12 நவம்பர் 2017

கோத்தா கெலாங்கியில் ஸ்ரீ விஜய பேரரசின் தாமரை கற்பாறைகள்

ஜொகூர் மாநிலத்தின் கோத்தா திங்கி சுங்கை லிங்கியூ காட்டுப் பகுதிகளில் ஸ்ரீ விஜய பேரரசின் புதிய வரலாற்றுத் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அவை தாமரைப் பூக்கள் வடிவத்திலான பாறைத் தடயங்கள். 


இந்தக் கற்பாறைகள் காட்டின் பல இடங்களில் ஆங்காங்கே காணப் படுகின்றன. அனைத்தும் பெரும் பாறைகளில் செதுக்கப் பட்ட தாமரை வடிவங்களிலான கற்பாறைகள் ஆகும்.

ஸ்ரீ விஜய பேரரசு கி.பி. 650-ஆம் ஆண்டுகளில் கோத்தா திங்கி சுங்கை லிங்கியூ பகுதியில் பிருமாண்டமான கோட்டைகளைக் கட்டி உள்ளது. பின்னர் கி.பி.1025-ஆம் ஆண்டில் இராஜேந்திர சோழன் படையெடுத்து வந்து அந்தக் கோட்டைகளைச் சின்னா பின்னாமாக்கிவிட்டுச் சென்று விட்டான். தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய இராஜா ராஜா சோழனின் மகன் தான் இராஜேந்திர சோழன்.


ஜொகூர் இந்தியர் வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன்

சுங்கை லிங்கியூ காடுகளில் சிதைந்து போன பாறைப் படிக்கட்டுகளும் பாறைக் கோபுரங்களும் பாறைப் படிவங்களும் ஸ்ரீ விஜய பேரரசு ஆட்சியின் வரலாற்றுச் சான்றுகளாக அமைகின்றன என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இந்தக் கண்டுபிடிப்பு வரலாற்றுச் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவரும் என்று நம்பப் படுகிறது.

ஸ்ரீ விஜய பேரரசின் அரசார்ந்த தேசிய மலர் தாமரை மலராகும். ஸ்ரீ விஜய பேரரசு அரசாட்சி செய்த இடங்களில் எல்லாம் இந்தத் தாமரைப் படிவங்களைக் காண முடியும்.


தாமரைப் பூக்கள் வடிவத்திலான பாறைத் தடயங்கள்

சுங்கை லிங்க்யூ காட்டுப் பகுதியின் உட்புறங்களில் மட்டுமே இந்தத் தாமரைப் பூக்கள் வடிவத்திலான கற்பாறைகள் கண்டுபிடிக்கப் பட்டன. காட்டுப் பகுதியின் உட்புறங்களுக்குச் செல்வது மிகவும் சிரமமாக உள்ளது.

காட்டுப் பகுதிக்குள் செல்ல போலீஸார் அனுமதியும் ஜொகூர் மாநில வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் அனுமதியும் தேவை. அரச மலேசிய இராணுவப் படையினர் அந்தப் பகுதியைப் பாதுகாத்து வருகின்றனர்.



2017 மே மாதம் 20-ஆம் தேதி ஓர் ஆய்வுக் குழுவினர் கோத்தா கெலாங்கி சுங்கை அம்பாட் காட்டுப் பகுதியில் வரலாற்று ஆய்வுகள் மேற்கொண்டனர். ஜொகூர் மாநில பாரம்பரிய அறக்கட்டளையின் துணை இயக்குநர் டாக்டர் கமாருடின் அப்துல் ரசாக், வரலாற்றுத் துறை இயக்குநர் ஹாஜி காம்டி காமில், தொல்பொருள் ஆய்வாளர் மஸ்லான் கெலிங், ஜொகூர் சுற்றுலாத் துறை இயக்குனர் ஆகியோருடன் மேலும் சில அதிகாரிகளும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.


இந்த ஆய்வுப் பணிகளுக்கு முன்னோடியாகத் திகழ்பவர் ஜொகூர் இந்தியர் வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன். மிகத் துடிப்புடன் தன்னலமற்ற சேவைகள் செய்து வருகிறார்.

மேலும் வரலாற்று ஆய்வாளர் மலாக்கா முத்துக்கிருஷ்ணன் ஆலோசகராகச் சேவை செய்கிறார். மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் - மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் புவியியல், தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு வரலாற்று வழிகாட்டியாகவும் விளங்குகிறார். வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன் அகழாய்வுப் பணிகளுக்குச் சேவையாளராகவும் விளங்குகிறார்.  



கோத்தா திங்கி சுங்கை அம்பாட் காட்டுப் பகுதியில் ஆய்வுகள் செய்ய மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் - மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் புவியியல், தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டு உள்ளன. இப்போது மழைக்காலம். அதனால் ஆய்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

11 நவம்பர் 2017

ஜான்சிராணி வீராங்கனை கோவிந்தம்மாள்

இந்திய தேசிய இராணுவத்தில் பெண்களுக்கு ஜான்சி ராணி படை எனும் ஒரு தனிப் பிரிவை நேதாஜி தொடங்கினார். ஒரு முறை பர்மா இம்பால் எனும் இடத்தில் பெண்கள் தங்கி இருந்தனர். அவர்களின் கூடாரப் பகுதிக்குள் நேதாஜி போய் இருக்கிறார். இருள் நேரம். அப்போது கோவிந்தம்மாள் என்பவர் கடமையில் இருந்து இருக்கிறார்.



ஒரு மர்ம வண்டியில் ஆண்கள் சிலர் முகாமிற்குள் நுழைவதைப் பார்த்த கோவிந்தம்மாள் அந்த வண்டியைத் தடுத்து நிறுத்தி இருக்கிறார். வண்டியின் உள்ளே நேதாஜி இராணுவ உடையில் அமர்ந்து இருந்தார். அவரை அடையாளம் தெரியாமல் வேறு யாரோ என்று கோவிந்தம்மாள் நினைத்து விட்டார்.

மாறு வேடத்தில் வந்த நேதாஜியைப் பார்த்து விட்டு கதவைத் திறந்து உள்ளே விட மறுத்து விட்டார். நான் நேதாஜி என்று கூறிய பின்னரும் கோவிந்தம்மாள் அவரை உள்ளே விடவில்லை. பின்னர் மாறுவேடத்தைக் கலைத்து முகத்தைக் காட்டிய பின்னரே கோவிந்தம்மாள் அவரை உள்ளே செல்ல அனுமதித்து இருக்கிறார். 




அடுத்த நாள் காலையில் வீராங்கனைகள் எல்லாரையும் நேதாஜி அழைத்தார். அவர்களிடம் 'நேற்றிரவு முகாம் வாசலில் பாதுகாப்புக்கு நின்றது யார் என கேள்வி எழுப்பினார். நான்தான் என கோவிந்தம்மாள் கூறி இருக்கிறார்.

'ஏன் என்னை உள்ளே விடுவதற்கு அனுமதி மறுத்தீர்கள்’ என நேதாஜி மறு கேள்வி கேட்டு இருக்கிறார். நேதாஜியின் கண்களை நேருக்கு நேராக பார்த்த கோவிந்தம்மாள் 'இது போர்க் காலம். எதிரிகள் கூட மாறு வேடத்தில் வர வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் தங்களை அனுமதிக்கவில்லை. தாங்கள் மாறுவேடத்தைக் கலைத்த பிறகு தான் உங்களை உள்ளே விட்டேன்' என பதில் கூறினார்.

கோவிந்தம்மாளின் பதிலால் திருப்தி அடைந்த நேதாஜி, கோவிந்தம்மாளின் முதுகில் தட்டிக் கொடுத்தார். அந்தப் பெண்ணின் திடமான கடமை உணர்வைக் கண்டு வியந்து போனார் நேதாஜி.

இப்படிப்பட்ட பெண்கள் தான் இந்திய தேசிய இராணுவத்திற்குத் தேவை என்று புகழாரம் செய்தார். அதன் பின்னர் ஜான்சி ராணி படையின் உயரிய விருதான ‘லாண்ட்ஸ் நாயக்’ விருதை கோவிந்தம்மாளுக்கு வழங்கிப் பதவி உயர்வு செய்தார். அது ஜான்சி ராணி படையினருக்குப் பெருமை செய்த ஒரு வரலாற்றுச் சுவடு.




கோவிந்தம்மாள் 1927 பிப்ரவரி 22-ஆம் தேதி தமிழ் நாடு வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் பிறந்தவர். இவரின் தந்தையார் பெயர் முனுசாமி செட்டியார். நெசவு தொழில் செய்தவர். வடஆற்காட்டுப் பகுதியைச் சேர்ந்தவர்.

கோவிந்தம்மாள் பிறந்த மூன்று மாதங்களில் தன் குடும்பத்தோடு அப்போதைய மலாயாவுக்கு வந்தார். அவருக்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் போன்ற மொழிகள் தெரியும். மலாயா அஞ்சல் துறையில் பணியாற்றினார். நகைத் தொழிலையும் இதர தொழில்களிலும் ஈடுபட்டு வந்தார்.

கோவிந்தம்மாள் மலாயாவில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1940-ஆம் ஆண்டு அருணாச்சலம் செட்டியார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அருணாச்சலம் செட்டியார் ஓர் எழுத்தர். ஓர் இரப்பர் தோட்டத்தில் பணி புரிந்தார்.

அந்தக் கட்டத்தில் நேதாஜி செய்த பிரச்சாரம் கோவிந்தம்மாளின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்து போனது.

இந்திய விடுதலைப் போரில் மலாயா இரப்பர் தோட்டத் தமிழ்த் தொழிலாளார்கள் அதிகமானோர் சேர்ந்தார்கள். அதை அப்போதைய பிரிட்டனின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் கிண்டலாகப் பேசி இருக்கிறார்.




மலாயா இரப்பர் தோட்டங்களில் தமிழர்கள் பால் உறிஞ்சும் பாமரத் தொழிலாளர்கள். அவர்களின் இரத்தம் தான் நேதாஜியின் மூளையில் கட்டியாக உறைந்து போய்க் கிடக்கிறது என்று சொன்னார்.

அதற்கு நேதாஜி அந்தத் தமிழர்கள் தான் நாளைய ஆங்கில ஏகாதிபத்தியத்தின் இரத்தத்தை குடிக்கப் போகிறார்கள். அது தெரியாமல் ஒரு வெள்ளைச் சவர்க்காரக் கட்டி பேசுகிறது என்று பதிலடி கொடுத்தார்.

அந்த அளவிற்கு இந்திய தேசிய இராணுவப் படையில் மலாயா இரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஈடுபாடு கொண்டு இருந்தனர். அவர்களில் ஒருவர் தான் கோவிந்தம்மாள்.

ஒருமுறை மலாக்கா பிராந்தாவில் (Melaka Perintah) நேதாஜி பிரசாரம் செய்தார். நேதாஜியின் வீர உரையைக் கோவிந்தம்மாள் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படையின் நிதிக்காகத்  தன் ஆறு பவுன் வளையல்களைக் கழற்றிக் கொடுத்தார். திருமணச் சீதனமாகக் கிடைத்த ஓர் ஏக்கர் இரப்பர் தோட்டத்தையும் 1500 வெள்ளிக்கு விற்று அப்படியே அந்தப் பணத்தைத் தானமாகவும் கொடுத்து இருக்கிறார். எப்பேர்ப்பட்ட வீர தான உணர்வுகள்.




குடும்ப வாழ்க்கையில் இருந்து வெளியேறிய கோவிந்தம்மாள் இந்திய தேசிய இராணுவப் படையில் தன்னை இணைத்துக் கொண்டார்.1943-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி தன்னுடைய 16-ஆவது வயதில் ஜான்சி ராணிப் படையில் சேர்ந்தார்.

இந்தப் படை முதன்முதலில் 20 சிங்கப்பூர் பெண்களைக் கொண்டு கேப்டன் லட்சுமி சுவாமிநாதன் என்பவரால் அமைக்கப் பட்டது. அந்தப் படையில் 1500 பெண்கள் வரை சேர்ந்தனர். அந்த அணியில் முதலில் 100 பேர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். அவர்களுக்குப் பல வகையான துப்பாக்கிகளைச் சுடும் பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டன.

இந்திய தேசிய இராணுவப் படையில் கோவிந்தம்மாளின் எண் 4800. அதுவே கோவிந்தம்மாளின் அடையாளம். அவரிடம் திறமை; கடுமையான உழைப்பு; மனவலிமை இருந்தன. அதன் காரணமாக 1000 பேர் கொண்ட ஒரு பெண்கள் அணிக்குத் தலைவராகத் தகுதி உயர்த்தப் பட்டார்.

ஜான்சி ராணி படையில் இருந்த திறமையான 100 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு பர்மா அழைத்து செல்லப் பட்டனர். அங்கு அவர்களுக்கு உயர் ரக ஆயுதங்களைக் கையாளும் சிறப்பு பயிற்சிகள் கோவிந்தம்மாளுக்கு வழங்கப்பட்டன. அந்த வகையில் கோவிந்தம்மாளும் நவீன ரக ஆயுதங்களை ஏந்தி போர் செய்யும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றார்.

போர்முனையில் பெண்களையும் ஆண்களுடன் இணைந்து போரிட வைக்க வேண்டுமென்பது, நேதாஜியின் நோக்கம். ஆண்களுடன் சேர்ந்து போர்முனைக்கு செல்ல விருப்பம் தெரிவித்தவர்கள் மட்டுமே பர்மாவில் இந்த சிறப்பு பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

இரண்டாம் உலகப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த போது ஜான்சிராணி படை இந்திய பர்மிய இம்பால் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அங்கு ஜான்சிராணி படையின் பெண்கள் கொரில்லாப் படையினரின் தாக்குதலைச் சமாளித்து எதிர்த் தாக்குதல் செய்ய வேண்டி வந்தது.




உணவு மற்றும் போர்ச் சாதனங்கள் சயாமிய இரயில் பாதை வழியாகத் தான் கொண்டு வரப்படும். அந்தப் பாதையும் தகர்க்கப்பட்டு விட்டது. பசியின் கொடுமையால் ஜான்சிராணி படையினர் காட்டில் கிடைத்த பழங்களைச் சாப்பிட்டனர்.

பழங்களின் நச்சுத் தன்மை காரணமாகப் பெரும்பாலோருக்கு வயிற்றுப் போக்கு; வாந்தி. இந்த நிலையில் பெண்கள் படை எதிரிகளிடம் சிக்கிக் கொள்ளும் ஓர் ஆபத்தான நிலையும் ஏற்பட்டது. எந்த ஒரு பெண்ணும் எதிரிகளிடம் சிக்கிவிடக் கூடாது என்று நேதாஜி நினைத்தார்.

ஜான்சிராணி படையினரை மலாயாவுக்குத் திரும்பி வருமாறு நேதாஜி கட்டளை பிறப்பித்தார். இருப்பினும் படையின் தலைவி கேப்டன் இலட்சுமி சுவாமிநாதன் நேதாஜியின்  கட்டளையை ஏற்க மறுத்து விட்டார். அதற்கும் காரணம் இருந்தது. நேதாஜியின் கட்டளை மீறப்பட்டது அதுவே முதன்முறையாகும்.

பெண்கள் பலர் பசி பட்டினியால் நடக்கக் கூட முடியாத நிலையில் இருந்தனர். இரயில் சேவையும் இல்லை. கடல் வழியாகவும் மலாயாவுக்குத் திரும்பிப் போக முடியாது. ஆங்கிலேயர்கள் வான்வழியாகவும் தாக்குதல் நடத்திக் கொண்டு இருந்தனர்.

காட்டு வழியாகத் தான் திரும்பி வர வேண்டும். அதுவும் இயலாத காரியம். கரடு முரடான காட்டுப் பாதை. காட்டு விலங்குகள் கடந்து போகும் காட்டுப் பாதை. அதனால் தான் நேதாஜியின் வேண்டுகோளைக் கேப்டன் லட்சுமி மறுத்தார்.

மருத்துவமனை என்பதைக் குறிக்க பொதுவாக அதன் கூரையில் செஞ்சிலுவைச் சங்க அடையாளம் குறிக்கப்பட்டு இருக்கும். எதிரி விமானங்கள் அதன் மீது குண்டுகளைப் போட மாட்டார்கள். அது நாடுகளுக்கு இடையே செய்து கொள்ளப்பட்ட ஒரு போர்க் கால சாசனம். ஓர் இரவு அந்த மருத்துவமனையின் மீது வானில் இருந்து ஆங்கிலேயர்கள் குண்டுகளை வீசினார்கள்.

மருத்துவமனை தரைமட்டமானது. அங்கே சிகிச்சை பெற்று வந்த இந்திய தேசிய இராணுவத் தளபதிகளில் ஒருவரான எல்லப்பா மிகக் கடுமையாகப் பாதிக்கப் பட்டார். அவர் ஏற்கனவே துப்பாக்கிக் குண்டுகள் பட்டு அங்கே தான் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆங்கிலேயக் கொரில்லப் படையின் குண்டு வீச்சுகளால் மேலும் பெண்கள் சிலர் கொல்லப் பட்டனர். அந்தச் சண்டையில் கோவிந்தம்மாள் தப்பித்துக் கொண்டார். ஆனால் அவரின் உயிர்த் தோழிகளான ஸ்டெல்லா என்பவரும் ஜாஸ்மின் என்பவரும் கொல்லப் பட்டார்கள். கோவிந்தம்மாள் இறக்கும் வரையில் அந்த நிகழ்ச்சியை அடிக்கடி சொல்லி வந்தார்.

1945-ஆம் ஆண்டு ஆகஸ்டு 16-ஆம் தேதி ஜான்சி ராணிப் படை கலைக்கப் பட்டது. 1945-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி வரை கோவிந்தம்மாள் ஜான்சி ராணிப் படையில் சேவை செய்தார். பின்னர் 1949-ஆம் ஆண்டில் தன் கணவர் மற்றும் 6 குழந்தைகளுடன் கோவிந்தம்மா தமிழகம் வந்தார்.

இந்திய மத்திய அரசின் தியாகி பட்டம் பெற்றார். ஆனால் மத்திய அரசு ஓய்வு ஊதியம் தர மறுத்து விட்டது. இருந்தாலும் மத்திய அரசிற்குப் பதிலாக 1970-ஆம் ஆண்டு தமிழக அரசு கோவிந்தம்மாளுக்குத் தியாகிகள் ஓய்வூதியம் வழங்கியது. பல முறை மனு செய்தும் மத்திய அரசின் மருத்துவ உதவி, இலவச வீட்டுமனை போன்ற உதவிகள் கோவிந்தம்மாளுக்குக் கிடைக்கவில்லை.

1960-ஆம் ஆண்டில் நடந்த ஒரு சாலை விபத்தில் கோவிந்தம்மாளின் கணவர் இறந்து போனார். அவரின் கணவர் ஒரு லாரி டிரைவர் ஆகும். வேறு வழி இல்லாமல் கோவிந்தம்மாள் கூலி வேலைகள் செய்தார். தன் 4 மகள்கள் 2 மகன்களையும் படிக்க வைத்தார். பின்னர் அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தார்.

அதன் பின்னர் கோவிந்தமாள் ஒரு பள்ளியில் மதிய உணவு சமைப்பது; மாவு மில்லில் கூலி வேலை செய்வது என பல்வேறு பணிகளைச் செய்தார். ஒரு கட்டத்தில் வயோதிகம் காரணமாக எந்த வேலையும் செய்ய முடியாமல் போனது. மாநில அரசு வழங்கும் சொற்ப ஓய்வூதியத்தைப் பெற்று வாழ்ந்து வந்தார்.




வறுமையில் வாடிய கோவிந்தம்மாள் முதுமையின் காரணமாக 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி மதியம் 3:00 மணிக்கு வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் காலமானார். அப்போது அவருக்கு வயது 89.

நாட்டின் விடுதலைக்காக தன்னுடைய சொத்துக்களை வழங்கியவர் தியாகி கோவிந்தம்மாள். கடைசி காலத்தில் தமிழக அரசு தனக்கு ஒரு வீடு கட்டி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். கடைசி வரை அந்த வேண்டுகோள் நிறைவேற்றப்படவே இல்லை என்பது ஒரு வரலாற்றுச் சோகம்.

தன்னுடைய சொத்துக்களை எல்லாம் இந்திய நாட்டின் தேசிய விடுதலைக்காக அர்ப்பணித்த கோவிந்தம்மாள் கடைசி வரையில் சொந்த வீடு இல்லாமலேயே வாழ்ந்தார். மரணிக்கும் தருவாயில் ஆறடி நிலம் கூட இல்லாமல் தான் மறைந்து போனார்!

இந்திய நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் உயிர்களைப் பணயம் வைத்த தியாக சீலர்கள் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். கண்ணீரையும் செந்நீரையும் சிந்தி இருக்கிறார்கள். நினைத்துப் பார்க்கவே மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.

அப்படி தியாகம் செய்தவர்களில் பலர் எப்போதும் நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் கோவிந்தம்மாள்.

02 நவம்பர் 2017

இந்தோனேசியாவை ஆட்சி செய்த பல்லவர்கள்

மயில் - அக்டோபர் 2017
 

மேற்கு ஜாவாவில் கிடைத்த கி.பி. 5-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் பல்லவர் காலத்திய கிரந்த எழுத்துக்களில் பொறிக்கப்பட்டு உள்ளன. அந்தக் கல்வெட்டுகள் ஜாவாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்த தர்மநகரப் பேரரசையும் அந்தப் பேரரசை ஆட்சி செய்த பூரணவர்மன் அரசனையும் குறிப்பிடுகின்றன.

வடக்குச் சுமத்திராவில் சோழர், பாண்டியர், பல்லவர், சேரர் என்னும் பெயர்களில் பழங்குடி மக்கள் இன்னும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய மூதாதையர்கள் சோழ, பாண்டிய, பல்லவ நாடுகளில் இருந்து வந்தவர்களாகக் கருதப் படுகின்றனர்.

கி.பி. 550-750-ஆம் ஆண்டுகளில் கடல் மார்க்கமாக இந்தோனேசியாவிற்குத் தமிழ் வணிகர்கள் சென்றார்கள் என்பதற்கானச் சான்றுகள் இருக்கின்றன. இது தொடர்பாக இந்தோனேசியாவில் சில பல கல்வெட்டுகள் கிடைத்து உள்ளன. 


இராஜசிம்மன் என்பவர் பல்லவ அரசர். பலருக்கும் தெரிந்த அரசர். இவர் காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோயிலை எழுப்பியவர். அந்தக் கோயிலின் தெற்குப் பக்கத்தில் பல சிறு கோயில்கள் உள்ளன. அந்தக் கோயிலுக்குப் போனவர்கள் அந்தச் சிறு கோயில்களைப் பார்த்து இருக்கலாம்.

அவற்றுள் மூன்றாவதாக உள்ள கோயிலை இராஜசிம்மனின் மனைவி ரங்கபதாகை என்பவர் கட்டி இருக்கிறார். அதனை அந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கின்றது. அதில் ரங்கபதாகையின் தந்தையாரின் பெயர் சைல அதிராஜா என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தப் பெயர் இந்தோனேசிய சைலேந்திர அரசனையே சுட்டிக் காட்டுகிறது. இப்படி நான் சொல்லவில்லை. வரலாற்று ஆசிரியர் தி.நா. சுப்ரமணியம் அவர்கள் எழுதி இருக்கும் The Pallavas of Kanchi in Southeast Asia (பக்கம்: 43) எனும் நூலில் சொல்லி இருக்கிறார். 


இன்னும் ஒரு விசயம். சைலேந்திரப் பேரரசு ஜாவாவில் ஆட்சி செய்யும் போது தமிழகத்தில் பல்லவர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். இரண்டுமே சம கால ஆளுமைகள். அதை நினைவில் கொள்ளுங்கள்.

மத்திய ஜாவாவைவும் மேற்கு ஜாவாவையும் ஆட்சி செய்த சைலேந்திர அரசர்களை 'மீனாங்கித சைலேந்திரர்' என்று அழைத்து இருக்கிறார்கள். மீனாங்கித சைலேந்திரர் என்றால் மீனைச் சின்னமாகக் கொண்ட தலைவர் என்று பொருள். அது ஒரு பட்டப் பெயர்.

இந்த மீனாங்கிதச் சைலேந்திரர் எனும் அடைமொழியில் இருந்து தான் மினாங்கபாவ் (Minangkabau) எனும் பெயர் வந்தது. மினாங்கபாவ் மக்கள் மேற்கு ஜாவாவில் இருந்து மத்திய சுமத்திராவிற்குப் புலம் பெயர்ந்தவர்கள். 


பின் நாட்களில் இவர்கள் மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் குடியேறினார்கள். இவர்கள் கட்டும் வீடுகள் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். மினாங்கபாவ் மக்கள் கட்டும் வீடுகளை Rumah Gadang என்று அழைக்கிறார்கள்.

மஜபாகித் அரண்மனைகளில் ஒரு பாடலைப் பாடுவார்கள். அதன் பெயர் தேசவர்ணா. இந்தப் பாடலுக்கு நாகரத்தகாமா எனும் மற்றொரு பெயரும் உண்டு. கி.பி.1365-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பாடல். பிரபஞ்சா எனும் கவிஞர் எழுதியது. அதில் இந்த மினாங்கபாவ் எனும் சொல் வருகிறது.
(சான்று: Robson, S. O., (1995), Desawarnana (Nagarakrtagama) by Mpu Prapanca).

மினாங்கபாவ் மக்கள் சுமத்திராவில் வாழ்ந்த இடத்தின் பெயர் மினாங்கபாவ் பெருநிலம் (Minangkabau Highlands).

இந்தோனேசியாவை ஆட்சி செய்த சிங்காசாரி பேரரசிற்கும் மஜபாகித் பேரரசிற்கும் நெருக்கமாக இருந்த ஆதித்தியவர்மன் (Adityawarman) எனும் அரசர்தான் மினாங்கபாவ் சிற்றரசை உருவாக்கினார்.


மினாங்கபாவ் சிற்றரசு 1347-ஆம் ஆண்டு பாகாருயூங் (Pagaruyung) எனும் இடத்தில் உருவாக்கப்பட்டது.
(சான்று: Coedès, George (1968). Walter F. Vella, ed. The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. பக்கம்: 232)

இவர்களின் கலாசாரம் தாய்வழி மரபைச் சேர்ந்தது (Matrilineal). பெண்களே ஒரு குடும்பத்தின் தலைவருக்குரிய தகுதியைப் பெறுகிறார்கள். சொத்துடைமையும் நிலவுடைமையும் ஒரு தாயிடம் இருந்து ஒரு மகளிடம் போய்ச் சேர்கிறது. அதே சமயத்தில் அரசியல் சமய தொடர்பான காரியங்களுக்கு ஆண்கள் பொறுப்பு வகிக்கிறார்கள்.

இவர்களின் இத்தகைய கலாசார மரபை அடாட் பெர்பாத்தே (Adat Perpatih) என்று அழைக்கிறார்கள். இந்தோனேசியாவில் லாரே புடி கானியாகோ (Lareh Bodi Caniago) என்று அழைக்கிறார்கள்.


மேற்கு சுமத்திராவில் மட்டும் 40 இலட்சம் மினாங்கபாவ் மக்கள் வாழ்கின்றனர். இந்தோனேசியாவின் மற்ற பகுதிகளிலும் மலேசியாவிலும் ஏறக்குறைய 30 இலட்சம் மினாங்கபாவ் மக்கள் வாழ்கின்றனர்.

அந்த வகையில் மினாங்கபாவ் இனத்தவர் சைலேந்திர பேரரசைச் சார்ந்தவர்கள். சைலேந்திர பேரரசு பல்லவர்களின் பின்னணியைக் கொண்டது. மீனாங்கித எனும் சொல்லில் இருந்து தான் மினாங்கபாவ் எனும் சொல் மருவி வந்தது.

இன்னும் ஒரு விசயம். பாண்டியர்களின் கொடியில் இரட்டை கயல் மீன்கள் பொறிக்கப்பட்டு இருக்கும். அனைவரும் அறிந்த உண்மை. இந்தோனேசியாவை ஆட்சி செய்த சைலேந்திரர்களுக்கும் கயல்மீன் சின்னமாக இருந்தது.

அதனால் சைலேந்திரர்கள் தமிழகத்தில் தோன்றியவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் திருவிளையாடல் புராணத்தில் குறிப்பிடப்படும் மலையத்துவச பாண்டியன் வழி வந்தவர்களாக இருக்கலாம் என அறிஞர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி கூறுகின்றார். (The Minangkabau adat was derived from animist and Hindu-Buddhist beliefs before the arrival of Islam. சான்று: https://en.wikipedia.org/wiki/Minangkabau_people)

ஆதித்தியவர்மன்
மினாங்கபாவ் எனும் சொல் எப்படி உருவானது என்பதற்கு ஒரு புராணக் கதையும் உண்டு. வரலாற்றை ஆய்வு செய்யும் போது எல்லாத் தரப்புகளையும் சமநிலையில் இருந்து நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

அதன்படி மெனாங் கெர்பாவ் எனும் சொற்கள் திரிந்து மினாங்கபாவ் ஆனது என்றும் சொல்கிறார்கள். மினாங்கபாவ் என்பது மினாங், கபாவ் ஆகிய இரு சொற்களில் இருந்து வந்ததாகச் சொல்கிறார்கள். மெனாங் (Menang) என்றால் வெற்றி. கெர்பாவ் (Kerbau) என்றால் எருது. வெற்றி பெறும் எருது என்று பொருள் படுகிறது. (சான்று: https://www.saudiaramcoworld.com/issue/199104/on.culture.s.loom.htm)

புராணக் கதை என்ன சொல்கிறது என்று பார்ப்போம். மினாங்கபாவ் மக்களுக்கும் அண்டை மாநிலத்தின் இளவரசருக்கும் எல்லைத் தகராறு. இரண்டு எருதுகளை மோத விட்டால் தகராறு தீர்க்கப் படலாம் என்று மினாங்கபாவ் மக்கள் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள். அண்டை மாநிலத்தின் இளவரசரும் ஒப்புக் கொண்டார்.


அண்டை மாநிலத்தின் இளவரசர் ஒரு பெரிய திடகாத்திரமான எருதைக் கொண்டு வந்தார். மினாங்கபாவ் மக்கள் பசியால் வாடி நின்ற ஓர் எருது கன்றுக் குட்டியைக் கொண்டு வந்தனர். வயற்காட்டில் பெரிய எருதைப் பார்த்த கன்றுக் குட்டி, பால் குடிப்பதற்காக அதை நோக்கி ஓடியது. சின்னக் கன்றுக் குட்டி தானே என்று பெரிய எருது அசட்டையாக இருந்து விட்டது.

பெரிய எருதின் மடியில் பால் குடிக்க முயற்சி செய்த போது கன்றுக் குட்டியின் கூரிய கொம்புகள் பாய்ந்து பெரிய எருமை இறந்து போனது. அந்த வகையில் மினாங்கபாவ் மக்கள் வெற்றி பெற்றனர். எல்லைத் தகராறும் தீர்ந்து போனது. அது ஒரு புராணக் கதை.

14-ஆம் நூற்றாண்டில் ஜாவாவை ஆட்சி செய்த சிங்காசாரி, மஜபாகித் பேரரசுகளுடன் நட்புறவு கொண்டிருந்த ஆதித்தியவர்மன் என்பவர் மினாங்கபாவ் பேரரசைத் தோற்றுவித்தார். மினாங்கபாவ் பீடபூமியில் மினாங்கபாவ் பேரரசைத் தோற்றுவித்த ஆதித்தியவர்மன் புத்த சமயத்தைச் சார்ந்தவர். 1347-ஆம் ஆண்டில் இருந்து 1375-ஆம் ஆண்டு வரை மினாங்கபாவ் பேரரசை ஆட்சி செய்தார்.


மத்திய சுமத்திராவில் ஒரு மாநிலமாக இருந்த மலையபுரத்தின் அரசராக இருந்தவர் அந்த ஆதித்யவர்மன். இந்த மலையபுரம் (Malayapura) இப்போது பாகாருயூங் (Pagarruyung) என்று அழைக்கப்படுகிறது.
(சான்று: An Indonesian Frontier: Acehnese and Other Histories of Sumatra/ Adat: An Examination of Conflict in Minangkabau)

1309-இல் இருந்து 1328 வரை மஜபாகித் பேரரசை ஆட்சி செய்த ஜெயா நெகாரா என்பவரின் ஒன்றுவிட்ட சகோதரர்தான் ஆதித்தியவர்மன். இவர் திரிபுவனராஜா எனும் பேரரசரின் பேரனும் ஆவார். மஜபாகித் பேரரசின் மூத்த அமைச்சராக ஆதித்யவர்மன் இருந்த போதுதான் மினாங்கபாவ் பேரரசைத் தோற்றுவித்தார்.

ஆதித்யவர்மன் மறைந்த பிறகு மினாங்கபாவ் பேரரசு மூன்று சிற்றரசுகளாகப் பிரிந்து போயின. மூன்று அரசர்கள் தனித்தனியாக ஆட்சி செய்தனர். ராஜா ஆலாம், ராஜா ஆடாட், ராஜா இபாடாட் எனும் மூன்று அரசர்கள். சுருக்கமாக ராஜா தீகா செலோ (Rajo Tigo Selo) என்று அழைக்கப் பட்டார்கள். 


இந்தோனேசியாவைப் பற்றிய பல செய்திகள் சங்க கால நூல்களில் உள்ளன. இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மொலுக்காஸ் போன்ற தீவுப் பகுதிகள் முந்நீர்ப் பழந்தீவு என அந்த நூல்களில் சொல்லப் படுகின்றன.

தமிழர்கள் ஜாவாவைச் சாவகம், சாவகத் தீபம், யவத் தீபம் என்று அழைத்து இருக்கிறார்கள். சுமத்திராவை ஸ்ரீ விசயம், சொர்ணதீபம் என்றும் அழைத்து இருக்கிறார்கள்.

பழந்தமிழ் இலக்கியச் சான்றுகளில் தமிழ் வணிகர்களும், தமிழ்ப் பெருமக்களும் சங்க காலத்திற்கு முந்திய காலத்தில் இருந்தே அந்தமான், நிக்கோபார் தீவுகள் வழியாக இந்தோனேசியத் தீவுகளுக்குச் சென்று இருக்கிறார்கள். ஜாவாவுடன் தொடர்பு வைத்து இருக்கிறார்கள்.





29 அக்டோபர் 2017

அச்சம் என்பது மடமையடா



அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது உடமையடா

கனக விசயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இடைபட வாழ்ந்தான் பாண்டியனே.

கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை

திரைப்படம்= மன்னாதி மன்னன்
பாடலாசிரியர்= கண்ணதாசன்
இசை= எம். எஸ். விசுவநாதன்
பாடியவர்= டி. எம். சௌந்தரராஜன்
ஆண்டு= 1960

26 அக்டோபர் 2017

கெடா வரலாறு - 3

கெடாவை ஆட்சி செய்த தாம்பிரலிங்கா பேரரசு

இந்தோனேசியாவை ஸ்ரீ விஜய பேரரசு, மஜபாகித் பேரரசு, சைலேந்திரா பேரரசு, மத்தாரம் பேரசு, சிங்காசாரி பேரரசு போன்ற அரசுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து உள்ளன. 



இந்தப் பேரரசுகள் ஆட்சி செய்வதற்கு முன்னரே தீபகற்ப மலேசியாவை இன்னோர் இந்தியப் பேரரசும் ஆட்சி செய்து இருக்கிறது.

அந்தப் பேரரசின் பெயர் தான் தாம்பிரலிங்கா (Tambralinga) பேரரசு. கி.பி. 600-ஆம் ஆண்டுகளில் தீபகற்ப மலேசியாவின் வட பகுதிகளை தாம்பிரலிங்கா பேரரசு ஆட்சி செய்து இருக்கிறது.

தவிர தாய்லாந்தின் பற்பல பகுதிகளையும் ஆட்சி செய்து இருக்கிறது. அது மட்டும் அல்ல. ஆகக் கீழே தெமாசிக் வரை அதன் ஆட்சி பரந்து விரிந்து போய் இருந்து இருக்கிறது. சிங்கப்பூரின் பழைய பெயர் தான் தெமாசிக்.




சொல்லப் போனால் முக்கால்வாசி தென்கிழக்கு ஆசியாவையே அந்த தாமிபிரலிங்கா ஆட்சி செய்து இருக்கிறது. ஏறக்குறைய 600 ஆண்டுகளுக்கும் மேலாக தனிக்காட்டு ராஜா ஆட்சி.

தாம்பிரலிங்கா பேரரசிற்குப் பின்னர் வந்தவை தான் இந்தோனேசியாவின் ஸ்ரீ விஜய பேரரசு, மஜபாகித் பேரரசு போன்ற பேரரசுகள். ஆக தென்கிழக்கு ஆசியாவில் இந்திய ஆளுமைக்குப் பிள்ளையார் சுழி போட்ட ஓர் இந்திய அரசு இருந்தது என்றால் அது இந்தத் தாம்பிரலிங்கா பேரரசு தான்.

பூஜாங் சமவெளியை (Bujang Valley) இந்திய அரசர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். தெரிந்த விசயம். அங்கே இந்து சமயமும் புத்த சமயமும் சம காலத்தில் வளர்ச்சி கண்டு இருக்கின்றன. தெரிந்த விசயம்.

இந்தப் பூஜாங் சமவெளியை முதன்முதலில் ஆட்சி செய்தது தாம்பிரலிங்கா பேரரசாகத் தான் இருக்க முடியும். நான் சொல்லவில்லை. வரலாற்று ஆசிரியர்களின் ஒருமித்தக் கருத்தும் அப்படித் தான் இருக்கிறது. இதையே மலேசிய வரலாற்று ஆசிரியர் டத்தோ நடராஜாவும் உறுதி படுத்துகிறார்.




ஒரு காலக் கட்டத்தில் தாம்பிரலிங்கா பேரரசு வரலாற்றில் இருந்து காணாமல் போய் விட்டது. எப்படி என்று கேட்க வேண்டாம். வரலாற்றுப் பதிவுகளில் இருந்து அடிபட்டுப் போய் விட்டது.

தாம்பிரலிங்கா எனும் ஓர் அரசு இருந்ததாகப் பலருக்கும் தெரியாமல் போனது. ஆனால் அண்மைய காலத்தில் தான் தாம்பிரலிங்கா பேரரசைப் பற்றிய உண்மைகள் தெரிய வந்துள்ளன.

1368-ஆம் ஆண்டில் இருந்து 1644-ஆம் ஆண்டு வரை சீனாவை மிங் அரசர்கள் (Ming dynasty) ஆட்சி செய்தார்கள். இவர்களின் காலத்தில் தான் சீன வரலாறு ஓரளவிற்கு முழுமையாக எழுதப் பட்டது.

அப்படி எழுதப்பட்ட வரலாற்றில் தான் தென்கிழக்காசிய வரலாற்றுப் பதிவுகளும் உள்ளன. சூ கோசென் (Zhu Guozhen), ஹு இங்லின் (Hu Yinglin), இன் கிங் (Yǐn Qìng) போன்ற சீன வரலாற்று ஆசிரியர்களை இங்கு குறிப்பிடுகிறேன். 




அந்தப் பதிவுகளில் தாம்பிரலிங்காவைப் பற்றி அந்தச் சமயத்தில் அவர்கள் கேட்டதை அவர்கள் பார்த்ததை எல்லாம் பதிவு செய்து இருக்கிறார்கள்.

(சான்று: http://link.library.canton.ma.us/portal/Coswells-guide-to-Tambralinga--a-novel-by/3iTEgdh6Ves/ - Coswell's guide to Tambralinga : a novel, by Scott Landers; Landers, Scott, 1952; New York, Farrar, Straus and Giroux, 2004)

இந்தத் தாம்பிரலிங்கா வரலாற்றுப் பார்வையில் ஒரு சிக்கலான இடத்தில் வந்து நிற்கிறோம். எப்படி புரிய வைக்கிறது என்று சற்றே தடுமாறுகின்றேன். இருந்தாலும் சமாளித்து விடுவோம். சரி.

முன்பு காலத்தில் அதாவது 10-ஆம் நூற்றாண்டில் நாகர ஸ்ரீ தர்மராஜா (Nagara Sri Dharmaraja) அரசு எனும் ஓர் அரசு தாய்லாந்தை ஆட்சி செய்து வந்து இருக்கிறது. எந்த ஆண்டு? பத்தாம் நூற்றாண்டு. சரிங்களா.

இந்த நாகர ஸ்ரீ தர்மராஜா அரசின் அப்போதைய அசல் பெயர் அதே நாகர ஸ்ரீ தர்மராஜா தான். ஆனால் அந்த அரசின் இப்போதைய பெயர் நாக்கோன் சி தாமராட் (Nakhon Si Thammarat). புரிந்து கொண்டீர்களா. பழைய பெயர் நாகர ஸ்ரீ தர்மராஜா. புதிய பெயர் நாக்கோன் சி தாமராட். இது ஒரு தாய்லாந்து மொழிச் சொல்.




ஆக இப்போதைய தாய்லாந்து வரலாற்றில் நாகர ஸ்ரீ தர்மராஜா எனும் பழைய பெயர் இல்லை. நாக்கோன் சி தாமராட் எனும் புதுப் பெயர் தான் இருக்கிறது. அந்தப் பெயரில் தான் அழைக்கப் படுகிறது. தாய்லாந்து பள்ளிப் பாடப் புத்தகங்களிலும் சொல்லப் படுகிறது.

(சான்று: http://link.library.canton.ma.us/portal/Coswells-guide-to-Tambralinga--a-novel-by/3iTEgdh6Ves/ - Coswell's guide to Tambralinga : Landers, Scott, 1952; New York, Farrar, Straus and Giroux, 2004)

மறுபடியும் கவனமாகக் கேளுங்கள். இந்த நாக்கோன் சி தாமராட் எனும் நாகர ஸ்ரீ தர்மராஜா இருக்கிறதே இந்த அரசின் முன்னைய பெயர் தான் தாம்பிரலிங்கப் பேரரசு.

முதன்முதலாக தாம்பிரலிங்கா என்று அழைத்து இருக்கிறார்கள். அதன் பின்னர் நாகர ஸ்ரீ தர்மராஜா என்று அழைத்து இருக்கிறார்கள். அதன் பின்னர் நாக்கோன் சி தாமராட் என்று அழைத்து இருக்கிறார்கள். இப்போதும் அழைத்து வருகிறார்கள்.

ஆக இந்தத் தாம்பிரலிங்கப் பேரரசு எனும் பெயர் தான் வரலாற்றில் இருந்து மறக்கப்பட்டு மறைந்து போன ஒரு இந்தியப் பெயர். புரியுதுங்களா.

தாம்பிரலிங்கப் பேரரசை ஆட்சி செய்த அனைவருமே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.




தாம்பிரலிங்கப் பேரரசின் வரலாறு ஓர் உண்மையான வரலாறு. அந்த வரலாற்று உண்மையை தாய்லாந்து மக்களும் ஏற்றுக் கொள்ள்கிறார்கள். அந்த வகையில் தாய்லாந்து நாட்டு மக்கள் வரலாற்றை வரலாறாகப் பார்க்கின்றார்கள்.

இந்தப் பக்கம் இந்தோனேசியாவில் இந்திய வரலாற்றைத் தங்களின் வரலாறாகப் போற்றிப் புகழ்கிறார்களோ அதே போலத் தான் தாய்லாந்து மக்களும் தாம்பிரலிங்கப் பேரரசை வாயாரப் போற்றிப் புகழ்கின்றார்கள்.

ஆனால் என்ன. நாக்கோன் சி தாமராட் என்று பெயரை மாற்றிப் புகழ்கின்றார்கள். மற்ற இடங்களில் அப்படியா. வரலாற்றுச் சுவடுகளை அவிழ்த்துப் போட்டு அந்தச் சுவடுகள் வெட்கப்படும் அளவிற்குச் சிதைத்து விட்டார்கள். சரிங்களா.

பின்னர் காலத்தில் அதாவது 12-ஆம் நூற்றாண்டில் இந்தத் தாம்பிரலிங்கப் பேரரசு தான் ஸ்ரீ விஜய பேரரசின் ஆளுமையின் கீழ் வந்தது. இந்தோனேசியாவை ஆட்சி செய்த ஸ்ரீ விஜய பேரரசைத் தான் சொல்கிறேன்.

அந்த வகையில் கூட்டிக் கழித்து வகுத்துப் பார்த்தால் பூஜாங் சமவெளியை இந்தத் தாம்பிரலிங்கப் பேரரசு தான் ஆட்சி செய்து இருக்க வேண்டும். இந்தத் தாம்பிரலிங்கப் பேரரசிற்குப் பின்னர் தான் பூஜாங் சமவெளியை ஸ்ரீ விஜய பேரரசு ஆட்சி செய்து இருக்கிறது. 




மாறன் மகாவம்சன் எனும் பாண்டிய இளவரசனை விட்டு விடுவோம். ஏன் என்றால் இந்த தாம்பிரலிங்கா அரசு வருவதற்கு முன்னாலேயே ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே கடாரத்தில் கால் வைத்து விட்டுப் போய் விட்டார்.

கி.பி. 1025-ஆம் ஆண்டு ராஜேந்திர சோழன் என்பவர் கடாரத்திற்கு வந்தார். அந்தப் பச்சை மண்ணை மிதித்துத் துவைத்துக் காயப் போட்டுப் போனானே அந்தச் சமயத்தில் பூஜாங் சமவெளியின் ஆட்சி  ஸ்ரீ விஜய பேரரசின் கீழ் இருந்தது. இந்தக் காலக் கட்டத்தைத் தான் இப்போது குறிப்பிடுகிறேன்.

அந்தப் பார்வையில் பார்க்கும் போது ஸ்ரீ விஜய பேரரசிற்கு முன்னர் தாம்பிரலிங்கப் பேரரசு தான் ஒரு கட்டத்தில் ஒட்டு மொத்த தீபகற்ப மலேசியாவையே ஆட்சி செய்து இருக்கிறது.

(சான்று Munoz, Paul Michel, Early kingdoms of the Indonesian archipelago and the Malay Peninsula. Singapore: Editions Didier Millet, 2006.)

சரி. இனி தாம்பிரலிங்கா வரலாற்றுச் சான்றுகளைப் பார்க்கப் போகிறோம்.

கி.பி.600-ஆம் ஆண்டுகளில் தாங் வம்சாவளியினர் (Tang dynasty) சீனாவை ஆட்சி செய்து வந்தார்கள். அவர்களின் ஆட்சிக் காலத்தில் அதாவது கி.பி.616-ஆம் ஆண்டு காவ்சூ (Emperor Gaozu) எனும் அரசர் சீனாவை ஆட்சி செய்து இருக்கிறார். இவர் ஆட்சி செய்யும் போது தாம்பிரலிங்கா அரசு சீனாவிற்குப் பாதுகாப்புக் காப்பீடு வழங்கி உள்ளது. சுருக்கமாகச் சொன்னால் கப்பம் கட்டி இருக்கிறது. 




தாம்பிரலிங்கா என்றால் என்ன என்றும் சீனக் காலச் சுவடுகள் விளக்கம் கொடுத்து இருக்கின்றன. அவை தாங் (Tang dynasty) வம்சாவளிக் காலச்சுவடுகள்; மிங் (Ming dynasty) வம்சாவளிக் காலச்சுவடுகள்.

கி.பி.640; கி.பி.648;  கி.பி.818; கி.பி.860; கி.பி.873-ஆம் ஆண்டுகளில் தாம்பிரலிங்கா அரசர்கள் சீனாவிடம் கப்பம் கட்டி இருக்கிறார்கள். அந்தச் சுவடுகளின்படி தாம்பிரலிங்கா என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்.

தாம்பிரம் என்றால் செம்பு. இது சிவப்பு நிறத்தையும் குறிக்கும். லிங்கா என்றால் இந்துக்களின் சின்னம். சிவபெருமானைக் குறிக்கும் ஒரு தெய்வீகத் தன்மை என்று அந்தச் சுவடுகள் சொல்கின்றன.   

(சான்று: Cœdès, George, The Indianized states of Southeast Asia. Canberra: Australian National University Press, 1975.)

(சான்று: http://www.ayutthaya-history.com/References.html - The late David K. Wyatt was the John Stambaugh Professor Emeritus of History at Cornell University until his retirement.)

தாம்பிரலிங்கா அரசு ஒரு காலக் கட்டத்தில் ஸ்ரீ விஜய பேரரசின் கீழ் இருந்து இருக்கிறது. ஸ்ரீ விஜய பேரரசைச் சீனர்கள் சான்போகி (Sanfoqi) என்று அழைத்து இருக்கிறார்கள்.

தாம்பிரலிங்கா அரசு தீபகற்ப மலாயாவின் மத்தியப் பகுதியை ஆட்சி செய்து வந்து இருக்கிறது. இந்தத் தீபகற்ப மலாயாவின் மத்தியப் பகுதி தான் இப்போதைய தென் தாய்லாந்து ஆகும்.

மலாயாவுக்கு வந்த இலங்கை வணிகர்கள் தாம்பிரலிங்காவைச் சாவகம் (Savaka) என்று அழைத்து இருக்கிறார்கள்.

அராபிய வணிகர்கள் சபாஜ் (Zabaj) என்றும் சபாக்கா (Zabaka) என்றும் அழைத்து இருக்கிறார்கள்.

தென்னிந்திய வணிகர்கள் தாம்பிரலிங்கம் (Tambralingam) என்றும் வட இந்திய வணிகர்கள் தாம்பிரலிங்கராத் (Tambralingarath) என்றும் அழைத்து இருக்கிறார்கள். பாரசீக மொழியில் ராத் என்றால் நாடு.




தாம்பிரலிங்காவின் தலைப்பட்டினம் எதுவாக இருந்து இருக்கும் என்பதைப் பற்றி இன்றும்கூட ஆய்வு செய்து வருகிறார்கள். கிரேக்க நாட்டு அறிஞர் குளோடியஸ் தாலமி (Claudius Ptolemy) பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இவர் ஒரு புவியியலாளர்; ஒரு வானியலாளர்; ஒரு சோதிடர்.

பல அறிவியல் நூல்களை எழுதியவர். அவர் எழுதிய நூல்களில் மிகவும் புகழ்பெற்றது வானியல் துறை சார்ந்த அல்மாகெஸ்ட் (Almagest) எனும் நூலாகும். அடுத்தது ஜியோகிரபியா (Geographia) எனும் புவியியல் தொடர்பான நூல்.

இந்த நூலில் தான் தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் படம் வரைந்து காட்டி இருக்கிறார். கி.பி.100-ஆம் ஆண்டுகளில் தென்கிழக்காசியாவில் தக்கோலா (Takola Emporium) எனும் துறைமுகம் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கி இருக்கிறது.

இந்தத் துறைமுகம் கிரா குறுநிலத்தின் (Isthmus of Kra) மேற்குக் கரையில் இருந்தது என்று எழுதி இருக்கிறார்.

ஒரு செருகல். மலாயாவையும் தாய்லாந்து நாட்டையும் இந்தக் கிரா குறுநிலம் தான் பிரிக்கிறது. சரி. 




தாம்பிரலிங்கா அரசின் தலைப்பட்டணமாகத் தக்கோலா துறைமுகம் இருந்து இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருத்து கூறுகின்றனர்.

தக்கோலா துறைமுகத்தில் தென்னிந்தியாவின் கலிங்கத்தைச் சேர்ந்த தமிழர்கள் அதிகமாகக் குடியேறியதாகவும் அகழாய்வுச் சான்றுகள் கூறுகின்றன.

(சான்று: http://www.globalsecurity.org/military/world/malaysia/history-takola.htm - Judging from the only ancient inscription fromTakopa district the settlers from India are Dravidians from East coast of India where Tamil was spoken.)

ஆனாலும் அந்தத் தமிழர்கள் அங்கே ஓர் அரசாங்கத்தை உருவாக்கி இருக்க முடியாது என்பதே வரலாற்று ஆசிரியர்கள் பலரின் பொதுவான கருத்து.

எது எப்படி இருந்தாலும் தாம்பிரலிங்கா எனும் ஓர் இந்திய அரசு மலாயா தீபகற்பத்திலும் தாய்லாந்து நாட்டிலும் கோலோச்சி இமயம் பார்த்து இருக்கிறது. பற்பல போர்க் கோலங்களில் உச்சம் பார்த்து இருக்கிறது. 




இந்தப் பேரரசைப் பற்றிய கல்வெட்டுகள் அல்லது அகழ்வாய்வுகள் எதுவும் அதிகமாகக் கிடைக்கவில்லை. சீன வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தான் அப்படி ஓர் அரசு இருந்ததாக வரலாறும் சொல்கிறது.

பூஜாங் சமவெளியில் மேலும் ஆழமான அகழாய்வுகள் செய்தால் தாம்பிரலிங்கா அரசைப் பற்றிய ரகசியங்கள் வெளியே வரலாம். மலாயா வரலாற்றையே மலைக்க வைக்கும் ரகசியங்கள் மீட்கப் படலாம். ஆனால் அகழாய்வுகள் செய்ய விடுவார்களா.

பூஜாங் சமவெளியைப் பற்றி அக்குவேர் ஆணிவேராகப் பிட்டு பிட்டு வைத்த டத்தோ நடராஜன் அவர்களையே ஓரம்கட்டி விட்டார்கள். அப்புறம் என்னங்க. அவருக்குத் துணையாக நிற்கும் என்னுடைய கோத்தா கெலாங்கி வரலாற்றுப் போராட்டங்களும் அடிபட்டுப் போகின்றன. வேதனையாக இருக்கிறது.

எவ்வளவு காலம் தான் சொந்தப் பணத்தில் ஆய்வுகள் செய்வதாம். சொல்லுங்கள். செடிக், தமிழ் அறவாரியம் போன்ற அமைப்புகள் இப்படிப்பட்ட வரலாற்று ஆய்வுகளுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும். உதவி செய்வார்களா? இதுவும் ஒரு மில்லியன் டாலர் கேள்வி.




கெடா வரலாறு  1
கெடா வரலாறு  2
கெடா வரலாறு  3