13 பிப்ரவரி 2018

பரமேஸ்வராவின் வரலாற்று மலாக்கா பயணம்

மஜாபாகித் அரசு சிங்கப்பூரின் மீது தாக்குதல்கள் நடத்தியதற்கு வேறு ஒரு காரணமும் சொல்லப் படுகிறது. பரமேஸ்வராவின் அந்தர்ப்புரத்தில் நிறைய சேவகப் பெண்கள்; வேலைக்காரப் பெண்கள்; மனைவிமார்கள் இருந்தார்கள். சேவகப்  பெண்களில் ஒருவருக்கும் வேறு ஓர் ஆடவருக்கும் நெருக்கமான  பழக்கம் ஏற்பட்டு உள்ளது. 


பரமேஸ்வராவின் மூத்த அமைச்சர்களில் ஒருவர் அதைப் பற்றி பரமேஸ்வராவிடம் சொல்லி இருக்கிறார். அமைச்சரின் வார்த்தைகளைத் தெய்வ வாக்காக நினைப்பவர் பரமேஸ்வரா. அமைச்சர் சொன்னது உண்மையாகத் தான் இருக்கும் என்று நம்பினார். இருந்தாலும் முழுமையாக நம்பவில்லை.


ஒருநாள் பரமேஸ்வராவிற்கு கோபம் எல்லை மீறிப் போனது. அந்தப் பெண்ணை வரவழைத்துக் கடும் தண்டனையை வழங்கி இருக்கிறார். என்ன தண்டனை தெரியுமா.

அரண்மனை வளாகப் பொதுச் சபையில் நிர்வாணக் கோலம் போடும் தண்டனை. அதாவது நிர்வாணமாக நின்று சபையோர் பார்க்கும் படியான தண்டனை. அது கடும் தண்டனை அல்ல. கொடும் தண்டனை. இப்படிப்பட்ட ஒரு தண்டனையைப் பரமேஸ்வரா வழங்கி இருக்கிறார். 



ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். தன்னுடைய மூத்த அமைச்சரின் ஆலோசனையின் பேரில் தான் பரமேஸ்வரா அந்தத் தண்டனையை வழங்கி இருக்கிறார். தண்டனை வழங்கப்படும் போது பரமேஸ்வரா அரண்மனை வளாகத்தில் இல்லை. வேறு எங்கோ இருந்து இருக்கிறார். சான்றுகள் உள்ளன.

அதனால் அந்தப் பெண்ணின் தகப்பனார் ராஜுனா தாப்பா (Rajuna Tapa) என்பவருக்கு பரமேஸ்வராவின் மீது அளவு கடந்த கோபம் ஏற்பட்டது. பரமேஸ்வராவின் அமைச்சர்களில் ராஜுனா தாப்பாவும் ஒருவராக இருந்தவர். அமைச்சர்களில் இவர் நிதியமைச்சர். 



ஒரு மகளுக்கு இப்படி ஒரு தனடனை கொடுக்கப் பட்டால் எந்தத் தகப்பனுக்குத் தான் கோபம் வராது. எப்படியாவது பரமேஸ்வராவைப் பழி வாங்க வேண்டும் என்று வஞ்சம் வளர்த்துக் கொண்டார். (F2)

[#F2]  Succeeded as ruler of Singapura Temasek on the death of his father, ca 1399. Expelled from Temasek by the Batara of Majapahit working in collusion with the Bendahara, Sang Ranjuna Tapa, 1401.

அப்போது சுமத்திராவில் மஜபாகித் பேரரசின் அரசராக விக்கிரமா வர்த்தனா (Wikramawardhana) என்பவர் இருந்தார். இந்த விக்கிரமா வர்த்தனாவிற்கு அந்தப் பெண்ணின் தகப்பனார் ரகசியமாக ஒரு செய்தி அனுப்பினார். 



சிங்கப்பூரின் மீது படை எடுக்க இதுதான் மிகச் சரியான நேரம். அப்படி நீங்கள் படை எடுத்து வந்தால் உங்களின் மஜபாகித் அரசிற்கு முழு ஆதரவு வழங்குவதற்குத் தயாராக இருக்கிறேன். இதுதான் அமைச்சர் ராஜுனா தாப்பா அனுப்பிய அந்தச் செய்தி.

காலம் காலமாகக் காத்துக் கொண்டு இருந்த விக்கிரமா வர்த்தனா சும்மா இருப்பாரா. உடனடியாகக் களம் இறங்கினார். 300 போர்க் கப்பல்கள், பல நூறு சிறு கப்பல்கள் பலேம்பாங் துறைமுகத்திற்கு வரவழைக்கப் பட்டன. 



அந்தக் கப்பல்களில் 200,000 மஜபாகித் போர் வீரர்கள் பயணித்தனர். சிங்கப்பூர் கடல் பகுதியைத் தாண்டிய மஜபாகித் வீரர்கள் சிங்கப்பூரைத் தாக்கினார்கள்.

இருந்தாலும் பரமேஸ்வராவின் கோட்டையைத் அவ்வளவு எளிதாகத் தாக்கிச் சிதைக்க முடியவில்லை. அத்துடன் கோட்டையின் உள்ளே செல்லவும் முடியவில்லை. பரமேஸ்வராவின் கோட்டை பலம் வாய்ந்த கோட்டையாக இருந்து இருக்கிறது. கருங்கற்களால் கட்டப்பட்ட கோட்டை. இது 1398-ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி. (1. Tsang, Susan; Perera, Audrey - 2011)
[#1] Tsang, Susan; Perera, Audrey (2011), Singapore at Random, Didier Millet, ISBN 978-981-4260-37-4, p. 120

மஜபாகித் படையினர் கோட்டையின் வெளிப்புறத்தில் முற்றுகையிட்டு தாக்குதல்களை நடத்தி வந்தார்கள். அதனால் கோட்டையின் உள்ளே இருந்த போர் வீரர்களும் பொது மக்களும் வெளியே போக முடியவில்லை. 



அந்த வகையில் அவர்களுக்குச் சரியாக உணவும் குடிநீரும் கிடைக்கவில்லை. பசி பட்டினியால் வாட வேண்டிய ஓர் இக்கட்டான நிலைமை.

இந்தத் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர் கோட்டையின் சேமிப்புக் கிடங்கில் நிறையவே உணவு தானியப் பொருட்களைச் சேகரித்து வைத்து இருந்தார்கள். வெளியே இருந்து உணவுப் பொருட்கள் வருவதற்குத் தடை ஏற்பட்டதும் பரமேஸ்வராவின் படை வீரர்களுக்குள் கலகம் மூண்டது. பரமேஸ்வராவிற்கு எதிராகவே வெறுப்பு உணர்வுகள் தோன்றின.

நிலைமை மோசமாகி வருவதைக் கண்ட பரமேஸ்வரா ஒரு கட்டளை பிறப்பித்தார். கோட்டையின் உள்ளே தற்காப்புப் போரில் ஈடுபட்டு இருக்கும் போர் வீரர்களுக்கு உணவுப் பொருட்களைச் வழங்கும்படி அரச கட்டளை. (2. Sabrizain, Sejarah Melayu)
[#2] Sabrizain, Sejarah Melayu - A History of the Malay peninsula - http://www.sabrizain.org/malaya/



சமயம் காத்து இருந்த ராஜுனா தாப்பா உணவு எதுவும் இல்லை என்று சொல்லி கோட்டைக் கதவுகளைத் திறந்து விட்டார். மஜபாகித் படையினர் கோட்டைக்குள் நுழைந்தனர். தயவு தாட்சண்யம் இல்லாமல் எல்லோரையும் வெட்டிக் கொன்றார்கள்.

சிங்கப்பூர் ஆற்றில் இரத்தப் பிரளயமே கரை புரண்டு ஓடி இருக்கிறது. இனியும் அங்கே இருந்தால் உயிருக்கு ஆபத்து என்று எண்ணிய பரமேஸ்வரா அரண்மனையில் தப்பிச் சென்றார். (3. A. Samad, Ahmad, Sulalatus Salatin)
[#3] A. Samad, Ahmad (1979), Sulalatus Salatin (Sejarah Melayu), Dewan Bahasa dan Pustaka, ISBN 983-62-5601-6, pp. 69–70

இந்த நிகழ்விற்குப் பின்னர் தான் மலாக்கா எனும் பெயரே மலாயா வரலாற்றில் இடம் பெறுகிறது.



ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா தன்னுடன் சில நேர்மையான விசுவாசிகளையும் அழைத்துக் கொண்டு சிங்கப்பூரின் செலாத்தார் (Seletar) பகுதிக்கு வந்தார். இது சிங்கப்பூரின் வட பகுதியில் உள்ளது. மலாயாவின் பெருநிலப் பகுதிக்குள் நுழைந்தார். மலாயாவின் வடக்குப் பக்கமாக முன்னேறி வரும் போது மூவார் எனும் இடத்தை அடைந்தார்.

மூவார் பகுதியில் பியாவாக் பூசோக் (Biawak Busuk - அழுகிப் போன உடும்பு) எனும் ஓர் இடம் இருக்கிறது. அதற்கு அருகாமையில் கோத்தா பூரோக் (Kota Buruk) எனும் மற்றோர் இடமும் இருக்கிறது.

இந்த இரு இடங்களில் ஏதாவது ஓர் இடத்தில் தன்னுடைய புதிய அரசை உருவாக்கலாம் என்று பரமேஸ்வரா தீர்மானித்தார். (4. The Indianized States of South-East)



நன்கு ஆராய்ந்து பார்த்தார். அந்த இடங்கள் இரண்டுமே பரமேஸ்வராவுக்குப் பிடிக்கவில்லை. ஒரு புதிய அரசை அமைப்பதற்குப் பொருத்தமாகவும் அமையவில்லை. ஆகவே அவர் தொடர்ந்து வட திசையை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டார்.

அப்படி போகும் போது சுங்கை ஊஜோங் (Sungai Ujong) எனும் இடத்தை அடைந்தார். இந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி ஒரு மீன்பிடி கிராமம் தென்பட்டது. அந்தக் கிராமம் பெர்த்தாம் ஆற்றின் துறைமுகத்தில் இருந்தது. பெர்த்தாம் ஆறு தான் இப்போது மலாக்கா ஆறு (Bertam River - former name of the Malacca River) என்று அழைக்கப் படுகின்றது.

1403-ஆம் ஆண்டு தன் அரண்மனையைக் கட்டிக் கொண்டார். இப்போது செயிண்ட் பால் குன்று (St Paul's Hill) என்று அழைக்கப்படும் இடத்தில் தான் அந்த அரண்மனை கட்டப் பட்டது. 



உதவிக்கு சுமத்திரா தீவில் இருந்து பூகிஸ் மக்கள் பலரையும் அழைத்துக் கொண்டார். தன்னுடைய பெயரை ஸ்ரீ ரத்னா ஆதிவிக்ரம ராஜா (Sri Ratna Adivikrama di-Raja - Seri Rama Adikerma Raja) என்று மாற்றிக் கொண்டார். (F3)

பரமேஸ்வரா தேர்ந்து எடுத்த அந்த மீன்பிடி கிராமம் தான் இப்போதைய மலாக்கா மாநகரம். இதைப் பற்றி இன்னும் ஒரு கதை இருக்கிறது.

ஒரு நாள் ஒரு மரத்தின் அடியில் பரமேஸ்வரா ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி மலாக்கா வரலாற்றுக்கு புதிய வடிவம் கொடுத்தது. அவருடன் இருந்த நாய்களில் ஒன்றை ஒரு சருகுமான் எட்டி உதைத்து ஆற்றில் தள்ளியது.



சருகுமானின் துணிச்சலைக் கண்டு பரமேஸ்வரா அதிசயித்துப் போனார். அவர் ஓய்வு எடுத்த இடத்திலேயே ஓர் அரசை உருவாக்கலாமே எனும் ஓர் எண்ணம் அவருக்குத் தோன்றியது.

அதன்படி மலாக்கா எனும் ஊர் உருவானது. அந்த ஊரே இப்போதைய மலேசிய வரலாற்றில் மலாக்கா பேரரசு என்று பீடு நடை போடுகிறது. அப்படித் தான் இப்போதைய மலாக்காவிற்குப் பெயரும் வந்தது.

இன்னும் ஒரு வரலாற்றுப் பதிவும் உள்ளது. சருகு மானுக்கும் நாய்க்கும் நடந்த மோதலின் போது பரமேஸ்வரா ஒரு மரத்தின் மீது சாய்ந்து இருந்தார். அந்த மரத்தின் பெயர் மலாக்கா மரம். (மலாய்: Pokok Melaka. ஆங்கிலம்: Phyllanthus emblica). அந்த மரத்தின் பெயரையே புதிய இடத்திற்கும் பரமேஸ்வரா  வைத்ததாகச் சொல்லப் படுகிறது. (5. Beyond the Monsoon, Douglas Bullis)



இந்தக் காலக் கட்டத்தில் நிறைய சீன வணிகர்கள் மலாக்காவிற்கு வந்தனர். அவர்களின் வாணிக ஈடுபாடுகளும் அதிகரித்தன. பெருமிதம் அடைந்தார் பரமேஸ்வரா. அந்த வகையில் மலாக்காவில் புக்கிட் சீனா எனும் ஒரு குன்றுப் பகுதியைச் சீனர்களுக்கு ஒதுக்கிக் கொடுத்தார்.

கடல் கடந்து மலாக்காவில் வியாபாரம் செய்ய வணிகர்கள் வந்தனர். வாணிகம் அனைத்தும் பண்ட மாற்று வியாபாரமாக இருந்தது. வணிகப் பெருக்கத்தினால் மலாக்கா குறுகிய காலத்திலேயே மிகுந்த வளம் அடைந்தது. இந்த வளர்ச்சி சயாமியர்களைப் பெரிதும் கவர்ந்தது.

இந்தச் சமயத்தில் வட சுமத்திராவில் சமுத்திரா பாசாய் (Samudra Pasai) எனும் ஒரு சிற்றரசு வளர்ச்சி பெற்று இருந்தது. இது கடல் கரையோரமாக இருந்த ஒரு சிற்றரசு. சுமத்திரா எனும் சொல் சமுத்திரம் எனும் சமஸ்கிருதச் சொல்லில் இருந்து உருவானது. சுமத்திராவின் அசல் பெயர் சுமத்திரபூமி (Sumatrabhumi). 



மார்க்கோ போலோ எழுதிய மார்க்கோ போலோவின் பயணங்கள் எனும் நூலில் சுமத்திராவை சமாரா (Samara) என்றும்; சமார்ச்சா (Samarcha) என்றும் குறிப்பிட்டுள்ளார். (6. Malacca_Sultanate)

சுமத்திராவில் பாசாய் எனும் சிற்றரசு இருந்தது. அந்தச் சிற்றரசின் இளவரசியைத் தான் பரமேஸ்வரா 1409-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அந்த இளவரசியின் பெயர் மாலிக் உல் சாலே (Malik ul Salih).

திருமணத்திற்குப் பிறகு அவர் இஸ்லாமிய சமயத்தில் இணைந்ததாகச் சொல்லப் படுகிறது. தன் பெயரை இஸ்கந்தார் ஷா (styled himself) என்று மாற்றிக் கொண்டதாகவும் சொல்லப் படுகிறது. ‎

ஷா என்பது பாரசீகத்தில் பல்லவர்கள் பயன்படுத்திய அரசச் சொல் ஆகும். பாரசீகம் என்பது ஈரானைக் குறிக்கும். அப்போதும் சரி இப்போதும் சரி ஈரானிய அரசர்களின் பெயர்களுக்குப் பின்னால் பல்லவ (Pahlawa) எனும் சொல் வருவதைக் கவனித்து இருக்கலாம். இந்தச் சொல் பல்லவர் எனும் சொல்லில் இருந்து உருவானதாகும்.

ஆகவே பரமேஸ்வரா என்பவர் பல்லவர் அரச பாரம்பரியத்தைச் சார்ந்தவர் என்பதை நினைவு கூறுகிறேன். இதைப் பற்றி இன்னும் ஆய்வுகள் செய்து கொண்டு இருக்கிறேன். அந்த வகையில் பரமேஸ்வரா மதம் மாறவில்லை. உலகக் கலைக் களஞ்சியங்கள் உறுதி கூறுகின்றன. (7. The Travels of Marco Polo)

ஒன்று மட்டும் உண்மை. பரமேஸ்வரா தன் பெயரை ஷா என்று மாற்றிக் கொண்டார். உண்மை. ஆனால் வேறு மதத்திற்கு மதம் மாறவில்லை என்பது தான் உண்மை. அதற்கான சான்றுகள் உள்ளன. ஷா என்பது ஓர் அரசரைக் குறிக்கும் பாரசீகச் சொல்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன் எழுதி வரும் பரமேஸ்வரா ஆய்வு நூலில் இருந்து தொகுக்கப் பட்டது)

சான்றுகள்:
[#4] The Indianized States of South-East Asia:https://books.google.com.my/books?id=iDyJBFTdiwoC&redir_esc=y)
[#5]  http://archive.aramcoworld.com/issue/200104/beyond.the.monsoon.htm -  Beyond the Monsoon, Written by Douglas Bullis
[#6]  http://www.newworldencyclopedia.org/entry/Malacca_Sultanate
[#7]  The Travels of Marco Polo - Harmondsworth, Middlesex; New York: Penguin Books, Penguin Classics, 1958
[#9]  http://malaysiansmustknowthetruth.blogspot.my/2011/09/parameswara-is-certified-singaporean.html - Raja Secander Shah, and his son, and his son's son NEVER converted. It was actually his great-grandson Raja Kichil Besar, who converted.
[#10] https://zaidpub.com/2017/01/16/the-original-lineage-of-malacca-rulers-are-indian/ - THE ORIGINAL LINEAGE OF MALACCA RULERS ARE INDIAN
[#11] https://blog.limkitsiang.com/2011/01/20/malay-history-what%E2%80%99s-missing-from-the-textbooks/ - What’s missing from the textbooks
[#12] http://ktemoc.blogspot.my/2016/05/discarding-own-culture-and-history.html - Discarding own culture and history?  

Footnotes:
[#F1]  The 'Sejarah Melayu' does not mention a ruler called Parameswara between Pekerma Wira and Iskandar Shah. The only ruler mentioned is Seri Maharaja.

[#F2]  Succeeded as ruler of Singapura Temasek on the death of his father, ca 1399. Expelled from Temasek by the Batara of Majapahit working in collusion with the Bendahara, Sang Ranjuna Tapa, 1401.

[#F3]  Established a settlement and constructed his palace at Malacca (on St Paul's Hill) ca 1403, encouraging the Bugis to settle there with immigrants from Aru. Succeeded as ruler on the death of his father in late 1413, and installed as Sri Ratna Adivikrama di-Raja [Seri Rama Adikerma Raja]. He subsequently removed the capital there after his accession.

[#F4]  In 1409, Parameswara married Malik ul Salih, a princess of Pasai, adopted the Persian title Shah, and styled himself as Sultan Iskandar Shah although he remained a Hindu to his death. Although he did not convert to Islam, his marriage to the Muslim princess encouraged a number of his subjects to embrace Islam.

04 ஜனவரி 2018

சாவித்திரி பாய் புலே

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்

சாதியின் சங்கிலிகளை அறுத்து எறிந்தவர். வாழ்வே சேவை என வாழ்ந்த ஓர் அழகிய ஜீவன். அவரின் பிறந்த நாள் இன்று. அவரை நினைப்போம். வாழ்த்துவோம்.



சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule)  மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் எனும் சிற்றூரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். கல்வி வாய்ப்பு இல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்.

இவரின் கணவர் ஜோதிராவ் (Mahatma Jyotirao Govindrao Phule). ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவர்.

ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக்காகவும் சாவித்திரிபாய் அரும்பாடு பட்டவர். பெண் கல்விக்காக முதல் பள்ளியைப் பூனாவிற்கு அருகில் நிறுவியவர். 




அந்தக் கால வழக்கப்படி சாவித்திரிபாய் தன் 9-ஆம் வயதில் ஜோதிராவ் புலே (13 வயது) என்பவரை 1840-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். ஜோதிராவ் புலே தன் மனைவி சாவித்திரிபாயைச் சாதீய, பெண் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தில் களம் இறக்கினார்.

இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. ஒரு பிராமண விதவையின் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தனர். ஜோதிராவ் புலே தன் மனைவி சாவித்திரிபாய்க்குச் சொந்தமாகக் கல்வி போதித்தார். 


ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியைத் தாங்களே அவர்களின் பிள்ளைகளுக்குக் கற்றுத் தருவோம் என்று சொல்லி 1846-ஆம் ஆண்டில் ஒரு பள்ளியைத் தொடங்கினார்கள். அந்த வகையில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராகப் பெயர் பெற்றவர் சாவித்திரிபாய். 



பின்னர் 1848-ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார். மீண்டும் 1848-ஆம் ஆண்டு புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் தொடங்கினார். அதில் சாவித்திரிபாய் தலைமையாசிரியராகப் பணி செய்தார்.

சுமார் ஆறு மாதங்களுக்குப் பின் அப்பள்ளி மூடப்பட்டு வேறோர் இடத்தில் தொடங்கப் பட்டது. பழமைவாதிகளும் மேல்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர்.
 

அவர் பள்ளிக்கு நடந்து போகிற பொழுது எல்லாம் ஆதிக்கச் சாதியினர் அவர் மீது கற்களையும் சாணத்தையும் வீசிப் பற்பல தொல்லைகள் கொடுத்தனர்.

கணவர் ஜோதிராவிடம் இவர் அதைச் சொல்லிப் புலம்பினார். "அழுக்கு ஆடைகளை அணிந்து கொண்டு போ! அதன் பின் பள்ளிக்குப் போய் நல்ல சேலையை அணிந்து கொள்" என்று சொல்லித் தொடர்ந்து பயணிக்க ஊக்கம் அளித்தார்.

சாவித்திரிபாய் தினமும் பள்ளிக்குச் செல்லும் போது பழைய ஆடைகளை அணிந்து செல்வார். பள்ளிக்குச் சென்றதும் வேறோர் சேலையை அணிந்து கொள்வார். பல துன்பங்களுக்கு இடையில் கல்விப் பணியாற்றினார்.

தவித்த வாய்க்கு *தீண்டத் தகாதவர்* என்று சொல்லி ஆதிக்கச் சாதியினர் தண்ணீர் கொடுக்க மறுத்தனர்.  அந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்து தங்கள் வீட்டிலேயே எல்லா ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தண்ணீர் எடுக்க அனுமதித்தனர். 




பால்ய விதவை ஆன பெண்களின் தலையை மழித்து விடும் கொடிய நடைமுறை அப்போது அமலில் இருந்தது. அந்த மழிக்கும் பணியைச் செய்யும் மக்களை வைத்தே அதை நாங்கள் இனி செய்ய மாட்டோம் என அறிவிக்கச் செய்தார்.

விதவை மறுமணங்களைத் தொடர்ந்து நடத்திக் காட்டினார் சாவித்திரிபாய். இவர் ஒரு நல்ல கவிஞரும் கூட. மராத்தியத்தின் நவீன கவிதைப் போக்கு இவரில் இருந்தே தொடங்குகிறது. இயற்கை, சமூகம், வரலாறு, கல்வி என்று பல்வேறு தளங்களில் அவரின் கவிதைகள் பயணித்தன.

1852-ஆம் ஆண்டு இவர் 'மஹிளா சேவா மண்டல்' எனும் பெண்கள் சேவை மையத்தைத் தொடங்கினார். இந்த மையம் மனித உரிமைகள், சமூக அங்கீகாரங்களுக்காகப் போராடியது. பெண்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டது.


1876-1878-ஆம் ஆண்டுகளில் பஞ்ச காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளைப் போக்குவதற்குத் தம் கணவரோடு கடுமையாக உழைத்தார். மக்களின் துயரங்கள் தீர்வதற்கான பல்வேறு ஆலோசனைகளையும் முன்வைத்தார்.

பல மையங்களில் ஜாதி வேற்றுமை பாராட்டி ஒடுக்கப்பட்ட, மறுக்கப்பட்ட நிலையில் கூட  இருவரும் இலவச உணவுகளைப் பரிமாறினார்கள். பஞ்சத்தினால் அனாதைகளான 52 குழந்தைகளுக்கு உறைவிடப் பள்ளியைத்  தொடக்கினார்கள்.



மகாராஷ்ட்ராவை பிளேக்கு நோய் தாக்கிய பொழுது ஆங்கிலேய அரசு நோய்த் தொற்று பரவாமல் இருக்க கடுமையான பிளேக்குச் சட்டங்களைப் போட்டது. பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து மற்றவர்களைப் பிரித்து வைத்தது.

மருத்துவம் படித்து இராணுவத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இவரின் வளர்ப்பு மகன் யஸ்வந்த் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தார்.

அவரைக் கொண்டு சாவித்திரி பாய் ஊருக்கு வெளியே மருத்துவமனை ஒன்றைத் தொடங்கினார். அவரே அறுபத்தி ஆறு வயதிலும் பல பேரை தூக்கிக் கொண்டு வந்து அவர்களின் உயிர்களைக் காக்கப் போராடினார்.


பத்து வயது சிறுவன் பாண்டுரங் பாபாஜி என்பவனைத் தூக்கிக் கொண்டு வந்த பொழுது அவருக்கும் பிளேக்கு நோய் தொற்றிக் கொண்டது. சாவித்திரி பாய் மரணம் அடைந்தார். ஆனால் அந்தச் சிறுவன் பிழைத்துக் கொண்டான். அப்போது சாவித்திரி பாய்க்கு அவருக்கு வயது 66.

சாவித்திரிபாய் அவர்களின் 186-ஆவது ஆண்டு நிறைவைக் கூகுள் (Google) நிறுவனம் சிறப்பு செய்தது. 2017 ஜனவரி 3-ஆம் தேதி ”கூகுள் டூடுள்” (Google Doodle) கொண்டு உலகளாவிய நிலையில் அவரை அடையாளப் படுத்திச் சிறப்பித்தது.

மகாராஷ்டிரா அரசு சாவித்திரிபாய் பெயரில் ஒரு விருதினை ஏற்படுத்தியது. 2015-ஆம் ஆண்டில் புனே பல்கலைக்கழகத்தின் பெயர் சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகம் என மாற்றம் செய்யப் பட்டது. 10.03.1998-ஆம் தேதி இந்திய அஞ்சல் துறை சாவித்திரிபாய் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டது.

இவரின் பெயரில் இரு கவிதை நூல்கள் Kavya Phule (1934). மற்றொன்று Bavan Kashi Subodh Ratnakar (1982) வெளியிடப்பட்டு உள்ளன.

20 நவம்பர் 2017

பான் பான் இந்தியப் பேரரசு

மலாயாவின் வரலாறு பரமேஸ்வரா காலத்தில் தொடங்கி முகமட் ஷா காலத்தில் முடியவில்லை. சீனத்து இளவரசி ஹங் லீ போ காலத்தில் தொடங்கி மன்சூர் ஷா காலத்தில் முடியவில்லை. மலையூர் மலாயா காலத்தில் தொடங்கி மஜபாகித் காலத்திலும் முடியவில்லை. 



மாறாக மாமாங்கங்கள் பல தாண்டி மலாயா மைந்தர்களின் கதைகளில் போய் முடிகின்றது. அந்தக் கதைகளில் ஒன்றுதான் பான் பான் (Pan Pan) எனும் இந்தியப் பேரரசின் கதை. 

தென்கிழக்காசிய வரலாற்றில் ஏறக்குறைய 2000 ஆண்டுகள் காலத்திற்கு மலாயா இந்தியர்களின் வரலாறு ஆழமாய்த் தடம் பதித்து உள்ளது. அவர்களின் வரலாறுகளை மீட்டு எடுப்போம். எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு வரலாற்று விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். அதுவே நம்முடைய இனம் சார்ந்த நோக்கமாக இருக்க வேண்டும். 



கி.பி. 300-ஆம் ஆண்டுகளில் மலாயா, தாய்லாந்துப் பெருநிலங்களை ஆட்சி செய்த ஓர் இந்தியப் பேரரசின் கதை. இது ஒரு சினிமாக் கதை அல்ல. உண்மையாக நடந்த கதை. ஒரு வரலாற்றுக் கதை. ஒரு வாழ்வியல் கதை. தொடர்ந்து படியுங்கள்.

முன்பு காலத்தில் அதாவது கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 7-ஆம் நூற்றாண்டு வரை பான் பான் எனும் பேரரசு மலாயாவின் கிளாந்தான், திராங்கானு மாநிலங்களை ஆட்சி செய்த ஓர் இந்து அரசாகும். 


A brick terrace with floral votive on top

மலாயா தாய்லாந்து நாடுகளில் புத்த மதம் தோன்றுவதற்கு முன்பாக இந்து மதம் சார்ந்த இந்திய அரசுகளே தென்கிழக்காசியாவில் ஆழமாய்த் தடம் பதித்து ஆலாபனைகள் செய்து உள்ளன.

(சான்று: Dougald J. W. O'Reilly (2007). Early Civilizations of Southeast Asia. Rowman Altamira. ISBN 0-7591-0279-1.)

பான் பான் எனும் சொல்லில் இருந்து தான் பான் தான் நீ (Pan tan i); பட்டாணி (Pattani) எனும் பெயர்கள் தோன்றின. வரலாற்று ஆசிரியர்கள் ஆணித்தரமாகச் சொல்கின்றார்கள்.



கிளாந்தான், திராங்கானு மாநிலங்களைத் தவிர தாய்லாந்தில் இருக்கும் சூராட் தானி (Surat Thani), நாக்கோன் சி தாமராட் (Nakhon Si Thammarat) எனும் இரு மாநிலங்களையும் பான் பான் பேரரசு ஆட்சி செய்து இருக்கிறது.

வருடத்தைக் கவனியுங்கள். கி.பி. 300-ஆம் ஆண்டுகள். ஏறக்குறைய 1700 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. அதுவே மலாயாவில் ஓர் இந்திய அரசாங்கம் அரசாட்சி செய்து இருக்கும் ஒரு வரலாற்றுச் சாசனம். உங்களால் நம்ப முடிகிறதா. ஆனால் நம்பித் தான் ஆக வேண்டும். 



ஏன் தெரியுங்களா. வரலாறு பொய் சொல்லாது. தெரியும் தானே. அதுதான் விசயம்.

ஆக அந்த வரலாற்றில் இருந்து மறைந்து போன இந்தியர்களின் இரகசியங்களை மீட்டு எடுக்கும் போது சில உண்மைகள் கசக்கவே செய்யும். அதற்காக உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியுமா. சொல்லுங்கள். சரி. நம்ப விசயத்திற்கு வருவோம்.

இந்தப் பான் பான் அரசு தோன்றுவதற்கு முன்னதாகவே பேராக் மாநிலத்தில் புருவாஸ் பகுதியில் கங்கா நகரம் (Gangga Negara) எனும் இந்திய அரசு உருவாகி விட்டது. கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் கங்கா நகரம் உருவானது. அதையும் நினைவு படுத்துகிறேன்.

(சான்று: https://www.amazon.com/Ancient-Indian-History-Civilization-Sailendra/dp/8122411983 - Ancient Indian History and Civilization; Paperback – 1999; By Sailendra Nath Sen; Pg: 521)

கங்கா நகரத்திற்கு அடுத்து மலாயாவில் தோன்றிய மற்றோர் இந்துப் பேரரசு லங்காசுகம் (Langkasuka). இந்த லங்காசுகம் கெடா மாநிலத்தின் மேற்கு கரையில் தான் முதன்முதலில் தோற்றுவிக்கப் பட்டது. பின்னர் சன்னம் சன்னமாகத் தாய்லாந்தின் பட்டாணி மாநிலம் வரை பரந்து விரிந்து படர்ந்து போனது. 



அன்றைய பர்மாவில் இருந்து குடியேறிய மோன் (Mon) குடிமக்கள் தான் இலங்காசுகத்தைத் தோற்றுவித்தார்கள். முதலில் இந்துக்களாக இலங்காசுகத்திற்கு வந்த இந்த மோன் மக்கள் பின்னர் புத்த மதத்தைத் தழுவினர். இதுவும் கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் தொடங்கிய ஒரு வரலாற்றுப் படிவம்.

ஒரு செருகல். இந்துப் பேரரசு என்று தான் சொல்கிறேன். இந்தியப் பேரரசு என்று சொல்லவில்லை. ஏன் என்றால் பர்மாவில் இருந்து வந்த மோன் குடிமக்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்.

இந்துப் பேரரசு என்பது வேறு.
இந்தியப் பேரரசு என்பது வேறு. இந்தியர்ப் பேரரசு என்பது வேறு. மூன்று வெவ்வேறு வகையான ஆளுமைகள் உள்ளன.

இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் ஆட்சி செய்தால் அது இந்துப் பேரரசு. இந்தியக் கண்டத்தைச் சார்ந்தவர்கள் ஆட்சி செய்தால் அது இந்தியப் பேரரசு. இந்தியர் வம்சாவளியைச் சார்ந்தவர்கள் ஆட்சி செய்தால் அது இந்தியர்ப் பேரரசு.


The Bhairava of Wiang Sa

பர்மாவில் இருந்து வந்த மோன் இந்துக்கள் தான் பின்னர் காலத்தில் புத்த மதத்தைத் தழுவினார்கள். ஆகவே இலங்காசுகத்தைத் தோற்றுவித்தவர்கள்  மோன் இந்துக்கள் என்பதை நினைவில் கொள்வோம்.

இலங்காசுகத்தைச் சீனா நாட்டு வணிகர்கள் டுன்சுன் (Dunxun) என்று அழைத்து இருக்கிறார்கள். அந்தக் காலக் கட்டத்தில் சீனாவை லியாங் அரசப் பரம்பரையினர் (Liang Dynasty) ஆட்சி செய்தனர். 



கி.பி. 539-ஆம் ஆண்டு இலங்காசுக அரசாங்கம் ஒரு தூதுக் குழுவையும் சீனாவிற்கு அனுப்பி வைத்து இருக்கிறது. சீன வரலாற்று ஏடுகளில் சொல்லப்பட்டு இருக்கிறது. சரி.

அதற்கும் அடுத்து மூன்றாவதாக வந்தது தான் பான் பான் பேரரசு.

இந்தப் பான் பான் அரசிற்குப் பின்னர் நான்காவதாக வந்தது தாம்பிரலிங்கா (Tambralinga) பேரரசு. இந்தத் தாம்பிரலிங்கா பேரரசைப் பற்றி 09.08.2017 தமிழ் மலர் நாளிதழில் ஓர் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வலைப்பதிவிலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் முகவரி:


https://ksmuthukrishnan.blogspot.com/2018/03/blog-post.html

படித்துப் பாருங்கள்.


The newly discovered linga of the Panpan kingdom

பான் பான் பேரரசின் தலைநகரம் சையா (Chaiya). இந்த நகரம் இன்னும் தாய்லாந்தில் இருக்கிறது. கிரா குறுக்குநிலம் (Kra Isthmus) என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். தாய்லாந்தையும் மலாயாவையும் பிரிக்கும் ஒரு குறுக்குநிலம்.

அங்குதான் கிழக்குக் கரை பக்கமாக இந்தச் சையா நகரம் இருக்கிறது. இந்த நகரம் தான் முன்பு காலத்தில் பான் பான் பேரரசின் தலைநகரமாகவும் விளங்கி இருக்கிறது.

(சான்று: Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula. Singapore: Editions Didier Millet. pp. 130–131. ISBN 981-4155-67-5.)



1920-ஆம் ஆண்டில் இந்த நகரத்தில் அகழாய்வு செய்தார்கள். மண்ணுக்குள் பல மீட்டர்கள் ஆழத்தில் கட்டடச் சிதைவுகள்; சிலைச் சிதைவுகள், கரும்பாறைச் சிதைவுகள்; சிலை பீடங்கள்; கோயில் கருவறைத் தூண்கள் கிடைத்தன.

அந்தச் சிதைவுகள் மூலமாகத் தான் பான் பான் பேரரசு எனும் ஓர் அரசு இருந்ததற்கான சான்றுகளும் கிடைத்தன. அப்படி ஓர் இந்திய அரசு இருந்தது எனும் செய்தியும் வெளியுலகத்திற்குத் தெரிய வந்தது.

மலாயா வரலாற்றை அலசி ஆராய்ந்து பார்க்கும் போது, மண்ணின் மைந்தர்கள் என்று சொல்லுக்கு மிகச் சரியானவர்கள் யார் யார் என்பது தெளிவாகத் தெரிய வரும். 



அந்த வரலாற்றுப் பார்வையில் மலாயாவுக்கு வந்த இந்தியர்களின் அடிச்சுவடிகளும் அழகாய்த் தெரிகின்றன. இது உண்மையிலும் உண்மை. இதை யாராலும் மறுக்க முடியாது.

தாய்லாந்தில் இருக்கும் நாக்கோன் சி தாமராட் மாவட்டத்தில் சிச்சோன் (Sichon), தா சாலா (Tha Sala) எனும் புறநகர்ப் பகுதிகளில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட தொல் பொருள் சிதைவு இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அதாவது பான் பான் காலத்துச் சிதைவுகள்.

பெரும்பாலானவை இந்துச் சரணாலயங்கள். இந்தச் சரணாலயங்களில் காணப்பட்ட சிலைகள் அனைத்துமே சிவபெருமான் சிலைகளின் சிதைவுகள் ஆகும்.

(சான்று: https://southeastasiankingdoms.wordpress.com/tag/panpan-kingdom/ - Vestiges of former Hindu sanctuaries, mostly Shivaite, built from the fifth to the seventh centuries.)

கி.பி. 424; கி.பி. 453-ஆம் ஆண்டுகளில் பான் பான் அரசு சீனாவிற்குத் தூதுக் குழுக்களை அனுப்பி வைத்து இருக்கிறது. அப்போது பான் பான் அரசை கவுந்தய்யா II (Kaundinya II) எனும் இந்து அரசர் ஆட்சி செய்து இருக்கிறார். 


The modest brick remains of Wat Mokhlan Archaeological Site

இந்த அரசர் தான் பூனான் சாம்ராஜ்யத்தில் இந்து மதத்தைப் பரப்புவதற்கு முயற்சிகள் செய்து இருக்கிறார். பூனான் சாம்ராஜ்யம் என்பது கம்போடியாவைச் சார்ந்த ஒரு பேரரசாகும்.

(சான்று: Hall, D.G.E. (1981). A History of South-East Asia, Fourth Edition. Hong Kong: Macmillan Education Ltd. p. 38. ISBN 0-333-24163-0.)

சீனாவிற்குத் தூதுக் குழுக்களை அனுப்பிய பிறகு பான் பான் அரசு திறை செலுத்தத் தொடங்கியது. திறை என்றால் கப்பம். ஒரு சிறிய நாடு ஒரு பெரிய நாட்டின் பாதுகாப்பு கேட்டு அன்பளிப்பு செய்வதே திறை அல்லது கப்பம் ஆகும்.

கி.பி. 529; கி.பி. 533; கி.பி. 534; கி.பி. 535; கி.பி. 571-ஆம் ஆண்டுகளில் திறை செலுத்தப் பட்டது. அந்தச் சமயத்தில் லியாங் (Liang dynasty) எனும் அரசப் பரம்பரையினர் சீனாவை ஆட்சி செய்து வந்தனர்.

பின்னர் 50 ஆண்டுகள் கழித்து தாங் அரசப் பரம்பரையினர் (Tang dynasty) ஆட்சிக்கு வந்தனர். அவர்களுக்கும் பான் பான் அரசு கப்பம் கட்டி வந்து இருக்கிறது.

Albert E. Dien, Six Dynasties Civilization. Yale University Press, 2007 ISBN 0-300-07404-2. Partial text on Google Books. P. 190.

ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கும் மேலாக பான் பான் அரசு நல்லபடியாகப் போய்க் கொண்டு இருந்தது. இருந்தாலும் பான் பான் அரசின் செல்வச் செழிப்பு கீழே இருந்த ஸ்ரீ விஜய பேரரசின் கண்களை ரொம்ப நாட்களாக உறுத்தி வந்தது.

அப்புறம் என்ன. ஒரு நல்ல நாள் பார்த்து பான் பான் அரசை 
ஸ்ரீ விஜய பேரரசு கொத்திக் கொண்டு போய் விட்டது. அப்போது ஸ்ரீ விஜய பேரரசின் அரசராக தர்மசேது (Dharmasetu) என்பவர் இருந்தார்.

இது நடந்தது கி.பி. 775-ஆம் ஆண்டில். அதோடு பான் பான் அரசாட்சியும் ஒரு முடிவிற்கு வந்தது. இப்படித் தான் இந்துக்களுக்கும் இந்தியர்களுக்கும் சொந்தமான ஏராளமான நில புலனங்களும் சொத்துப் பத்துகளும் காலாவதியாகிப் போயின. எல்லாம் அடிபிடி கோளாற்றினால் ஏற்பட்ட தவிடு பொடிகள்.

இப்போது இங்கே மட்டும் என்னவாம். நமக்குள் அடித்துக் கொள்ளவில்லையா. எல்லாம் தொட்டால் சிணுங்கி கேஸ் தான். இப்போது நடக்கிற மாதிரி தான் அப்போதும் நடந்து இருக்கிறது. இதில் என்ன பெரிய பேச்சு வேண்டிக் கிடக்கிறது. இந்தியர்களுக்கே சொந்தமான பரம்பரை புத்தி அவர்களை விட்டுப் போய் விடுமா என்ன.

அந்தக் காலத்தில் ஒட்டு மொத்த தென்கிழக்கு ஆசியாவையே ஆட்சி செய்த இந்தியர்கள் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போய் இருந்தால் இப்போதைய சந்ததியினர் அஞ்சுக்கும் பத்தும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது. என்ன செய்வது. வாங்கி வந்த வரம்.

இன்னும் ஒரு முக்கியமான விசயம். வரலாற்று உண்மைகளைத் தேடிப் பிடித்து வரிந்து கட்டி எழுதுவதால் நம் மீது வழக்குப் பிணக்குகள் வரலாம். சொல்ல முடியாது. உண்மையைத் தானே எழுதுகிறோம். அதுவும் வலுவான சான்றுகளுடன் எழுதுகிறோம். சரிங்களா.

மலாயா வரலாற்றில் மறக்க முடியாத மைந்தர்களின் பட்டியலில் மலாயா இந்தியர்கள் முதல் இடத்தில் இருந்து இருக்கிறார்கள். இந்த உண்மையைச் சொல்ல வேண்டி இருக்கிறது. மலாயா இந்தியர்கள் என்று தான் சொல்கிறேன். மலேசிய இந்தியர்கள் என்று சொல்லவில்லை.

கடைசியாக ஒரு விசயம். இந்தோனேசியாவிலும் சரி; தாய்லாந்திலும் சரி; தடம் பதித்துச் சென்ற இந்தியர்களின் வரலாறுகளை அந்த நாட்டு மக்களே தோண்டி எடுத்துப் போற்றிப் புகழ்கிறார்கள். உச்சி முகர்ந்து பார்க்கிறார்கள். தலைப்பா கட்டி தண்டோரா போடுகிறார்கள்

சில இடங்களில் அப்படியா. இல்லையே. வேதனையாக இருக்கிறது. புதைந்து கிடக்கும் இந்திய வரலாறுகளைத் தோண்டி ஒன்றும் எடுக்க வேண்டாம். மண்ணுக்குள் அப்படியே கிடந்துவிட்டுப் போகட்டும். ஆனால் கண்ணுக்குத் தெரிகிற இந்தியர்களின் தடய விசயங்களை மட்டும் அழிக்காமல் பழிக்காமல் அப்படியே விட்டால் போதுங்க. பெரிய புண்ணியம்.

(-மலாக்கா முத்துக்கிருஷ்ணன்-)

14 நவம்பர் 2017

சிவப்பு சேலைகளும் முரட்டுக் காளைகளும்

சில வருடங்களுக்கு முன்னால் நடந்தது. மயிர் கூச்செறியச் செய்யும் ஒரு நிகழ்ச்சி. அவள் பெயர் சோமியா. நடமாடும் நாட்டியச் சிலை. ஆள் கொஞ்சம் சிவப்பு. அவளுக்குப் பிடித்தக் கலரும் சிவப்பு. அவள் விரும்பிப் பார்ப்பதும் சிவப்பு. விரும்பிப் பழகுவது சிவப்பு. எதிர்ப்பார்ப்பதும் சிவப்பு. கனவு காண்பதும் சிவப்பு. 


சும்மா சொல்லக்கூடாது. கறுப்பிலே பிறந்து கறுப்பிலே வளர்ந்தவள். ஆனால் என்ன. சிவப்பிலே மிதந்து சிவப்பிலே பறக்கிற மாதிரி மயக்க நிலை. இவள் மட்டுமா. இன்னும் எத்தனையோ சிவப்புக் கலர் மேனா மினுக்கிகள் இப்போதும் இருக்கவே செய்கிறார்கள்.

பிரிக்பீட்ஸ் பக்கம் போய்ப் பாருங்கள். தெரியும். அப்படியே போக ஆசைப் பட்டால் தயவு செய்து கையோடு ஒரு பிலாஸ்டிக் பையையும் எடுத்துச் செல்லுங்கள். 



ஒரு நாள் சோமியா சிவப்பு சேலையைக் கட்டிக் கொண்டு தோட்டத்துச் சிவப்பு செம்மண் சாலையில் நடந்து போனாள்.

திடீரென்று எங்கிருந்தோ ஒரு முரட்டுக் காளை. கயிறை அவிழ்த்துக் கொண்டு நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து வருகிறது. அந்தக் காளை சோமியாவைப் பார்த்து பாய்ந்து வருகிறதா இல்லை அவள் கட்டி இருக்கிற சிவப்பு சேலையைப் பார்த்துப் பாய்ந்து பாய்கிறதா. தெரியவில்லை.

பாவம் சோமியா. அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறாள். சிவப்பு சேலை காற்றில் பறக்கிறது. காளையும் பறக்கிறது. சோமியா ஓட, காளை விரட்ட, சோமியா கத்த, காளை கர்ஜிக்க; அங்கே ஆடு புலி ஆட்டம். தேவர் பிலிம்ஸ் தோற்றது போங்கள்.



அந்த நேரம் பார்த்து ஓர் அதிசயம். திடீரென்று ஒரு வாட்டம் சாட்டமான இளைஞன் எங்கேயோ இருந்து மின்னலைக் கிழித்துக் கொண்டு வந்தான். சமூகத்தின் கறைகளைத் துகில் உரிக்கின்ற கர்ம வீரன் கடையப்பா. அவன் எப்படி அங்கே வந்தான்?

அந்தக் கதை இதுவரை யாருக்கும் தெரியாது. அந்த ரகசியம் சிதம்பரத்தில் இருக்கும் நடராஜாவிற்குக் கூட தெரியாதாம். தொடர்ந்து படியுங்கள்.

காளையின் வேகம்; அதன் கால்களின் அழுத்தம்; இரண்டும் கலந்ததால் மண்ணில் தீச்சுவாலைகள். காற்று மண்டலத்தில் அக்கினிப் புகைச்சல். சுற்று முற்றும் சுனாமி பேரலைகளின் இரைச்சல்.



மதம் பிடித்து விரட்டும் காளையின் கழுத்தில் தொங்கிய கயிற்றைத் தன் இடது காலால் ஒரே அழுத்தாக அழுத்துகிறான் கடையப்பா. அவ்வளவுதான். காளை கப்சிப். தலைகுனிந்து தடுமாறிப் போய் நிற்கிறது.

அப்புறம் என்ன. நாலு கால்களைத் தேய்த்துக் கொண்ட முரட்டுக் காளை தன்னுடைய முதுகை முருங்கை மரத்தில் தேய்த்துக் கொள்கிறது.  இரண்டு காலைத்  தேய்த்துக் கொண்ட மனிதக் காளை பெண்ணிடம் முறுக்கிக் கொள்கிறது. 

இது ஒரு தமிழ்ப் படத்தில் வந்த காட்சி மாதிரி இருக்கலாம். சத்தியமாக எனக்கு எதுவும் தெரியாது. 1960-களில் மலாக்கா காடிங் தோட்டத்தில் நடந்த நிகழ்ச்சியாக இருக்கலாம். அல்லது ஒரு திரைக் காட்சியாகவும் இருக்கலாம். எப்படி வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம்.



ஆனால் காலா காலத்திற்கும் இயற்கையின் நியதிகளை மிஞ்சிப் போகும் சில அதிசயமான படக் காட்சிகளின் பட்டியலில் அதையும் சேர்க்கலாம். சரிங்களா.

அது ஒரு சினிமாக் கதை என்றே வைத்துக் கொள்வோம்.. சினிமா ஒரு தொழில். அவர்கள் கதை சொல்கிறார்கள். நாமும் பதினெட்டு பட்டியைக் கூட்டிக் கொண்டு போய் பார்க்கிறோம், கேட்கிறோம். அவ்வளவுதான். அதில் உள்ள நல்லவற்றை ஏற்றுக் கொள்வோம். கெட்டவற்றை விட்டுத் தள்ளுவோம். இப்போதைக்கு கேள்வி இதுதான்.

கேள்வி: சிவப்புச் சேலை கட்டிய பெண்களை மாடுகளுக்கு ஏன் பிடிப்பது இல்லை?

பதில்: கண் பார்வை இல்லாத ஒருவருக்கு அமாவாசையும் தெரியாது. பௌர்ணமியும் தெரியாது. அந்த மாதிரி மாடுகளுக்கு நீல நிறம் தெரியும். பச்சை நிறம் தெரியும். மஞ்சள் நிறம் தெரியும். ஆனால், சிவப்பு நிறம் மட்டும் தெரியவே தெரியாது. 



இதைப் பற்றி பலர் பல கோணங்களில் பார்த்து விட்டனர். பல கருத்துகளைச் சொல்லியும் விட்டனர். ஆனால் இந்த முறை அறிவியல் கோணத்தில் போய் அது என்ன சொல்கிறது என்று சற்று ஆழமாகப் பார்ப்போம்.   

சிவப்பு சேலை அல்லது சிவப்பு பாவாடைகளைப் பார்த்து காளை மாடுகள் முட்ட வரும் என்பது எல்லாம் காலாவதியான நம்பிக்கை. மூட நம்பிக்கை என்று சொல்ல மாட்டேன். முற்றிலும் தவறான நம்பிக்கை என்று சொல்வதே சரி.

விலங்கினத்தில் மாடுகள் இனம் வித்தியாசமானது. மாற்றுப் பார்வை கொண்ட ஒரு விலங்கினம். மாடுகள் சிவப்பு, பச்சை நிறக்குருடு இனத்தைச் சேர்ந்தவை.  ஆங்கிலத்தில் Red-Green Color Blindness என்று சொல்வார்கள்.

அதாவது மாடுகளுக்கு சிவப்பு நிறமும் பச்சை நிறமும் சுத்தமாகத் தெரியவே தெரியாது. அவை பார்க்கும் எல்லாமே நீலம், மஞ்சள், சாம்பல் நிறத்தில் தான் தெரியும். அதனால் மாடுகளை Dichromacy எனும் உயிரியல் பிரிவில் சேர்த்து இருக்கிறார்கள். 



இன்னும் விளக்கமாகச் சொல்கிறேன். மாடுகளின் கண்களில் இருக்கும் விழித் திரையில்  சிவப்பு நிறமிகள் (retinal red pigment) இல்லை. சிவப்பு நிறமிகள் இல்லாததால் எந்த ஒரு சிவப்பு பொருளைப் பார்த்தாலும் அதற்குச் சாம்பல் கலந்த பச்சையாகத் தான் தெரியும். மறுபடியும் சொல்கிறேன். மாடுகளுக்கு சிவப்பு நிறம் தெரியவே தெரியாது. இது உயிரியல் அறிஞர்கள் கண்டுபிடித்த உண்மை.

ஆகவே மாடுகளை நிறக்குருடு இனத்தின் Protanopia அல்லது Deuteranopia எனும் பிரிவில் சேர்த்து இருக்கிறார்கள். சிவப்பு நிறத்திற்குப் பதிலாக பச்சை நிறம் தெரிவதால் மாடுகளை மேற்சொன்ன பிரிவில் சேர்த்து இருக்கிறார்கள். 

சில விலங்குகளுக்கு நீல நிறத்திற்குப் பதிலாக மஞ்சள் நிறம் மட்டுமே தெரியும். அவற்றை Dichromacy நிறக்குருடு இனத்தின் Tritanopia பிரிவில் இணைத்து இருக்கிறார்கள். 

  
Image result for color blindness

மனிதர்களிலும் சிவப்புக் குருடு, நீல நிறக் குருடு உள்ளவர்கள் இருக்கின்றனர். அவர்களில் சிலருக்கு போக்குவரத்து விளக்கில் உள்ள சிவப்பு நிறம் தெரியாது. சிவப்பு நிறம் மஞ்சளாகத் தான் தெரியும். சிலருக்குச் சாம்பலாகத் தெரியும். இது ஒரு வகையான பரம்பரை நோய்.

ஒரு குழந்தை ஆணாகப் பிறப்பதற்கும் அல்லது பெண்ணாகப் பிறப்பதற்கும் உள்ள மூலக்கூறு ஒரு தந்தையிடம் தான் இருக்கிறது. X - Chromosome, Y - Chromosome  எனும் X – Y நிறமிகள்.

இந்த நிறமிகளும் ஒரு தந்தையிடம் மட்டுமே இருக்கின்றன. தாயாரிடம் இல்லை. X நிறமி என்பது ஓர் ஆண் குழந்தையை உருவாக்குகிறது. Y நிறமி என்பது ஒரு பெண் குழந்தையை உருவாக்குகிறது.

தாயிடம் இருப்பவை இரண்டுமே X – X நிறமிகள். Y நிறமி என்ற எதுவும் இல்லை.

இதில் தந்தையின் X நிறமியும் தாயாரின்  X நிறமியும் சேரும் கட்டத்தில் தான் பிறக்கும் குழந்தைகளுக்கு நிறக் குருடு அல்லது நிறமாலை ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. 

Image result for color blindness

இந்த நிறக் குருடு எப்படி ஏற்படுகிறது என்பது தெரியும். ஆனால் ஏன் ஏற்படுகிறது என்பது மட்டும் தெரியவில்லை. புரியாத புதிர். இந்த நிறக் குருடு மனிதர்களில் பத்து பேரில் ஒருவருக்கு ஏற்படுகிறது.

ஆனால் விலங்குகளுக்கு அப்படி அல்ல. விலங்கினம் தோன்றிய காலக் கட்டத்தில் இருந்தே நிறக் குருட்டுத் தன்மை இருந்து வருகிறது. மாடுகளுக்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த சிவப்பு நிறக் குருட்டுத் தன்மை இருக்கிறது.

ஆகவே சிவப்பு சேலை கட்டிய பெண்ணை மாடு முட்ட வருகிறது என்பது எல்லாம் ஒரு தவறான நம்பிக்கை.

சேலையின் அசைவுகளைப் பார்த்து தான் மாடு மிரள்கிறது. சேலையினால் தன் உயிருக்கு ஆபத்து வரும் என நினைத்து தன்னைத் தற்காத்துக் கொள்ள மாடு முட்ட வருகிறது. அவ்வளவுதான். 



மனதில் பட்டதைச் சொல்கிறேன். மன்னிக்கவும். இந்தச் சேலைகளினால் ஆடு மாடுகளுக்குப் பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. மனித இனத்தில் மட்டுமே இந்தச் சேலைப் பிரச்சனை. மனித இனத்தைச் சேர்ந்த ஆண்களுக்குத் தான் இந்த அடிதடி, வெட்டுக்குத்து என்று ஆயிரம் பிரச்சனைகள்.

மனிதனைவிட ஒரு சில பறவைகளுக்கும் தேனீக்களுக்கும் கண் பார்வை மிகத் தெளிவாக இருக்கும். மனிதக் கண்களுக்கு புலப்படாத Ultra Violet Rays எனும் புற ஊதா கதிர்களையும் அவற்றால் பார்க்க முடியும்.

நாய்கள், பூனைகள், எலிகள், முயல்கள் போன்ற பிராணிகளுக்கு கண் பார்வை மிகவும் குறைவு. நிறக் குருட்டுப் பிராணிகள். அவற்றுக்கு நீலம், மஞ்சள், சாம்பல் நிறங்கள் மட்டுமே தெரியும். அந்த நிறங்களை மட்டுமே கிரகிக்க முடியும்.

இதில் மனித இனத்திற்கு ஸ்பெஷல் அமைப்பு. அடிப்படை நிறங்களான நீலம், பச்சை, சிவப்பு மூன்று நிறங்களைக் கிரகிக்கும் தன்மை கொண்டவன். ஆகவே தான் மனிதனால் அனைத்து நிறங்களையும் பார்க்க முடிகிறது.


மனிதக் கண்களால் பத்து இலட்சம் நிறங்களைப் பார்க்க முடியும். சில வகை வண்ணத்துப் பூச்சிகள், தேனீக்கள் போன்றவை நூறு இலட்சம் நிறங்களைக்கூட பார்க்க முடியுமாம்.  
 

சிவப்பு நிறத் துணியை அல்லது சேலையை காளை மாட்டிற்கு முன் காட்டினால் அதற்கு அது கருமையாகவே தெரியும். அது கூட கடுமையான கறுப்பு நிறமாக தெரியாது. ஆக காளை மாடுகள் நீலம், பச்சை இரண்டு நிறங்களை மட்டுமே கிரகித்து உணரும் சக்தி கொண்டவை. சிவப்பு நிறத்திற்கு ‘சான்ஸே இல்லை’.

இனியும் யாராவது இந்த ’காளை மாடு சிவப்பு சேலை’ விவகாரத்தில் தர்க்க வாதம் செய்தால் மேலே சொன்ன அறிவியல் உண்மைகளைச் சொல்லுங்கள். அதையும் அவர்கள் நம்பாமல் எதிர்வாதம் செய்தால் கவலைப்பட வேண்டாம். 

அடுத்த பிறப்பில் ஒரு பூனையாக, ஓர் எலியாக, ஏன் ஒரு காளை மாடாக பிறப்பதற்கு இப்போதே டிக்கட் வாங்கி விட்டார்; எஞ்சிய காலத்திற்கு இங்கேயே ஒத்திகை நடத்துகிறார் என்று நினைத்துச் சமாதானம் அடையுங்கள்.

அந்த மாதிரியான மனிதர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்கள். ஏன் என்றால் எங்கேயோ போகிற சிவப்பு சேலையைப் பார்த்து திசை மாறி உங்கள் மீதே பாய வரலாம். எதற்கும் கடையப்பாவின் டெலிபோன் நம்பரை ரெடியாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்!