தியாவின் அடுத்த பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை முன் மொழிந்தார் காமராஜர்.

சாஸ்திரியும் இரண்டே ஆண்டுகளில் மரணத்தைத் தழுவினார். நேருவின் மகள் இந்திரா காந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமராக்கினார் காமராஜர். அப்போது இந்திரா காந்திக்கு 48 வயது.

அந்த இரண்டு தலைமைத்துவ மாற்றங்களையும் அவர் மிகச் சரியாக மிக நேர்த்தியாக செய்து முடித்ததால் காமராஜரை “கிங்மேக்கர்” என்று பத்திரிக்கையாளர்களும் அரசியல்வாதிகளும் புகழாரம் செய்தனர். 

இப்படி தமிழ்நாட்டில் மெச்சத் தக்க ஆட்சியைத் தந்த காமராஜர் தன்னுடைய கடைசி மூச்சு வரை சமூகத் தொண்டிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தார். வாழ்ந்தார்.



1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி தம் 72-ஆம் வயதில் காந்தி பிறந்த நன்னாளில் காமராஜர் இந்த உலகை விட்டுப் பிரிந்தார். அதற்கும் அடுத்த ஆண்டு இந்திய அரசு அவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருதை வழங்கிச் சிறப்பு செய்தது.

மக்கள் தொண்டையே மகேசன் தொண்டாக நினைத்து வாழ்ந்தவர் காமராஜர். அதனால் தனக்கென ஒரு குடும்பத்தை அவர் அமைத்துக் கொள்ளவே இல்லை. அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை.

தவிர சிறு வயதிலேயே கல்வியைத் தொடர முடியாததை நினைத்துப் பல முறை வருந்தி இருக்கிறார். அவர் சிறைக்குச் சென்ற போன சமயங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில நூல்களை வாசிக்க கற்றுக் கொண்டு இருக்கிறார்.

காமராஜர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர். இருந்தாலும் அவருடைய தாயார் விருதுநகரில் அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு வீட்டில் வாழ்ந்தார் என்றால் பெரும் வியப்பு இல்லீங்களா.

தன் குடும்பம் என்றாலும் தன் தாயாருக்குக் கூட எந்தச் சலுகையும் அவர் வழங்கவில்லை. கடைசி காலத்தில் அவர் தனக்கென வைத்து இருந்த சொத்துக்கள் என்ன தெரியுமா...



இரு கதர் வேட்டிகள் இரு சட்டைகள். சில புத்தககங்கள். அவ்வளவுதான். இதை எழுதும் என் மனம் கலங்குகிறது. இப்படியும் ஒரு மனிதரா. இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்து இருக்கிறாரா.

முதலமைச்சர் எனும் பதவிக்கு உரிய பந்தா அவரிடம் கொஞ்சமும் இருந்தது இல்லை. எந்த நேரத்திலும் எவரும் அவரைச் சந்தித்துப் பேச முடியும். அதனால்தான் அவரைக் கர்ம வீரர் என்றும் கருப்பு காந்தி அன்றும் இன்றும் தமிழக வரலாறு போற்றுகிறது. இனியும் போற்றும்.

அந்த மாதிரியான ஒரு கண்ணியமான ஒரு நேர்மையான ஒரு சுத்தமான இன்னொரு தலைவரைத் தமிழக வரலாறு மட்டும் அல்ல இந்த உலக வரலாறும் இனி சந்திக்குமா. தெரியவில்லை.

காமராஜர் எனும் கர்மவீரர் மறக்க முடியாத ஒரு தமிழர். தமிழர்களின் வரலாற்றில் அவர் ஒரு சகாப்தம்.

12 ஜூலை 2017

பட்டு ஒரு சகாப்தம்



குண்டு குழிகள் மலிந்து நிறைந்த அரசியல் நெடுஞ்சாலை. அரசியல் பெரிசுகள் நலிந்து மறைந்த அதிகார விரைவுச்சாலை. அங்கே ஒரு சிம்ம சொப்பனமாய் சீறிப் பாய்ந்தது ஒரு சீர்த்திருத்தச் சாலை.

அரசியலமைப்பில் அத்தனைப் பேருமே சமம் என்றது அந்த அமைதிச்சாலை. அந்தச் சாலையின் பெயர் பட்டுச் சாலை. சுருங்கச் சொன்னால் அது ஓர் அரசியல் கலாசாலை. இன்னும் சொன்னால் மலேசிய வானில் மறைந்து நிற்கும் ஒரு பழம்பெரும் கலாசாலை. மலேசிய மண்ணில் அஞ்சாத சிங்கமாய்க் கர்ஜித்து மறைந்தவர்.  

இன்றைய தினத்தில் அவர் மறைந்து 22 ஆண்டுகள் ஆகின்றன. நினைத்துப் பார்க்கின்றோம்.

முன்பு மலேசிய நாடாளுமன்றத்தில் பட்டு என்பவர் பலருக்குச் சிம்ம சொப்பனமாய் விளங்கியவர். ஈப்போ சீனிவாசகம் சகோதரர்களுக்குப் பின்னர் மக்களவையில் சொல்லின் வில்லாய் வலம் வந்தவர். 




1970-களில் கோப்பேங் புலி. 1980-களில் ஈப்போ சிறுத்தை. 1990-களில் மெங்லெம்பு மீசைக்காரர். இப்படி அன்பாகச் செல்லமாக அழைக்கப் பட்டவர்.

அமரர் பி. பட்டு நாடறிந்த மூத்த அரசியல்வாதி. பன்மொழித் திறன் பெற்றவர். தமிழ், சீன, ஆங்கில மொழிகளில் சிறப்பாகப் பேசக் கூடியவர். ஜனநாயகச் செயல் கட்சியில் முக்கியத் தலைவராக வலம் வந்தவர்.

பேராக், மெங்லெம்பு தொகுதியின் மக்களவை உறுப்பினராகச் சேவை செய்தவர். மலேசிய இந்தியர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர்.

அரிதாய்க் கிடைத்த சீன மொழி ஆற்றலைப் பெரிதாய் வளர்த்துக் கொண்டார். கம்பீரத் தொனியில் கராராகப் பேசினார். மலேசியச் சீனர்களைத் தன் பக்கம் சுண்டி இழுத்துக் கொண்டார்.

சிம்மக் குரலோன் பட்டு எனும் சிறப்பையும் பெற்றார். அவருடைய மகள் தான் இப்போதைய மக்களவை உறுப்பினர் கஸ்தூரி ராணி பட்டு. பத்து காவான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்.




அரசியலே உலகம் என்று வாழ்ந்தவர் அமரர் பி. பட்டு. ஆனால் அந்த அரசியலையும் தாண்டி ஒருவர் வந்து இருக்கிறார் என்றால் அவர் தான் பட்டுவின் மகள் கஸ்தூரி ராணி.

பட்டுவின் மொத்த ஒட்டு மொத்த சந்தோசத்திற்கும் கஸ்தூரிராணி தான் மூலப் பொருளாக விளங்கி வந்து நிற்கிறார்.

பிறந்த அந்த நாளில் இருந்து வளர்ந்த ஒவ்வொரு நொடியிலும் பட்டுவிற்குச் சந்தோசங்களை அள்ளிக் கொடுத்து இருக்கிறார் கஸ்தூரி ராணி பட்டு. 

பட்டு இப்படிச் சொல்கிறார்; என் மகளுக்குச் சாதாரணமாய்க் கொஞ்சம் சளி பிடித்தால் கூட இரவு முழுவதும் நான் தூங்க மாட்டேன். எனக்குத் தூக்கமே வராது. அவள் கூடவே இருப்பேன். அவள் இல்லாமல் நான் வெளியே செல்வது குறைவு. எனக்கும் அவளுக்கும் இருந்த பாசப் பிணைப்பு என் அரசியலே பொறாமை படும் அளவுக்கு தடுமாறிப் போனது.




பட்டுவே இப்படி ஒருமுறை சொல்லி இருக்கிறார்.  அது ஒரு தகப்பனுக்கும் ஒரு மகளுக்கும் உள்ள பந்த பாசம்.

ஆனால் மலேசிய நாடாளுமன்றத்தில் பலருக்குச் சிம்மச் சொப்பனமாக விளங்கிய பட்டுவின் வாரிசு ஒருநாள் அதே சிகரத்தில் காலடி எடுத்து வைப்பார் என்று பட்டுவே கற்பனை செய்து பார்த்து இருக்க மாட்டார். ஆனால் அதுதான் நடந்து இருக்கிறது.

அரிதிலும் அரிதான அந்த மாதிரியான காலக் கோடுகளைக் காண அவர் இப்போது இல்லை. பொல்லாத காலன் சொல்லாமல் கொள்ளாமல் அவரிடம் கால்ஷீட்டை வாங்கிக் கொண்டான்.

இருந்தாலும் பரவாயில்லை அன்பரே பட்டு; உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். உங்கள் மகள் கஸ்தூரியை ஒவ்வொரு நாளும் பார்க்கிறோம். வாழ்த்துகிறோம். ஆராதிக்கிறோம்.

பட்டுவின் அரசியல் வாழ்க்கை கொஞ்சம் கசப்பானது. கொஞ்சம் காரமானது. அப்படியே ரொம்பவும் கரடுமுரடானது.

அரசியல் அரிச்சுவடிகளை ஆதாரங்களுடன் பார்த்தவர். அரசியல் சட்டச் சிக்கல்களின் முடிச்சுகளுக்கு எதார்த்தமானத் தீர்வுகளைக் கண்டவர். அவர் தான் தோழர் பட்டு. அப்போதைய பழசுகளில் பெரிசு. பட்டு என்கிற பெரிசு.

கொள்கை வாதத்தில் முரட்டுத்தனம். தன்மான வாதத்தில் அதீதப் பிடிவாதம். ஆனால் அருமையான மனசு. அழகான பேச்சு. அர்த்தமான மூச்சு. இப்போது இல்லை. வருந்துகிறோம்.

காட்டுக் கூச்சல்களுக்கு நடுவிலும் அழகான மேடைப் பேச்சுகள். சரியான நேரத்தில் சரியான வாசகங்கள். சமூகச் சிந்தனைகளைக் கிள்ளிப் பார்க்கும் அணுகுமுறைகள். அரசியல் வானில் நல்ல ஒரு பரிமாணம்.

1978-ஆம் ஆண்டு அரச மலேசிய கப்பல்படை ஸ்வீடன் நாட்டில் இருந்து 90 இலட்சம் ரிங்கிட்டிற்கு ஸ்பீக்கா (Missile - Spica - M - 4 ASM) எரிபடை குண்டுகளை வாங்கியது. 




அதில் சில பிரச்னைகள் உள்ளன என்று சொல்லப் போய் அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் 1972 (Official Secrets Act 1972); சட்டத்தின் கீழ் பட்டு கைது செய்யப் பட்டார்.

ஈப்போவில் இருக்கும் பேராக் மாநிலப் போலீஸ் தலைமையகத்தில் 18 மாதங்கள் 60 நாட்கள் தனிமைச் சிறை. அடுத்த 16 மாதங்களுக்குத் தைப்பிங் கமுந்திங் தடுப்புக் காவல் முகாமில் சிறைவாசம்
(சான்று: http://www.malaysiakini.com/news/348222)

துன் மகாதீர் மலேசியாவின் பிரதமராக இருந்த காலக் கட்டத்தில் நடந்தது. அப்போதைக்கு அனைவரையும் ஈர்த்த செய்தி.
(சான்று: http://www.freemalaysiatoday.com/category/highlight/2015/12/19/p-patto-an-unsung-hero/ - Patto was arrested, charged and convicted under the Official Secrets Act)

அதைப் போலவே 1987-இல் ஓப்பராசி லாலாங் (Operation Lalang) கைது நடவடிக்கை. அதில் பட்டு, கர்பால் சிங், லிம் குவான் எங், லாவ் டாக் கீ, வி.டேவிட் போன்றவர்கள் கைது செய்யப் பட்டனர்.

கமுந்திங் சிறையில் இரண்டு ஆண்டுகளுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டனர். இரண்டாவது முறை கைது செய்யப்பட்டது பட்டுவின் வாழ்க்கையில் கசப்பான வேதனைகள்.   




பட்டுவின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன்.  கோப்பேங் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 1982 லிருந்து 1986 வரையில் ஈப்போ, மெங்லெம்பு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். 1986 லிருந்து 1990 வரையில் பினாங்கு பாகான் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்.

1990-இல் சுங்கை சிப்புட் தொகுதியில் அதன் சிங்கமான சாமிவேலுவை எதிர்த்து நின்று 1763 வாக்குகளில் தோல்வி கண்டவர். அவருக்கு 12,664 வாக்குகளும் சாமிவேலுவிற்கு 14,427 வாக்குகளும் கிடைத்தன.

தேர்தல் முடிவின் போது பட்டுவைப் பார்த்து சாமிவேலு சொன்னது சிலரின் நினைவுகளுக்கு இப்போது வரலாம். ‘நீ ஜெயித்தால் நம் இந்தியர்களுக்கு ஒரு நாடாளுமன்ற இடம் மட்டும்தான் கிடைக்கும். ஆனால் நான் தோற்றுப் போனால் ஓர் அமைச்சர் பதவியே பறிபோய்விடும். திரும்பக் கிடைக்குமா. சந்தேகம்.’ சொன்னதில் உண்மை இருக்கிறது.

பட்டுவின் தோல்வியில் பல பிரச்சனைகள் இருந்தன என்றுகூட சொல்லப் படுகிறது.  எது எப்படியோ இப்போதைக்கு அது முக்கியம் இல்லை. ஏன் என்றால் அது ரொம்பவும் லேட்டாகிப் போன நியூஸ்.

1995 ஜூலை 12-ஆம் தேதி ஈப்போ மருத்துவமனையில் மாரடைப்பினால் பட்டு இறந்து போனார். அப்போது கஸ்தூரிராணிக்கு 16 வயது. 




பேராக் வாழ் மக்களுக்கு பட்டு  நிறைய உதவிகளைச் செய்து இருக்கிறார். அங்காடிக்காரர்கள், தொழிலாளர்கள், சாப்பாட்டுக் கடைக்காரர்கள், நகராண்மைக் கழக ஊழியர்கள்தான் அவருக்கு நெருங்கிய அன்றாட நண்பர்கள்.

பள்ளிப் பிள்ளைகளுக்கு கைச் செலவுகளுக்கு காசு கொடுக்கும் ஒரு நல்ல பழக்கமும் இவரிடம் இருந்து உள்ளது. இவரிடம் காசு இருக்கிறதோ இல்லையோ முக்கியம் இல்லை. பள்ளிப் பிள்ளைகளுக்கு காசு கொடுப்பதில் இவருக்கு ஓர் அலாதிப் பிரியம். அதற்குத் துணையாக இருந்தவர் கஸ்தூரி ராணி.

ஒரு சின்ன சம்பவம். அப்போது கஸ்தூரிராணிக்கு பதின்ம வயது. கஸ்தூரிராணி வாங்கிச் சாப்பிடுவதற்காக வைத்து இருந்த காசை அவரிடம் நைசாகப் பேசி வாங்கி புந்தோங் பள்ளிப் பிள்ளைகளுக்குச் ‘செண்டோல்’ வாங்கிக் கொடுத்தாராம். அங்குள்ள பெற்றோர்கள் இன்னும் சொல்கிறார்கள்.

அதாவது தன்னிடம் காசு இல்லாத போது மகளிடமே காசைக் கடனுக்கு வாங்கி தானம் செய்த சந்தோஷம் எத்தனை அரசியல்வாதிகளுக்கு கிடைக்கும். சொல்லுங்கள்.

காசு என்னவோ பெரிய தொகை இல்லை. இருந்தாலும் மனசு வேண்டுமே. ஒரு முறை இரண்டு முறை இல்லை. பலமுறைகள் அந்த மாதிரி நடந்து இருக்கிறது. கடன் வாங்கிய காசை கஸ்தூரி ராணியிடம் திருப்பிக் கொடுத்தாரா என்பது தெரியவில்லை. அதைக் கஸ்தூரியிடம்தான் கேட்க வேண்டும்.

இருந்தாலும் அப்பாவின் ஓய்வூதியப் பணத்தில் தானே கஸ்தூரி ராணி மலாயாப் பல்கலைக்கழகத்திற்குப் போய்ப் படித்து பட்டம் வாங்கினார்.




ஈப்போ நகராட்சி மன்றத்தின் தலைவர்களில் ஒருவராக பட்டு இருக்கும் போது இவர் நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி இருக்கிறார். அவரிடம் உதவி பெற்றவர்களில் சிலர் பட்டு என்று சொன்னதும் கண்கலங்கிப் போகிறார்கள்.

பல நூறு பேர்களுக்கு குடியுரிமைகளைப் பெற்றுத் தருவதில் பட்டு முன்னோடியாகத் திகழ்ந்துள்ளார். பட்டுவின் அலுவலகத்தில் யார் எப்பொழுது வேண்டும் என்றாலும் நுழைந்து உதவிகளைக் கேட்கலாம்.

பசி என்று வந்தால் கீழே இருந்த உணவகத்தில் சாப்பிட்டுவிட்டும் போகலாம். இவர் அடிக்கடி சொல்லும் வசனங்கள். ’மக்களுக்காகச் சேவை செய்யத் தான் அரசியலுக்கு வந்தேன். பணம் சம்பாதிக்க இல்லை.’

அவருடைய கனவுகள் இன்னும் உலர்ந்து போகவில்லை. உற்சாகங்களும் உறைந்து போகவில்லை. அவருக்குப் பதிலாக அவருடைய மகள் இப்போது வந்து இருக்கிறார்.

அரசியல் சுதந்திரத்திற்காக, மனித உரிமைகளுக்காக, சமயம், இனம், மொழி கடந்த சம உரிமைப் போராட்டவாதியாக, பண்பாளனாக, தோழனாக, மக்களின் தொண்டனாகப் பற்பல நிலைகளில் போராடியவர் பி.பட்டு. ஜ.செ.க.வின் அதிரடிப் பீரங்கி என்றும் புகழப் பட்டவர்.

பேராக் பாகான் செராயில் 10.12.1946-இல் ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். பட்டுவிற்குப் பத்து வயதாக இருக்கும் போது தந்தையார் காலமானார். அவருடைய தாத்தாவின் பார்வையில் வளர்ந்தார். ஆசிரியர் தொழிலை விட்டுவிட்டு 1971-ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்தார். இவருக்கு ஒரு மனைவி. பெயர் மேரி.

பண பலமோ, அதிகார பலமோ, ஆட்சி பலமோ பட்டுவை அசர வைக்கவில்லை. சிறைவாசம் கூட அவரை அடிபணிய வைக்கவில்லை.

அமரர் பட்டு ஆற்றிய அரிய சேவைகளுக்காக ஈப்போ சிலிபின் சாலைக்கு அவருடைய பெயரையே வைக்க வேண்டும் என்று பேராக் மாநிலத்தின் முன்னால் முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் நிஜார் கருத்து தெரிவித்தார்.

நல்ல மனதில் நல்ல எண்ணங்கள். ஆனால் முடிவுகள் வேறு மாதிரியாக விஸ்வரூபங்கள் எடுத்தன. அவற்றை இங்கே எழுத முடியாது. மன்னிக்கவும்.

ஆனால் இப்படி வேண்டும் என்றால் கொஞ்சம் எழுதலாம். சகிப்புத் தன்மைகள் கரைந்து போய் கரை தட்டிய கடும் எதிர்ப்புகள். கடைசியில் பட்டுவின் குடும்பத்தினரே ’எதுவும் வேண்டாம். பட்டுவை நிம்மதியாகத் தூங்க விடுங்கள்’ என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மோசமாகிப் போனது. 



இருந்தாலும் காலத்தால் செய்த உதவி ஞாலத்திலும் பெரிது என்று சொல்லி பினாங்கில் பட்டுவின் பெயரில் ஒரு சாலைக்குப் பெயர் வைக்கப் பட்டது. பட்டவர்த்தில் ராஜா ஊடா எனும் சாலைக்கு ஜாலான் பி. பட்டு என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது. முதலமைச்சர் லிம் குவான் இங்கிற்கு நன்றிகள்.

சமயங்களில் கோப்பெங் நகரின் லாவான் கூடா பகுதியில் உள்ள கோப்பிக் கடைகளுக்குச் செல்வார். திடீரென்று மேஜைகள் மீது ஏறி நின்று கொண்டு உணர்ச்சிப் பூர்வமாக உரையாற்றுவார்.

மனித உரிமை அத்துமீறல்கள் பற்றி ஆவேசமாகச் சாடுவார். அப்போது பொது மக்கள் சுற்றி நின்று ஆரவாரம் செய்வார்கள். அந்தக் காட்சிகளை நம்மால் மறக்க முடியாது.

ஜ.செ.க. கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகவும், ‘ராக்கெட்’ இதழின் ஆசிரியராகவும் இருந்தார். அதன் பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார். அந்த இழப்பு அவருடைய குடும்பத்திற்கு அல்ல. நாட்டிற்கே பெரிய இழப்பாகும். இந்தியச் சமுதாயத்திற்கு மாபெரும் இழப்பாகும்.

அவருடைய ஈமச்சடங்கு செலவுகளில் பெரும் பகுதியை டத்தோ ஸ்ரீ உத்தாமா சாமிவேலு கவனித்துக் கொண்டார். அதை நாம் இங்கே நினைவுகூர வேண்டும்.

அவர்கள் இருவரும் அரசியல் எதிரிகளாக இருந்து இருக்கலாம். ஆனால், உணர்வுகள் என்று வரும்போது இந்தியர்களாக இருக்கும் பட்சத்தில் இந்திய உணர்வுகளுக்கு அடிமையாகிப் போகின்றார்கள். அந்த வகையில் டத்தோ ஸ்ரீயைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.



பரந்து விரிந்து கிடக்கும் வரலாற்றுச் சுவடுகளில் வையகம் போற்றும் மனுக்குல மைந்தர்கள் வாழ்ந்து மறைகின்றார்கள். இறந்தும் இறவாமல் இறவாப் புகழுடன் உயிர்ப்பு பெற்ற ஆன்ம ஜீவநாடிகளாக உறைகின்றார்கள்.

அவர்களில் சிலர் வரலாற்றுச் சப்த சுவரங்களின் சொர்ண சகாப்தங்களாக மாறுகின்றார்கள். அந்தச் சகாப்த வேதங்களையும் தாண்டி நம்முடன் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றார்கள். அன்றும் இன்றும் மனித மனச் சங்கமங்களில் மந்திரப் புன்னகைகளை அள்ளித் தெளித்து ஆலாபனையும் செய்கின்றார்கள். 

பி. பட்டு. உண்மையிலேயே ஒரு மலேசிய மண்ணின் மைந்தன்! மலேசிய வரலாற்றில் ஓர் அவதாரப் புருஷன்! அவர் மறைந்து விட்டாலும் மனிதச் சுவடிகளில் இருந்து மறைக்க முடியாத மறுமலர்ச்சிக் களஞ்சியமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். இன்றும் இனி என்றும் வாழ்ந்து கொண்டு இருப்பார். அவர் ஒரு சகாப்தம்!